Editor's Choice

குடைமிளகாய் நாற்றங்காலுக்கு 50 சதவீத நிழல்வலை போதுமானது. ஒரு மீட்டர் அகலம் மற்றும் போதுமான நீளமுடைய மேட்டுப் பாத்திகளை அமைக்க வேண்டும். நாற்றுக்களை குழித் தட்டுகளில் வளர்க்க வேண்டும். குழித் தட்டுகளில் நன்கு பதப்படுத்தப்பட்ட தென்னை நார்க்கழிவு 300 கிலோவுடன் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு மற்றும் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா இரண்டும் தலா ஒரு கிலோ கலந்து நிரப்ப வேண்டும்.

ஒரு எக்டருக்கு சுமார் 200 கிராம் குண்டு மிளகாய் விதைகள் போதுமானது. ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 100 கிராம் என்ற அளவில் அசோஸ் பைரில்லத்தைக் கலந்து அரை மணி நேரத்திற்கு நிழலில் உலர்த்த வேண்டும்.

விதைத்த ஆறு நாட்களுக்கு பிறகு குழித்தட்டுகளை மேட்டுப் பாத்திகளின் மீது வைக்க வேண்டும். விதை முளைக்கும்வரை ஒரு நாளைக்கு 2 முறை என்ற முறையில் தினமும் பூவாளி கொண்டு நீர் பாய்ச்ச வேண்டும். 3 சதவீத (30மிலி/லி) பஞ்சகாவ்யாவை விதைத்த 15 நாட்களுக்குப் பின் தெளிக்க வேண்டும்.

விதைத்த 18 நாட்களுக்கு பின் 19:19:19 மற்றும் 0.5 சதவீத மாங்கனீசு கரைசலை ஊற்ற வேண்டும் அல்லது நுண்ணூட்டச்சத்து கலவை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் தெளிக்க வேண்டும். 35 நாட்களில் பாப்ரிகா நாற்றுகள் நடவுக்கு தயாராக இருக்கும்.

* கடைசி உழவுக்கு முன் ஒரு எக்டருக்கு 25 டன் தொழுவுரம் அடி உரமாக இட்டு நன்கு உழவேண்டும்.

* அடியுரமாக சூப்பர் பாஸ்பேட் உரத்தை ஒரு எக்டருக்கு 703 கிலோ என்ற அளவில் கடைசி உழவின்போது இடவேண்டும்.

* அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை எக்டருக்கு தலா 5 கிலோ வீதமும் சுமார் 50 கிலோ தொழு உரத்துடனும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கும் இடவேண்டும்.

* கடைசி உழவுக்கு முன் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் எக்டருக்கு 2.5 கிலோ என்ற அளவில் 100 கிலோ தொழு உரத்துடன் கலந்து இடவேண்டும்.

* நடவு வயலில் 4 அடி அகலம் உடைய மேட்டுப் பாத்திகளை ஒரு அடி இடைவெளியில் அமைத்து சொட்டு நீர்ப்பாசன பக்கவாட்டுக் குழாய்கள் மேட்டுப்பாத்தியின் மத்தியில் இணையாகச் செல்லுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

* நடுவதற்கு 8-12 மணி நேரத்திற்கு முன் நடவு வயலை சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பின்மூலம் நனைக்க வேண்டும்.

* நடவுக்கு முன்எக்டருக்கு 1லி என்ற அளவில் முளை முன் களைக் கொல்லியான புளூகுளோரலின்அல்லது பெண்டி மெத்தலின் தெளிக்க வேண்டும்.

* 35 நாட்கள் வயதான குடைமிளகாய் செடிகளை 0.5 சதவீத சூடோமோனாஸ் புளோரசன்ஸ் கரைசலில் 30 நிமிடங்கள் நனைத்தபிறகு இரு வரிசை நடவு முறையில் 90 x 60 x 60 செ.மீ. என்ற இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.

* 10 குடைமிளகாய் செடி வரிசைகளுக்கு இடையில் ஒரு வரிசை 40 நாட்கள் வயதுடைய செண்டுமல்லி நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும்.

* நடவு செய்த 7ம் நாள் சந்துக்களை நிரப்ப வேண்டும்.

சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 0.5 சதவீதத்தை 15 நாட்கள் இடைவெளியில் இலைகளின்மீது தெளிக்க வேண்டும். நடவு செய்த 30 மற்றும் 60ம் நாள் களையெடுக்க வேண்டும். நீரில் கரையும் 19:19:19 மற்றும் மாங்கனீசு மற்றும் பொட்டாசிய நைட்ரேட் ஒரு சதவீதம் என்றளவில் நடவு செய்த 60 மற்றும் 100ம் நாட்களில் தெளிக்க வேண்டும். டிரையகாண்டனால் என்ற வளர்ச்சி ஊக்கியினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1.25 மி.லி. என்ற அளவில் நடவு செய்த 15 மற்றும் 30ம் நாட்களில் தெளிக்க வேண்டும்.

