சோப்புப் பொருட்கள் அன்றாடம் பயன்படுபவை. தூள் அல்லது திரவம் என எதையும் அடைத்து விற்க பிளாஸ்டிக்கே அதிகம் பயன்படுகிறது. இதனால், நகரத்து குப்பை மேடுகளில் 'டிடர்ஜென்ட்' சார்ந்த பிளாஸ்டிக்குகள் அதிகம் குவிகின்றன.
இதை தவிர்க்க, 'ட்ரூ எர்த்' என்ற நிறுவனம் 'எகோ ஸ்ட்ரிப்' என்ற அட்டையை உருவாக்கியுள்ளது. அடர்த்தியான சோப்புப் பொருட்களால் ஆனது இந்த அட்டை. இதை துவைக்கும் இயந்திரத்தில் போட்டுவிட்டால், சோப்புத் தூள் அல்லது திரவம் போலவே துணிகளை வெளுத்து விடுகிறது. ஆனா, இந்த அட்டையில் எந்தவித பிளாஸ்டிக் பயன்பாடும் இல்லை. தவிர, இந்த அட்டைகள் வைக்கப்பட்டுள்ள பெட்டியும் காகித அட்டையால் ஆனது.
பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கரண்டி என்று சோப்புத்தூள் மற்றும் திரவத்திற்கு தேவையான எதுவும் எகோ ஸ்ட்ரிப் சலவை அட்டைக்குத் தேவையில்லை. இது இலகுவாக இருப்பதால், இதை சுமக்கும் வாகனங்களால் வெளியிடப்படும் புகை மாசு 94 சதவீதம் குறையும்.
மேலும், உலகெங்கும் ட்ரூ எர்த்தின் கண்டுபிடிப்பை ஒரு ஆண்டு சலவைக்குப் பயன்படுத்தினால், கிடைக்கும் சுற்றுச்சூழல் பயன் மிக அதிகம். அதாவது, ஒரு பில்லியன் பிளாஸ்டிக் பாட்டில்கள் புழக்கத்திற்கு வருவதை தவிர்க்கலாம். தவிர, ஒரு நாள் உலகம் முழுவதும் 2.7 கோடி கார்களை சாலையிலிருந்து அகற்றினால் மீதமாகும் அளவுக்கு கார்பன் உமிழ்வை தவிர்க்க முடியும்.













