- தொழில்நுட்பம்
- Read Time: 1 min
- படிப்புகள்: 642
இணையத்தில் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் செயலி எது தெரியுமா? ஸ்மார்ட்போனை அரட்டை அரங்கமாக்கி இருக்கும் கிளப் ஹவுஸ் முன்னணி செயலிகள் ஒன்றாக உருவெடுத்திருந்தாலும், அதற்கு போட்டியாக பாப்பரஸி செயலி பற்றிதான் இணையம் இப்போது பேசிக்கொண்டிருக்கிறது.
கிளப் ஹவுசுக்கு போட்டி என்றதும், பாப்பரஸியை இன்னொரு ஆடியோ செயலி என நினைத்துவிட வேண்டாம். இது புகைப்படம் எடுத்து பகிர்வதற்கான செயலி. அந்த வகையில், இது இன்ஸ்டாகிராமுக்கு போட்டியாக முளைத்திருக்கிறது என்றாலும், இதன் புதுமையான அம்சத்தால் பலரையும் பரபரப்பாக பேச வைத்திருக்கிறது.
பாப்பரஸி செயலியில் என்ன புதுமை என்றால், இன்ஸ்டாகிராம் தன்மைக்கும், செல்ஃபி மோகத்திற்கும் எதிரானதாக அமைந்திருப்பது தான்.
பாப்பரஸி செயலியில், பயனாளிகள் யாரும் தங்களை சுய படம் எடுத்து பகிர்ந்து கொள்ள முடியாது. அதற்கு மாறாக, மற்றவர்களை படம் எடுத்து தான் பகிர முடியும்.
பிரபலங்களை விடாமல் பின் தொடர்ந்து வளைத்து வளைத்து படமெடுக்கும் பழக்கம் பாப்பரஸி என குறிப்பிடப்படுவதை அறிந்திருக்கலாம். இதே தன்மையை புகைப்பட பகிர்விற்கு கொண்டு வந்திருக்கிறது பாப்பரஸி செயலி.
உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் தான் பாப்பரஸி, அவர்கள் தான் உங்களுக்கு பாப்பரஸி என்கிறது இந்த செயலி.
பொதுவாழ்க்கையில் பிரபலங்கள் எதிர்கொள்ளும் வில்லங்க அம்சம் இல்லாமல், பாப்பரஸி தன்மையை புகைப்படம் மூலம் நட்பு வளர்த்துக்கொள்வதற்கான அம்சத்தோடு இந்த செயலி அமைந்திருக்கிறது.
செல்ஃபி மோகத்தில் இருந்து விடுபடவும், எப்போதும் நன்றாக தோற்றம் தர வேண்டும் எனும் அழுத்தத்தில் இருந்து விடுபடவும் உதவுவதற்காக உருவாக்கப்பட்ட செயலி என இதன் அறிமுக பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக ஐபோன்களில் செயல்படும் வகையில் அறிமுகம் ஆகியுள்ள பாப்பரஸி செயலியில், பயனாளிகள் தங்களை படம் எடுக்கவும் முடியாது. தங்களுக்கான அறிமுக பக்கத்தையும் உருவாக்கி கொள்ள முடியாது. இரண்டையும் அவர்களின் நண்பர்கள் தான் செய்ய முடியும்.
இதில் உறுப்பினராக இணைபவர்கள், தங்கள் நண்பர்களை தான் படம் எடுத்து வெளியிட முடியும். இந்த படங்கள் மூலம் நண்பர்களின் அறிமுக பக்கம் உருவாக்கப்படும். இதே போல நண்பர்கள் படமெடுத்து பகிரும் போது, உங்களுக்கான அறிமுக பக்கம் உருவாகும்.
அறிமுக பக்கத்தில், நீங்கள் எடுத்த படங்கள் மற்றும் உங்களை நண்பர்கள் எடுத்த படங்கள் என இரண்டு விதமாக படங்களை பார்க்கலாம். நண்பர்களை பின் தொடரும் வசதியும் இருக்கிறது.