பிளானோபிக்ஸ் 0.25 மிலி/லி என்றளவில் தண்ணீருடன் கலந்து 45, 60 மற்றும் 90ம் நாட்களில் தெளிக்க வேண்டும். நன்கு வளர்ச்சி அடைந்த காய்களை நடவு செய்த 70ம் நாள் முதல் அறுவடை செய்யலாம். காய்களின் அளவைப் பொறுத்து தரம் பிரித்து பிளாஸ்டிக் பெட்டிகளில் நிரப்பவேண்டும். சிறிய வளைந்த மற்றும் உருமாற்றமுள்ள காய்களைத் தனியாக பிரித்தெடுக்க வேண்டும்.

Editor's Choice

கோடைகாலம் வரும் முன்னே மாம்பழம் வரும் பின்னே என்பார்கள்… இதோ அக்னி வெயில் தகிக்கும் வேளையில் மாம்பழ வாசனையும் வீசத் தொடங்கிவிட்டது. மாம்பழத்தில் பல வகை இருந்தாலும் சில குறிப்பிட்ட ரகங்கள் அலாதியான சுவை கொண்டவை. அல்ஃ‌போன்சா, மல்கோவா, இமாம்பசந்த், சேலம் பெங்களூரா, நடுசாலை(பீதர்), சேலம் குதாதாத் ஆகிய மாம்பழங்கள்.

மாம்பழத்தின் தாயகம் இந்தியா ஆகும், கி மு 4000 ஆண்டிலேயே மாம்பழங்கள் அதிக அளவு பயன்படுத்தி இருக்கிறார்கள். தெற்கு ஆசியாவில் தான் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. மாம்பழ உற்பத்தியில் இந்தியாதான் முதலிடம் வகிக்கிறது. உலக மொத்த உற்பத்தியில் 63 சதவிகிதம் இந்தியாவில் இருந்து தான் உற்பத்தியாகின்றது.

அல்ஃ‌போன்சா (Alphonso Mango)

இதன் பொன்மஞ்சள் நிறம் மாம்ழத்திற்கு கூடுதல் சிறப்பு அளிக்கிறது. நாவை வருடும் சுவையுடன் உள்ள இந்த பழம் மிகவும் இனிப்பாகவும் அதிக சதைப்பற்றுடன் நார் இல்லாமல் சாறு நிறைந்ததாக இருக்கும். இது, மாம்பழங்களின் ராஜா என்றும்  அழைக்கப்படுகிறது.

மல்கோவா (Malgova or Malgoa)

மாம்பழம் என்றாலே நம் நினைவிற்கு வருவது இந்த மல்கோவா மட்டுமே. தென்னிந்தியா முழுவதும் பரவலாக இந்த மாம்பழங்கள் கிடைத்தாலும் சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் கிடைக்கும் மல்கோவா மாம்பழங்கள் தனி சிறப்பு வாய்ந்தது. தித்திப்பு சுவை கொண்ட இந்த மல்கோவா  மாம்பழங்கள் பழுக்க பழுக்க இந்த வாசனை ஊரெல்லாம் பரவும்.

இமாம்பசந்த் (Imampasanth, Himayat or Humayun Pasand)

தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் விளைவிக்கப்படும் இந்த மாம்பழம் பச்சை நிறத்தில் காண்போரை கவரும்.

பீதர் (Peethar)

நடுசாலை அல்லது பீதர் மாம்பழங்கள் இளம் சிவப்பு பச்சை மற்றும் மஞ்சள் கலந்த நிறம் பார்ப்பவர்களை கவர்ந்து இழுக்கும். இதன் காயும் கனியும் சிறியதாகவே வளரும்.

சேலம் பெங்களூரா (Salem Bangalora)

நமது சேலம் பெங்களூரா மாம்பழம் அருமையான சுவை கொண்டது. இவற்றிற்கு தோத்தாபூரி, கல்லாமை, சுந்தர்சா, என பல்வேறு பெயர்களும் உண்டு. கர்ப்பிணிப் பெண்கள் விரும்பி உண்ணும் மாம்பழம் இது. இந்த பழத்தின் காய்கள் சற்றுக் குறைந்த புளிப்புச் சுவை கொண்டது.

சேலம் குதாதத் (Khudhadhadh Mango)

பெரிய பெரிய மாம்பழம் என்றால் சேலம் குதாதத் மாம்பழம் தான். இவை, சீசன் இறுதியில் கிடைக்கும். குதாதத் மாம்பழம் அளவில் பெரியதாக இருப்பதனால் ஜூஸ் போடுவதற்கு மிகவும் சிறந்தது.

