கொரோனா 3வது அலை யாரை பாதிக்கும்?

SOCIAL SHARE
Pin It

"உலகின் பல்வேறு நாடுகளிலும் மூன்றாவது அலை தாக்கியிருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் மூன்றாவது அலையைப் பார்த்திருக்கிறோம். நூறு ஆண்டுகளுக்கு முன்பு உலகைத் தாக்கிய ஸ்பேனிஷ் ஃப்ளூ பெருந்தொற்றுக் காலத்திலும் பெரிய அளவில் மூன்று அலைகள் உலக நாடுகளைத் தாக்கியிருக்கிறது. இந்த அனுபவங்களின் அடிப்படையில் கொரோனா பெருந்தொற்றிலும் மூன்றாவது அலையை எதிர்பார்த்திருக்க வேண்டியது அவசியமாகிறது" என்கின்றனர் மருத்துவ விஞ்ஞானிகள்.

பிரேசில் மற்றும் பிரிட்டனில் கண்டறியப்பட்ட கொரோனாவின் புதிய திரிபை வெள்ளெலிகளில் பரிசோதனை செய்ததில் அவை உடல் எடையைக் குறைப்பதுடன், மூச்சுக் குழாயில் பல்கிப் பெருகும் என்றும் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

"இந்தியாவில் அதிகமாகப் பரவி வரும் டெல்டா வகையைத் தவிர பிற திரிபுகள் வருவதன் காரணமாக மூன்றாவது அலை வருவது நிச்சயம். இந்த ஆண்டுக்குள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆயினும் உறுதியாகக் கணிக்க முடியாது" என்கிறார் தொற்றுநோய் நிபுணர்.

"குறைந்தபட்சம் 50 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டால் மட்டுமே கொரோனாவின் மூன்றாவது அலையைத் தடுக்க முடியும்" என்று கூறுகிறார் மருத்துவர். அரசிடம் இது வலியுறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கடந்த 7-ஆம் தேதி வரை சுமார் ஒரு கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டு டோஸ்களும் போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 21 லட்சம் மட்டுமே. இது மொத்த மக்கள் தொகையில் 3 சதவிகிதத்துக்கும் குறைவு.

ஒட்டுமொத்தமாக இந்தியாவை எடுத்துக் கொண்டால் 23 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன. ஆனால் 4.66 கோடி பேருக்கு மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசி கிடைத்திருக்கிறது. நாட்டின் எந்தப் பெரிய மாநிலத்திலும் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 10 சதவிகிதத்தைத் தாண்டவில்லை.

"மருத்துவ கட்டமைப்பில் முன்னிலையில் இருக்கும் தமிழ்நாடு, தடுப்பூசி போடுவதில் பின்தங்கியிருப்பது துரதிருஷ்டவசமானது. மூன்றாவது அலை வராமல் தடுப்பதில் இது மிகப்பெரிய சவாலாக இருக்கும்".

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்கா 63 சதவிகிதம் பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்கிறது. அங்கு பாதிப்பு குறைவதற்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதற்கும் இதுவே முக்கியமான காரணம்.

ஆனால் இந்தியாவில் பொதுமுடக்கங்கள் மூலமாகவே பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால் தளர்வுகள் அளிக்கும்போது தன்னிச்சையாகவே தொற்றும் அதிகரிக்கத் தொடங்கிவிடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். ஏற்கெனவே பிரேசில் போன்ற நாடுகளில் இதுபோன்ற நிலை ஏற்பட்டதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

"மூன்றாவது அலையில் தடுப்பூசி போடாதவர்கள் இணைநோய் இருப்பவர்கள், வயதானவர்கள் ஆகியோரே அதிகமாகப் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது".

மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகமாகப் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக பெற்றோர் மத்தியில் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. குழந்தைகளுக்கு இதுவரை தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டில் இருந்து பெரும்பாலான குழந்தைகள் இதுவரை வீட்டை விட்டு வெளியே சென்றிருக்க மாட்டார்கள். அவர்களிடம் கொரோனாவுக்கான எதிர்ப்பு ஆற்றல் உருவாகியிருக்க வாய்ப்பில்லை என்ற கருத்தும் பரவியிருக்கிறது.

தடுப்பூசி பற்றாக்குறை, புதிய வைரஸ் திரிபுகளின் பெருக்கம், கிராமப்புறங்களில் வலுவற்ற சுகாதாரக் கட்டமைப்பு, கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்க வேண்டிய கட்டாயம் போன்றவை அடுத்த கொரோனா அலையைக் கையாள்வதில் சவால்களாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

புதியவகைத் திரிபுகள் உருவாவதை உடனடியாகக் கண்டறிந்து கூறும் வகையிலான மரபீனி வரிசையைக் கண்டறியும் ஆய்வகங்கள் இந்தியாவில் மிகக் குறைவாகவே உள்ளன என மத்திய அரசின் ஆய்வுப் பிரிவில் பணியாற்றும் ஒரு அதிகாரி கூறுகிறார்.

இந்தியாவில் இதற்காக மொத்தம் 10 "Genome sequencing" ஆய்வகங்கள் இருக்கின்றன. இவையும் டெல்லி, தெலங்கானா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் போன்ற சில மாநிலங்களில் மட்டுமே அமைந்திருக்கின்றன. புதிய வகைக் கொரோனா திரிபுகளை விரிவாகக் கண்டறிந்து அவற்றைப் பரவ விடாமல் கட்டுப்படுத்துவதற்கு கூடுதலாக ஆய்வகங்கள் அவசியம் என்ற கோரிக்கை பரவலாக எழுந்திருக்கிறது.

கொரோனா பரவல் முடிந்துவிட்டது என்று ஒருபோதும் மகிழ்ந்துவிடக்கூடாது என்ற பாடத்தை கொரோனாவின் இரண்டாவது அலை கற்றுத் தந்திருக்கிறது. அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் ஆக்சிஜன் போன்ற அடிப்படைக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் அடுத்த அலையை எதிர்கொள்ள உதவும். "தேவையற்ற மருந்துகள்" பயன்படுத்தப்படுவதை அரசு தடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ARUNACHALAM