நண்பர்கள் தான் உங்களை படமெடுக்க முடியும் என்றாலும், வெளியாகும் படங்களை பயனாளிகள் கட்டுப்படுத்தலாம். தங்கள் பக்கத்தில் எந்த படம் இடம்பெறலாம் என தீர்மானிப்பதோடு, அந்த படங்கள் பொது பார்வைக்கானதா அல்லது தனிப்பார்வைக்கு மட்டுமானதா என்றும் தீர்மானித்துக்கொள்ளலாம்.
மேலும், இதில் பகிரும் படங்களை அப்படியே தான் வெளியிட முடியும். பில்டர் வசதி, திருத்தி மேம்படுத்தும் அம்சங்கள் எல்லாம் கிடையாது. எனவே, இயல்பாக எடுக்கப்பட்ட படங்களை பகிர்ந்து கொள்ளலாம். இப்படி நண்பர்களை படமெடுப்பதன் மூலம் அவர்களோடு இணைந்திருக்கும் உணர்வையும் பெறலாம் என்கிறது பாப்பரஸி செயலி.
முன்னோட்டமாக பரிசோதிக்கப்பட்ட முழு வீச்சில் அறிமுகம் ஆகியுள்ள இந்த செயலி, செல்ஃபிக்கு எதிரான அம்சம் மற்றும் நண்பர்களே படம் எடுத்து பகிர முடியும் எனும் தன்மையால் பயனாளிகளை கவர்ந்திழுத்திருக்கிறது.
புகைப்பட செயலிகள் பிரிவில் அடுத்த அலையாக அமையுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால், சமூக ஊடக மோகத்தை லேசாக அசைத்துப்பார்க்கும் வகையில் அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.
ஐபோன் பிரியர்கள் முயன்று பார்க்கலாம். ஆண்ட்ராய்டு பிரியர்கள் காத்திருக்கலாம்.
கடலில் மிதக்கும் காற்று மின்னாலைத் துறையில் போட்டிகள் வலுக்கின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து போன்றவை தங்கள் கடற்கரையிலிருந்து சில காத துாரத்தில் பெரிய காற்றாலைகளை நிறுவி, 'பசுமை' மின் உற்பத்தியை அதிகரித்து வருகின்றன.
நார்வேயின் 'விண்ட் கேட்ச்சர் சிஸ்டம்ஸ்' ஒரு புதுமையான கடல் மிதவைக் காற்றாலையை அறிமுகப்படுத்துகிறது. மூன்று அல்லது நான்கு விசிறிகளைக் கொண்ட காற்றாலைக்குப் பதிலாக, விண்ட் கேட்ச்சரின் கண்டுபிடிப்பு 117 சிறிய விசிறிகளைக் கொண்டுள்ளது. கடலில் ஒரே இடத்தில் மிதக்கும் இந்த அமைப்பின் உயரம் 1000 அடி.உலகின் மிகப் பெரிய காற்றுமின் மிதவை ஆலையைவிட, ஆண்டுக்கு ஐந்து மடங்கு அதிக மின் உற்பத்தியை விண்ட் கேட்ச்சர் அமைப்பால் தரமுடியும். அதாவது 80 ஆயிரம் ஐரோப்பிய வீடுகளின் மின்சாரத் தேவையை, ஒரே ஒரு விண்ட் கேட்ச்சர் அமைப்பு நிறைவேற்றிவிடும்.
வழக்கமான காற்றாலையின் ஒரு விசிறி அல்லது மின் ஜெனரேட்டர் பழுதானாலும் அதன் மொத்த செயல்பாடும் நின்றுவிடும். ஆனால், விண்ட் கேட்ச்சரின் 117 சிறு விசிறிகளில் சிலது பழுதானாலும், மற்றவை தொடர்ந்து மின்சார உற்பத்தியை தொடரும். தவிர விண்ட் கேட்ச்சரின் பராமரிப்பும் எளியது.எனவே நார்வேயின் கண்டுபிடிப்பு விரைவில் ஹிட் ஆக வாய்ப்பு உள்ளது.
சமூக ஊடகங்களான ட்விட்டர், பேஸ்புக் ஆகியவை, சட்டங்களை மதிக்காமல், தன்னிச்சையாக செயல்படுவதாக, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தொடர்ந்து குற்றசாட்டை முன்வைத்து வருகின்றன.