ரகங்கள்:

இந்தியாவில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் மாம்பழங்களில் நீலம், பெங்களூரா, பங்கனப்பள்ளி, சிந்து, அல்போன்சா, மல்கோவா ஆகிய ரகங்கள் மிகவும் பிரபலமானவை.

  • ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரை நடவு செய்ய ஏற்ற பருவம் ஆகும். நல்ல வடிகால் வசதி உள்ள செம்மண் நிலம் மாம்பழ உற்பத்திக்கு ஏற்ற மண் ஆகும். மண்ணின் கார அமில தன்மை 6 – 8 வரை இருக்க வேண்டும்.
  • பயிரிடும் நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழவு செய்ய வேண்டும். பின்பு ஒவ்வொரு செடிக்கும் 8 முதல் 10 மீட்டர் இடைவெளி இருக்குமாறு மூன்று அடி ஆழமுள்ள குழிகளை எடுக்க வேண்டும். பின்னர் ஒவ்வொரு குழிக்கும் 5 கிலோ தொழு உரம் இட்டு குழிகளை நன்கு ஆறவிட்டு வேண்டும்.
  • பின்பு தேர்ந்தெடுக்கப்பட்ட செடிகளை குழிகளின் மத்தியில் வைத்து நடவு செய்ய வேண்டும். அக்குழியை மண்ணை கொண்டு நிரப்ப வேண்டும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட கன்றுகளை உடனே நடாமல் பயிர் செய்யப்போகும் நிலத்தின் மண்ணை அச்செடிகளின் வேர்பகுதிகளில் வைத்து புதிய தளிர்களை வரவைத்து பின் நடுவதினால் செடிகளின் இறப்பு விகிதத்தை அதிகப்படியாக குறைக்கலாம். இவ்வாறு செய்வதினால் கன்றுகள் பட்டுபோகாமல் தடுக்கலாம்.
  • கன்றுகளை நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். இளங்கன்றுகள் மண்ணில் வேர் பிடிக்கும் வரை அடிக்கடி நீர் பாய்ச்சுவது நல்லது.
  • அதேநேரத்தில் தண்டுப்பகுதியில் அதிக அளவிலான நீர் தேக்கத்தை தடுக்க வேண்டும்.
  • சொட்டுநீர் பாசனத்தை உபயோகிப்பதினால் செடிகள் ஈரப்பதத்தோடு வளருவதுடன் நீர் வீணாவத்தையும் தடுக்கலாம்.
  • அடிக்கடி தொழுவுரம் மற்றும் தழைசத்துக்களை வைப்பதினால் நல்ல வளர்ச்சியும் நல்ல மகசூலும் கிடைக்கும்.
    மாம்பழத்தின் பயன்கள்
  • மாம்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்து இருப்பதினால் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கும் ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை குறைப்பதற்கும் பயன்படுகிறது.
  • தோல் பளபளக்க மாம்பழத்தை தொடர்ந்து உண்ண வேண்டும்.
  • தோல்வறட்சியை தடுக்கவும் தோல் பளபளக்கவும் மாம்பழ துண்டுகளை கொண்டு அந்த இடத்தில தேய்க்கவும்.
  • மாம்பழம் வாயுத் தொல்லையை நீக்கி, உடலுக்குப் புத்துணச்சியை அளிக்கிறது. பித்தத்தைப் போக்கி குடலுக்குப் பலம் தருகிறது. இதனால், சிறுகுடல், பெருங்குடல் எரிச்சல், வீக்கம் ஏற்படுவது குறையும்.
  • நாள்பட்ட தலைவலியினாலும், அதன் காரணமாக உண்டான பார்வைக்கோளாறினாலும் அவதிப்படுகிறவர்களுக்கு, மாம்பழம் ஒரு வரப்பிரசாதம். இவர்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு மாம்பழச்சாறு பருகி வந்தால் பார்வைக்கோளாறு குணமாகும். மாம்பழத்தில் உள்ள குளுடாமின் அமிலம், குழந்தைகள் கவனம் செலுத்துவதற்கும், ஞாபக சக்திக்கும் ஊட்டமாக அமைகிறது.
  • முடி உதிர்வு மற்றும் வழுக்கை ஏற்பட்டவர்கள், ஒரு டேபிள் ஸ்பூன் மாம்பழ சதையுடன் வேப்பம்பூவை சேர்த்து அதனை விளக்கெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் கலந்து, தலையில் தேய்த்து மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு பயத்தமாவு, கடலை மாவு, சீயக்காய் பொடி மூன்றையும் சம அளவு கலந்து தலைக்குத் தேய்த்து குளிக்க வேண்டும். வாரம் இரண்டு முறை தொடர்ந்து செய்து வந்தால் முடி உதிர்வது நீங்கி நன்றாக முடி வளர ஆரம்பிக்கும். 

