ஒரு விமானம் ஒலியை விட வேகமாக பயணித்தால் அதை சூப்பர்சோனிக் விமானம் என்கிறோம். 60,000 அடி உயரத்தில் மணிக்கு 1,060 கிலோமீட்டர் வேகத்தில் பறக்க வேண்டும்.
பொதுவாக பயணிகள் விமானங்கள் மணிக்கு 900 கிலோமீட்டர் வேகத்தில்தான் பறக்கும். ஆனால் ஓவர்ச்சர் மணிக்கு 1,805 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வேகத்தில் பறந்தால், லண்டன் - நியூயார்க் இடையிலான பறக்கும் நேரத்தை பாதியாகக் குறைக்கலாம். ஓவர்ச்சர் விமானத்தில் இந்த வழித்தடத்தை 3.5 மணி நேரத்தில் பயணித்துக் கடக்கலாம். பயண நேரத்தில் 3 மணி நேரத்தை குறைக்கலாம் என்கிறது பூம் நிறுவனம்.
1976-ல் பயணிகள் விமான சேவையில் நுழைந்த கான்கார்ட் விமானம் மணிக்கு 2,180 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கக் கூடியதாக இருந்தது.
இந்த சூப்பர்சோனிக் விமானப் பயணங்களில் இரு பெரும் பிரச்சனைகள் இருக்கின்றன. இரைச்சல் மற்றும் மாசுபாடு.
ஒலியை விட வேகமாக பறக்கும் போது, விமானம் சோனிக் பூம் எனப்படும் பேரொலியை ஏற்படுத்தும். தரையில் இருப்பவர்களுக்கு அது ஏதோ இடி இடிப்பது போலவோ, பெரிய வெடிச்சத்தம் போலவோ கேட்கும்.
சூப்பர்சோனிக் விமானங்கள் எங்கு பறக்கலாம் என்பதை பூம் நிறுவனம் வரையறுக்கிறது. இவ்விமானங்கள் கடல் பகுதியை அடையும் வரை, மக்களிடமிருந்து தொலைவாக செல்லும் வரை குறைந்த வேகத்தில் பறக்க வேண்டும் என்கிறார்கள்.
சூப்பர்சோனிக் விமானங்கள் பறக்கத் தொடங்கும் போதும், தரையிறங்கும் போதும் தற்போது நடைமுறையில் இருக்கும் நவீனகால பயணிகள் விமானங்களை விட அதிக ஒலியை எழுப்பாது என நம்புவதாக பூம் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. விமானத்தின் வடிவமைப்பை மேம்படுத்துவதன் மூலம் சோனிக் பூம் சத்தத்தையும் குறைக்கமுடியும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறது பூம் நிறுவனம்.
அடுத்த பெரிய பிரச்சனை எரிபொருள் நுகர்வு.
"சூப்பர்சோனிக் வேகத்தில் பறக்க வேண்டும் என்றால், அதிக சக்தி தேவை. அதற்கு அதிக எரிபொருள் தேவை".
"ஒட்டுமொத்த விமான துறைக்கும் தேவையான பயோ டீசலைத் தயாரிப்பதற்கு தேவையான உற்பத்தி திறன் வசதிகளில் உலகம் மிகவும் பின் தங்கி இருக்கிறது." இது ஒரு பெரிய பிரச்சனை என கூறுகிறார் அவர்.
கான்கார்டில் பயணிப்பது ஒரு சொகுசான பயணமாகக் கருதப்பட்டது. சாதாரண விமானங்களில் முதல் வகுப்பை விட கான்கார்ட்டில் பயணிக்க அதிக விலை கொடுக்க வேண்டி இருந்தது.
பயணிகள் வேகத்தை விரும்புவதாகவும், அதிவிரைவு விமானங்கள் மனிதர்களுக்கு மத்தியிலான இணைப்பை ஆழப்படுத்தும் எனவும், வியாபார ரீதியிலான உறவை வலுப்படுத்தும் எனவும், பூம் நிறுவனத்தின் ஆய்வு கூறுவதாக சவிட் கூறினார்.
ஓவர்ச்சரின் பயணக் கட்டணத்தை வழக்கமான பிசினஸ் வகுப்பு கட்டணம் அளவுக்கு வசூலித்தால்கூட லாபம் கிடைக்கும் என பூம் நிறுவனம் எதிர்பார்க்கிறது.
இருப்பினும், விமான கட்டணத்தை தீர்மானிக்கப் போவது யுனைடெட் விமான சேவை நிறுவனம்தான். அந்நிறுவனம் ஒரு விமானத்துக்கு 200 மில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்கிறது, அதற்கான லாபத்தை பார்க்க விரும்புகிறது.