தடை செய்யப்பட்ட உள்ளடக்கத்தை அகற்றத் தவறியதாகக் கூறி பேஸ்புக் (Facebook) மற்றும் டெலிகிராம் செயலிகளுக்கு ரஷ்ய அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். நாட்டில் சமூக ஊடக தளங்களின் தன்னிச்சையான போக்கை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கையில் ஒன்றாக கருதப்படுகிறது.
மாஸ்கோ நீதிமன்றம் வியாழக்கிழமை பேஸ்புக்கிற்கு 17 மில்லியன் ரூபிள் மற்றும் டெலிகிராம் 10 மில்லியன் ரூபிள் அபராதம் விதித்தது. சமீபத்திய வாரங்களில் இரு சமூக ஊடகங்களுக்கும் அபராதம் விதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
மே 25 அன்று, பேஸ்புக் சட்டவிரோதமான கருத்துக்கள் அடங்கிய உள்ளடக்கத்தை அகற்றாததற்காக ரஷ்ய அதிகாரிகள், பேஸ்புக்கிற்கு 26 மில்லியன் ரூபிள் அபராதம் விதித்தனர். அதே போன்று, ஒரு மாதத்திற்கு முன்பு, ஆர்ப்பாட்டங்களை தூண்டு வகையிலான உள்ளடக்கத்தை அகற்றாததற்காக டெலிகிராமிற்கும் 50 மில்லியன் ரூபிள் அபராதம் விதிக்கப்பட்டது.
சில மாதங்கள் முன்னதாக, ரஷ்யாவில், சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்குமாறு குழந்தைகளை தூண்டும் வகையிலும், போதைப்பொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், சிறுவர்கள் மத்தியில் ஆபாச கருத்துக்களை பரப்பும் வகையிலும், போடப்பட்ட பதிவுகளை நீக்கத் தவறியதாக ரஷ்ய அதிகாரிகள் ஐந்து சமூக ஊடக நிறுவனங்கள் மீது வழக்கு ஒன்றை தொடுத்தனர்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை அதிகம் விமர்சிக்கும் எதிர் கட்சித் தலைவரான அலெக்ஸி நவல்னியை சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சமூக ஊடகங்கள் மூலம் ஆதரவு திரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம், ரஷ்யாவின் தொலைத் தொடர்பு கண்காணிப்பு அமைப்பான, ரோஸ்கோம்னாட்ஸர், ஆபாசம், வன்முறை ஆகியவற்றை தூண்டும் பதிவுகளை அகற்றத் தவறிய ட்விட்டரின் செயல்பாட்டை தற்காலிகமாக முடக்கியது. மேலும் வருங்காலத்தில், ட்விட்டரை முற்றிலுமாகத் தடை செய்யலாம் எனவும் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
2025 ஆம் ஆண்டில் விண்டோஸ் 10 இயக்க முறைமையை நிறுத்தப் போவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. அப்படி என்றால், மில்லியன் கணக்கான கணினிகளில் பொருத்தப்பட்டிருக்கும் அந்த இயக்க முறைமை என்னவாகும்?
விண்டோஸ் 10 ஹோம் (Home), புரோ (Pro), புரோ ஃபார் வொர்க்ஸ்டேஷன் (Pro for Workstations), புரோ எஜுகேஷன் (Pro Education) இயக்க முறைமை, 2025ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதியுடன் நிறுத்தப்படும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதன் பொருள் அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனம், அந்த குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை வெளியிடாது.
மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 ஐ அறிமுகப்படுத்தியபோது, இது விண்டோஸின் கடைசி பதிப்பாக இருக்கும் என்று கூறியது. ஆனால், நிறுவனத்தின் சமீபத்திய டீஸர் இந்த மாத இறுதிக்குள் விண்டோஸ் 11 ஐ அறிமுகம் செய்யும் என்பதை உறுதிப்படுத்தியது. தனது இணையதளத்தில் ஒரு புதிய நிகழ்வை பட்டியலிட்டுள்ள மைக்ரோசாஃப்ட், ஜூன் 24 அன்று ஒரு நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறது. அந்த நிகழ்வில், 'நெக்ஸ்ட் ஃபார் விண்டோஸ்' ('Next for Windows') என்ற பெயரின் எதிர்வரவிருக்கும் அனைத்தையும் முன்னிலைப்படுத்தும்.