    தினமும் குளிப்பதற்கு முன்பு, ஒரு டீஸ்பூன் வேப்பம்பூ விழுது, அரை டீஸ்பூன் மாம்பழ சதை, அரை டீஸ்பூன் நல்லெண்ணெய் ஆகியவற்றை கலந்து முகத்தில் பூசிவந்தால், மாசு மருக்கள், பருக்கள் மறைந்து, உங்கள் முகம் பொழிவு பெரும்.

 

Editor's Choice

நறுமணப் பயிராகவும், சுத்தம் செய்யும் சோப்பு பவுடர்கள், திரவப் பொருள்களில் பயன்படுத்தும் மூலப்பொருளாகவும் விளங்கும் ‘லெமன் கிராஸ்’ என்னும் எலுமிச்சை புல் சாகுபடி செய்து அதிக லாபத்தை ஈட்டலாம்.

பொதுவாக புல், செடி, கொடிகள் இருந்தால் கொசுக்கள் வரும். ஆனால், கொசுவை விரட்டும் புல்லாக இருக்கிறது இந்த புல். அதுதான் ‘லெமன் கிராஸ்’ எனப்படும் ‘எலுமிச்சைப் புல்’. இதன் மணம் எலுமிச்சையைப் போன்றே இருக்கும் என்பதால், இந்தப் புல்லில் இருந்து எடுக்கப்படும் லெமன் கிராஸ் எண்ணெய், துணி துவைக்கும் பவுடர், பாத்திரம் துலக்கும் பவுடர், புளோர் கிளீனர், பினாயில் போன்றவற்றுடன் சேர்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி லெமன் டீ தயாரிப்பில் எலுமிச்சை சாறுடன் நறுமணத்துக்காக லெமன் கிராஸ் ஆயிலும் சில இடங்களில் சேர்க்கப்படுகிறது. எலுமிச்சைப்புல் கேரளத்தில்தான் அதிகமாக விளைவிக்கப்படுவதால் லெமன் கிராஸ் ஆயிலை கொச்சி வாசனை எண்ணெய் என்றும் அழைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் லெமன் கிராஸ் ஆயில் கொடைக்கானலில் அதிகமாக விற்கப்படுகிறது. இது இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட எண்ணெய் ஆகும். கெமிக்கல் கடைகளில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட லெமன்கிராஸ் ஆயில் விற்பனை செய்யப்படுகிறது. மாநிலத்தில் கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இந்தப்புல் அதிகம் பயிரிடப்படுகிறது.

மண் மற்றும் தட்பவெப்பநிலை: வடிகால் வசதியுடைய அங்கக சத்துக்கள் நிறைந்த, மணற்பாங்கான நிலங்கள் சாகுபடிக்கு உகந்தவை. மண்ணின் கார அமிலத்தன்மை 6.0 ஆக இருக்கவேண்டும். மிதமான தட்பவெப்பநிலையும், அதிக அளவு மழை மற்றும் காற்றில் ஈரப்பதம் வேண்டும்.

ஒரு ஹெக்டேருக்கு நடவு செய்ய 55,500 வேர்க்கட்டைகள் தேவைப்படும். வேர்க்கட்டை (4 கிலோ / ஹெக்டேர்) மூலம் உற்பத்தி செய்யலாம். விதைகளை நாற்றாங்கால் மூலம் உற்பத்தி செய்து ஜூன் – ஜூலை மாதங்களில் நடவு செய்யலாம்.

நடவு செய்ததும் நீர்ப் பாசனம் செய்ய வேண்டும். எலுமிச்சை புல்லுக்கு ஏழு முதல் பதினைந்து நாள் இடைவெளியில் நீர்ப் பாசனம் செய்ய வேண்டும். தேவைப்படும்போது கைக்கிளை எடுக்க வேண்டும்.

நடவு செய்த 90வது நாளில் முதல் அறுவடையும் அதன் பின்னர் 75-90 நாள்கள் இடைவெளியில் இரண்டாவது அறுவடை செய்ய வேண்டும். அறுவடையின்போது புல் மற்றும் புதர்களை தரை மட்டத்திலிருந்து 10-15 செ.மீ அளவில் வெட்டவேண்டும். எண்ணெய் எடுக்க தண்ணீர் ஆவியாதல் முறை மூலம் சுத்திகரிக்கவேண்டும். எண்ணெய் கிடைக்கும் அளவு 0.2 – 0.3 சதவீதம்.

