பிரிட்டன் உள்ளிட்ட அனைத்து வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என தமிழக சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா தாக்கம் காரணமாக தமிழகத்தில் மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.
இங்கிலாந்தில் கொரோனா பரவல் வேகம் கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை தொட்டது. நாள்தோறும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ், சூழ்நிலைக்கு ஏற்ப வளர்சிதை மாற்றம் அடைந்திருந்ததை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பழைய கொரோனா வைரசை காட்டிலும் வேகமாக பரவும் தன்மை உடையதாகவும், வீரியமாக இருப்பதாவும் தெரியவந்தது.
இந்த புதிய வகை வைரஸுக்கு ‘VUI 202012/01’ என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால் இத்தாலி, இந்தியா, சவூதி, ஆஸ்திரியா, இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளன. இதனையடுத்து தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் நேரடியாக ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இங்கிலாந்தில் இருந்து மட்டுமின்றி அனைத்து நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது என்று கூறினார். கொரோனா தொற்று இல்லாவிட்டாலும் 7 நாட்கள் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும், வர இருக்கும் தடுப்பூசியை நம்பி இருக்கக் கூடாது என்றும், முககவசம், சமூக இடைவெளிதான் நிரந்தர தடுப்பூசி என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.