இந்த நிகழ்வு ஜூன் 24ஆம் தேதியன்று IST 8:30 மணிக்கு நடைபெறும் என்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் நிறுவனம் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது. மைக்ரோசாப்ட் பில்ட் 2021 (Microsoft Build 2021) என்ற நிகழ்வின்போது பேசிய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, அடுத்த தலைமுறை விண்டோஸ் புதுப்பிப்பு கடந்த தசாப்தத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று தெரிவித்தார்.
“டெவலப்பர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் அதிக பொருளாதார வாய்ப்பைத் திறக்க கடந்த தசாப்தத்தின் மிக முக்கியமான விண்டோஸ் புதுப்பிப்புகளில் ஒன்றை விரைவில் பகிர்ந்து கொள்வோம். கடந்த பல மாதங்களாக இதை நானே நேரடியாக இந்த பணியில் ஈடுபட்டுள்ளேன். விண்டோஸின் அடுத்த தலைமுறை குறித்து நான் மிகவும் திருப்தியுடனும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
விண்டோஸ் 10 - 2025 ஆண்டுடன் முடிவுக்கு வந்துவிடும் என்றாலும், மக்கள் விண்டோஸ் 7 இலிருந்து தங்கள் கணினியை மேம்படுத்த நீண்ட காலம் எடுக்கும். புதிய இயக்க முறைமைக்கு மாறுவதற்காக மைக்ரோசாப்ட் மக்களுக்கு கூடுதல் கால அவகாசத்தை வழங்கும்.
Jio பயனர்கள் WhatsApp மூலம் தங்கள் மொபைலை ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். இது மட்டுமல்லாமல், Jio பயனர்கள் தங்கள் அருகிலுள்ள தடுப்பூசி மையத்தில் கோவிட் தடுப்பூசி கிடைப்பது பற்றிய தகவல்களையும் பெற முடியும். ஜியோ இந்த சேவையை வாட்ஸ்அப் சாட்போட் மூலம் தொடங்கியுள்ளது. இது குறித்து நிறுவனம், "இப்போது ஜியோ பயனர்கள் பில்களை செலுத்துவது, எங்களிடம் கேள்விகளை கேட்பது, புகார் அளிப்பது ஆகியவற்றைத் தவிர வாட்ஸ்அப்பின் உதவியுடன் சாட்போட்டில் பல சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்." என்று தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் இந்த புதிய சேவையைப் பயன்படுத்தி, பயனர்கள் புதிய ஜியோ சிம்மையும் ஆர்டர் செய்யலாம். வாட்சப்பில் பயனர்களுக்கு Jio SIM ஆதரவு, ஜியோ ஃபைபர், சர்வதேச ரோமிங் மற்றும் ஜியோ மார்ட் தொடர்பான சேவைகளை நிறுவனம் வழங்குகிறது. ஒட்டுமொத்தமாக, இப்போது பயனர்கள் ஜியோ சிம் மூலம் ஜியோ மொபிலிட்டி, ஃபைபர் மற்றும் ஜியோ மார்ட் கணக்கை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.
இ-வாலட், யுபிஐ, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் போன்ற கட்டண விருப்பங்களுக்கு, ஜியோ பயனர்கள் 'Hi' என்று டைப் செய்து 70007 70007 க்குWhatsApp செய்தியை அனுப்பலாம். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் வழங்கி வரும் சேவை விரைவில் பிற மொழிகளிலும் கிடைக்கும்.
இந்த புதிய சேவையில் பயனர்களுக்கு மொழியை மாற்றுவதற்கான விருப்பத்தையும் ஜியோ வழங்கியுள்ளது. நீங்கள் சாட்போட்டின் மொழியை மாற்ற விரும்பினால், சேட் மொழியை மாற்றுவதற்கான ஆப்ஷனை (change chat language) கிளிக் செய்யவும். உங்கள் வசதிக்கு ஏற்ப இந்தி அல்லது ஆங்கிலத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்.
பக்கம் 1 / 21