ஹெக்டேருக்கு 20 முதல் 30 டன் வரை புல் கிடைக்கும். எண்ணெய் ஹெக்டேருக்கு முதலாமாண்டு 25 கிலோ, இரண்டாமாண்டு 85 முதல் 100 கிலோ கிடைக்கும்.

Editor's Choice

உலகில் உள்ள தாவரங்களில் மிக வேகமாக வளரக் கூடியது மூங்கில். இது புல் வகை தாவரங்களில் மிக பெரியது.  “பச்சைத்தங்கம்” என அழைக்கப்படும் மூங்கில் உலகில் சுமார் 1400 இனங்கள் உள்ளன. அவற்றில் 136 இனங்கள் (Species) இந்தியாவில் உள்ளன. மூங்கில்களில் சில இனங்கள் ஒரே நாளில் சுமார் 30 செ.மீ வரை வளரக்கூடிய தன்மையுடையது. தமிழ்நாடடில் பெருவாரை (பொந்து மூங்கில்) மற்றும் சிறுவாரை (கல் மூங்கில்) என்ற இரண்டு இனங்கள் மட்டுமே உள்ளன. இவைளில் முட்கள் ஒன்றோடு ஒன்று பின்னி காணப்படுவதால், விவசாயிகள் வெட்டி எடுப்பதற்கு மிகுந்த சிரமும், அதிக செலவும் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். முள்ளில்லா மூங்கில்களில் இப்பிரச்சினைகள் இல்லை. தமிழ்நாடு வனத்துறையின் ஆராய்ச்சி பிரிவு தமிழ்நாட்டின் வெவ்வேறு மண்வகை மற்றும் தட்பவெப்ப நிலைகளுக்கு உகந்த நான்கு முள்ளில்லா மூங்கில் இனங்களை பல சோதனைகள் மூலம் கண்டறிந்து அவைகளை விவசாயிகள் லாபகரமாக பயிர் செய்வதற்காக அறிமுகப்படுத்தியுள்ளது.

  • பேம்பூஸா வல்காரிஸ் ( Bambusa vulgaris)
  • பேம்பூஸா நூட்டன்ஸ் (Bambusa nutans)
  • பேம்பூஸா டுல்டா (Bambusa tulda)
  • பேம்பூஸா பல்கூவா (Bambusa balcooa)

மேலே கண்ட இனங்களில் பேம்பூஸா டுல்டா வகை மூங்கில் ஓரளவு களர் மண்ணுள்ள நிலங்களிலும் வளர்க்கலாம். இவ்வகை மூங்கில்கள், குறைந்த நீர் மேலாண்மையிலும் நன்றாக வளர்ந்து பயன்தரும். சொட்டுநீர் பாசனம் மூலம் நீர் வசதிசெய்து வளர்ப்பதன் மூலம் அதிக மகசூலும் வருமானமும் ஈட்டலாம்.

இளம் மூங்கில்களிலிருந்து 10 முதல் 15 செ.மீ. நீளமுள்ள இரண்டு கணுவுள்ள கரணைகளைச் சேகரித்து அவற்றின் கீழ்முனையில் இண்டோல் பியூட்டிரிக் அமிலம் (IBA) 2000 பி.பி.எம். வேர் ஊக்கி நொதியினை தடவி, அந்த கரணையை 16 x30  செ.மீ அளவுள்ள பாலிதீன் பையிலுள்ள மண்ணிற்குள் நட்டு பின் ஈரப்பத கூடாரத்தில் வைத்து பராமரிக்க வேண்டும். கரணையின் மேல் வெட்டுப்பகுதியினை மெழுகால் தடவி கரணைகள்  காய்ந்து விடாமல் மூட வேண்டும்.  சுமார் 15 முதல் 20 நாட்களில் கணுவிலிருந்து புதுதுளிர்கள் உருவாகும். அவைகள் தொடர்ந்து நன்கு வளர்ந்தால், மண்ணிற்குள் புதைந்துள்ள கரணையில் வேர்கள் உருவாகியுள்ளதைத உறுதி செய்யலாம். இவ்வகையில் சுமார் 70 சதவீத கணுக்கள் துளிர்க்கும். தாய்ப்பாத்திகளிலும் மூங்கில் கரணைகளை நட்டு புதிய துளிர்கள் உருவானவுடன் பைகளுக்கு கவனமாக சிறிதளவு மண்ணுடன் மாற்றுவது மற்றொரு முறையாகும். துளிர்க்காத கரணைகளை அவ்வப்போது நீக்கிவிட்டு, புதிய கரணைகளை கொண்டு மாற்றி நட்டு வரவேண்டும். சுமார் 45 நாட்கள் கழித்து ஈரபத கூடாரத்திலிருந்து மூங்கில் கன்றுகளை வெளியில் எடுத்து 75 சதவீத நிழல் கொடுக்கக்கூடிய அக்ரோநெட்டின் கீழ் வைத்து சுமார்  1மாதம் வரை பராமரித்து வரவேண்டும். பின் சூரிய வெளிச்சத்தில் வைத்து வளர்க்க வேண்டும். மூங்கில் விதைகள் கொண்டும் நாற்றுகள் உற்பத்தி செய்யலாம். ஆனால் விதைகளின் முளைப்புத்திறன் சுமார் ஒரு மாதம் முதல் இரண்டு மாதங்கள் வரை மட்டுமே இருக்கும். முளைப்பு சதவீதம் 45 ஆகும். மேற்கண்ட முறைகள் தவிர திசு வளர்ப்பு முறை மூலமும் மிக அதிகமான நாற்றுக்கள் உற்பத்தி செய்யலாம்

சுமார் ஆறுமாத வயதுள்ள கன்றகளை நிலங்ளில் நடலாம். 0.60x0.60x0.60 மீட்டர் அளவுக்கும் குறையாத குழிகளை 5x5 மீட்டர் ( செடிகளுக்கு இடையே 5 மீட்டர் வரிசைகளுக்கு இடையே 5 மீட்டர்) இடைவெளிகளில் மழைகாலத்திற்கு முன் குழி எடுத்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். குழிகள் ஒவ்வொன்றிலும் 1 கிலோ மண்புழு உரம், 30 கிராம் வேர்வளர்ச்சி உட்பூசாணம் (VAM) மற்றும் 15 கிராம் அசோஸ்பைரில்லம், 15 கிராம் பாஸ்போபாக்டீரியா ஆகியவைகளை இட்டு மழை பெய்தவுடன் நாற்றுக்களை நட வேண்டும். செடிகளின் வேர்கள் மண்ணுக்கு வெளியில் தெரியாவண்ணம் குழிகளை சுற்றியுள்ள மேல்மண்ணை கொண்டு குழிகளை நிரப்ப வேண்டும். மழைநீர் சேகரமாகும் வகையில் செடிகளைச் சுற்றி பாத்தி கட்ட வேண்டும். இதன் மூலம் அதிகளவு புதிய குருத்துக்கள் உருவாகும். இச்செயல் செடிகளின் வளர்ச்சியை  ஊக்கப்படுத்த உதவும். நடப்பட்ட கன்றுகளுக்கு மழையில்லா வறட்சி காலங்களிலும், கோடை காலங்களிலும் 15 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்சுவது நாற்றுகளின் இழப்பை முழுக்க தவிர்க்க உதவும். சொட்டுநீர் பாசனமுறை மூலம் மூங்கில் கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சினால் அதிக மகசூல் கிடைக்கும்.

மூங்கில் கன்றுகள் நடப்பட்ட சுமார் ஐந்தாம் வருடத்திலிருந்து ஒவ்வொரு தூரிலும் (clump) 30-40 மூங்கில் கழிகள் (culm) வளர்ந்திருக்கும். ஐந்தாவது வருடத்திற்குப் பிறகு ஒவ்வொரு மூங்கில் குத்திலிருந்தும் சுமார் 8 முதல் 10 முதிர்ந்த மூங்கில்களை அறுவடை செய்யலாம். ஒரு தூரிலுள்ள மொத்த மூங்கில் கழிகளில் மூன்றில் ஒரு பங்கு மட்டும் வெட்டி எடுத்தல் வேண்டும். மூங்கில் பெரும்பாலும் முதிர்ந்த கழிகள் தூருக்கு உள்ளேயும், இளம் கழிகள் தூருக்கு வெளியேயும் இருப்பதால், குதிரை லாடம் வடிவில் கழிகளை வெட்டி எடுக்க வேண்டும். அறுவடை செய்யக் கூடிய மூங்கில்களின் எண்ணிக்கை தூர்களின் வயதை பொறுத்து மாறுபாடும்.

  • மூங்கில்களின் வேர்கள் மண்துகள்களை இறுக்கமாக பிடித்துக் கொள்வதாலும், வளர்ந்த மூங்கில்கள் குடைபோல் மண்ணை மழைநீரின் நேரடி தாக்குதலிலிருந்து காப்பதாலும், காய்ந்த இலைகள் போர்வை போல மண்ணை மூடி காப்பதாலும் மண் அரிப்பை தடுத்து மண்வளததைக் காப்பதுடன், நீர்வளத்தையும் பெருக்க உதவுகிறது.
  • வளர்ந்த மூங்கில்கள் வீடுகள் கட்ட தாங்கு குச்சிகளாக பயன்படுகிறது.
  • குடிசைகள், சிறுவீடுகள் கட்ட மூலப் பொருட்களாக பயன்படுகிறது.
  • பெரிய வீடுகள் மற்றும் உணவகங்களில் உள் அலங்கார மூலப் பொருளாகவும் பயன்படுகிறது.
  • இளம் குருத்துக்கள் ஊறுகாய் தயாரிக்கவும், கைவினைப் பொருட்கள் தயாரிக்கவும் மற்றும் நூல் இழைகள் ஆடைகள் தயாரிக்கவும் பயன்படுகின்றன.
  • மூங்கில்களில் பேப்பர், பிளைவுட் மற்றும் பார்டிக்கிள் போர்டுகள் தயாரிக்க பயன்படுகிறது.
  • அகர்பத்தி, பட்டாசுகள், கூடைகள், பர்னீச்சர்கள் தயாரிப்பிலும் அதிகமாக உபயோகப்படுகிறது. மேலும் பல்வேறு சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகளில் மூலப் பொருளாகவும் பயன்படுகிறது.

ஏக்கருக்கு ஆண்டிற்கு குறைந்தபட்ச ரூ.16,000/- வருமானமாக கிடைக்கும். இந்த வருமானம் ஆண்டுகள் செல்லச் செல்ல பல மடங்கு அதிகரிக்கும்.

Editor's Choice

ஆண்டு முழுவதும் விளையக்கூடிய புதர் அல்லது படர்கொடி வகைத் தாவரப்பேரினம் ரோஜா.

ரோஜாவில் பல வகையான பூக்களும், பலவித வண்ணங்களும் உண்டு.

இதன் தண்டு பகுதி பெரும்பாலும் கூரிய முட்கள் கொண்டதாக இருக்கும்.

ரோஜா எப்படி பயிரிடுவது…?

எட்வர்ட் ரோஜா, ஆந்திர சிவப்பு ரோஜா ஆகியவை நாட்டு இரகங்கள் ஆகும். கலப்பு ரோஜா இரகங்கள் கிளாடியேட்டர், பேபி பிங்க், சோபியா லாரன்ஸ், YCD 1, YCD 2, YCD 3 போன்றவை சாகுபடி செய்யப்படுகின்றன.

பருவம்

கார்த்திகை மாதத்தில் ரோஜா செடிகளை நடவு செய்யலாம்.

மண்

களியும், மணலும் கலந்த இருமண்பாட்டு நிலம் மற்றும் செம்மண் நிலங்கள் பயிரிட ஏற்றவை.

பருவமழை பெய்ய ஆரம்பிக்கும் முன்னரே, 45 செ.மீ நீளம், அகலம் மற்றும் ஆழம் உள்ள குழிகளை 2.0 x 1.0 மீட்டர் இடைவெளியில் எடுத்து ஆறவிடவேண்டும். நடுவதற்கு முன்னர் குழி ஒன்றிற்கு 1 கிலோ தொழு உரம், 1.3 சதம் லிண்டேன் மருந்து 20 கிராம் மற்றும் மேல்மண் இடவேண்டும். லிண்டேன் இடுவதால் கரையான் மற்றும் எறும்புகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

விதைகள்

வேர்பிடித்த வெட்டு துண்டுகள் மற்றும் ஒட்டு கட்டிய செடிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

விதைத்தல்

தயார் செய்து வைத்துள்ள குழிகளில், வேர்பிடித்த வெட்டுத் துண்டுகளை குழிகளின் மத்தியில் நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

நட்ட செடிகளுக்கு உடனடியாக நீர்ப்பாய்ச்ச வேண்டும். செடிகள் வேர்ப்பிடித்து துளிர்விடும் வரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறையும், பின்பு மண் மற்றும் கால நிலைகளுக்குத் தகுந்தவாறு வாரத்திற்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சவேண்டும். ரோஜா செடிகளுக்கு உப்புநீர் பாய்ச்சினால் செடிகள் நாளடைவில் காய்ந்துவிடும். எனவே உப்புநீர் பாய்ச்சுவதைத் தவிர்க்க வேண்டும்.

உரங்கள்

ரோஜா செடியை கவாத்து செய்தவுடன் செடியைச் சுற்றி 2 அடி தள்ளி செடி ஒன்றிற்கு 10 கிலோ தொழு உரத்துடன் 6:12:12 கிராம் என்ற விகிதத்தில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை இடவேண்டும். வளர்ச்சி ஊக்கிகளை சரியான முறையில் கொடுத்து வந்தால் வேறு எந்த உரங்களும் இதற்கு தேவைப்படாது.

முதலாம் ஆண்டு ரோஜா பூக்க ஆரம்பிக்கும். ஆனால் இரண்டாம் ஆண்டில் தான் சீரான வளர்ச்சி இருக்கும். மலர்ந்த மலர்களை அதிகாலையில் பறிக்க வேண்டும்.

மகசூல்

ஒரு எக்டரிலிருந்து, ஒரு வருடத்திற்கு 10 இலட்சம் பூக்கள் வரை மகசூல் கிடைக்கும்.

பயன்கள்
  • ரோஜா இதழ்களை சேகரித்து நிழலில் உலர்த்தி, நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி உட்கொண்டால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் நீர்க்கட்டு சரியாகும். வாய்ப்புண்ணும் விரைவில் குணமாகும்.
  • ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து காலை, மாலை ஆகிய இருவேளை அப்படியே உட்கொண்டுவர சீதபேதி இரண்டொரு நாளில் குணமாகிவிடும்.
  • புண்கள் குணமாக ரோஜா பூ இதழ்களிலிருந்து குடிநீர் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தைக் கழுவ வேண்டும். இந்நீரை கொண்டு வாய் கொப்பளிக்க வாய்ப்புண் குணமாகும்.
  • ரோஜா இதழ்களை சேகரித்து தேனிலோ அல்லது சர்க்கரை பாகிலோ ஊற வைத்து தினமும் சாப்பிட்டுவர இதயம் வலிமை பெறும். மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
  • ரோஜா மலரின் சாற்றை ஒற்றைத் தலைவலிக்கு பயன்படுத்தலாம். தலைவலி எந்த பக்கம் இருக்கிறதோ, அதற்கு நேரெதிர் நாசி துவாரத்தில் இதன் சாற்றை 2 துளிவிட உடனே தலைவலி மறைந்துபோகும்.
Editor's Choice

தென்னிந்தியாவில் இரண்டு அரிசிகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. பச்சரிசி, புழுங்கல் அரிசி, பெரும்பாலானோர் புழுங்கலரிசியை உண்கின்றனர். இதைதவிர உடலுக்கு நல்லது என கைக்குத்தல் அரிசி, கருங்குருவை அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி, காட்டுயானம் அரிசி உள்ளிட்டவற்றையும் சிலர் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலோனார் வீட்டில் முக்கியம் இடம்பெறுவது பச்சரிசி, புழுங்கல் அரிசி, இதன் வேறுபாடுகள் என்ன என்று பார்ப்போம்.

பச்சரிசி (ரா ரைஸ் - Raw Rice)

நெல்லை அறுவடை செய்து, உலர்த்தியபிறகு, வேக வைக்காமல், நேரடியாக ஆலையில் அரைத்து அதன் உமி, தவிடு நீக்கப்படுவதால் கிடைக்கும் அரிசி.

புழுங்கல் அரிசி (பார்பாயில்டு ரைஸ் - Parboiled Rice)

நெல்லை நீரில் ஊறவைத்து, நீராவி அல்லது கொதிநீரில் வேகவைத்து, உலர்த்தி, ஆலையில் அரைத்து உமி, தவிடு நீக்கப்படுவது.

பச்சரிசி
* வெள்ளை நிறத்தில் இருக்கும்.
* ஆலையில் நெல்லை அரைக்கும்போது எளிதில் உடைபடும் தன்மை உடையது.
* சமைப்பதற்காக வேகவைக்கும்போது அரிசியிலிருக்கும் மாவுச்சத்துகள் பசைபோலாகி (Gleatinised) விடும்.
* இதனால், 'தயாமின்' (Thiamine) எனும் வைட்டமின், அமைலோஸ் (Amylose) சத்துகள் அதிகரிக்கின்றன.

புழுங்கல் அரிசி

* லேசான பழுப்பு நிறத்தில் இருக்கும்.
* ஆலையில் அரைக்கும்போது எளிதில் உடையாது.
* ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும் விகிதம் (Glysemic Index - கிளைசிமிக் இன்டெக்ஸ்) குறைவு. இரத்தத்தில் சர்க்கரை அதிகம் உள்ளவர்களுக்கு உகந்தது.
* வெளிப்புற உமி, தவிட்டு வைட்டமின்கள், உமியில் உள்ள நோய் எதிர்ப்புத் தன்மையுள்ள எண்ணெய் ஆகிய அனைத்தும் அரிசிக்குள் திணிக்கப்படுவதால், ஊட்டச்சத்து அதிகமாகிறது.

புழுங்கலரிசி உபயோகிக்கும் நாடுகள்

உலகில், மொத்த உற்பத்தியில் சுமார் 50 சதவீத நெல் வேகவைக்கப்படுகிறது. இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், மியான்மர், மலேசியா, நேபாளம், இலங்கை, தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், நைஜீரியா, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், இம்முறையை அதிகம் பின்பற்றும் நாடுகள்.

பக்கம் 1 / 11