Editor's Choice

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் பத்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சரித்திரப் பதிவு செய்தார் ரபேல் நடால்.

உலக டென்னின்ஸ் தர வரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் ரஃபேல் நடால் (Rafael Nadal), தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் நோவக் ஜோகோவிச்சை (Novak Djokovic) தோற்கடித்து பட்டம் வென்றார்.

இறுதிப் போட்டியில் 7-5, 1-6, 6-3 என்ற செட்களில் Novak Djokovicஐ வீழ்த்தினார் நடால். இந்த ஆண்டு இத்தாலிய ஓபன் 2021 பட்டத்தை வென்ற நடால், King of Clay என்பதை மீண்டும் ஒருமுறை உலகுக்கு நிரூபித்தார்.

ரோம் நகரில் நடைபெற்ற இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் (Italian Open tennis series) ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் முதல் நிலை ஆட்டக்காரர்   ஜோகோவிச்சும், ஸ்பெயினை சேர்ந்த மூன்றாம் நிலை டென்னிஸ் வீரரான ரபேல் நடாலும் மோதினார்கள். 

முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் ரபேல் நடால் கைப்பற்ற, இரண்டாவது செட்டை 6-1 கணக்கில் கைப்பற்றினார் ஜோகோவிச். மூன்றாவது செட்டில் ரபேல் நடால் அதிரடியாக ஆடி 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.  

மொத்தம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் நீடித்த இறுதி ஆட்டத்தில் 7-5, 1-6, 6-3  என்ற செட் கணக்கில் ரபேல் நடால் வெற்றி பெற்று 10 முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

இரண்டு வாரத்தில் நடைபெறவிருக்கும் பிரெஞ்சு ஓபன் பட்டப் போட்டிகளுக்கு முன்னதாக ரஃபேல் நடால் இந்த வெற்றியை பதிவு செய்திருப்பது, அவருக்கு மிகப் பெரிய ஊக்கம் அளித்திருக்கிறது.

Editor's Choice

83 வயதான அமோ (Amou Haji), 65 ஆண்டுகளாக தனது உடலில் ஒரு சொட்டு நீர் (Water) கூட படாமல் தன்னை பாதுகாத்து வருகிறார். ஏனெனில் அவர் தண்ணீரைக் கண்டால் அச்சம்! குளித்தால் அவருக்கு நோய் வந்துவிடும் என்று பயப்படுகிறார்! 

அமோ ஹாஜிக்கும் சுத்தத்துக்கும்  ஏணி வைத்தாலும் எட்டாத தூரம். அவருக்கு சுத்தம்  என்றாலே அலர்ஜி! தான் குளிக்கவில்லை என்பதோடு, தான் பயன்படுத்தும் பொருட்களையும் சுத்தம் செய்யும் பழக்கமே அவருக்கு கிடையாது. ஈரானில் வசிக்கும் அமோ ஹாஜி, கடந்த 65 ஆண்டுகளாக குளிக்கவில்லை என்று கூறுகிறார். அமோ ஹாஜியின் வாழ்க்கை முறையும் அதிர்ச்சளிப்பதாகவே இருக்கிறது.  

அவரைப் பொறுத்தவரை,  குளிக்காமல் அழுக்காக இருப்பதால் தான் ஆரோக்கியமாக இருக்கிறார் என்கிறார். ஆனால்,  இத்தனை ஆண்டுகளாக குளிக்காமல் நாற்றத்துடன் இருக்கும் Amou Haji, இதன் காரணமாக கிராமத்திற்கு வெளியே தான் தங்க வேண்டியிருக்கிறது.  

இந்த அழுக்கு மனிதரின் உணவுப் பழக்க வழக்கங்களும் வித்தியாசமானதாகவே இருக்கிறது. இறந்த விலங்குகளின் அழுகிய இறைச்சியை சாப்பிடுவதே அவருக்கு பிடிக்குமாம்! அந்த விலங்குகள் விபத்தில் இறந்திருந்தாலும் சரி, இயற்கை வழியில் இறந்திருந்தாலும் சரி, அது பற்றி அவருக்கு கவலையில்லை! அசைவ உணவையே விரும்பி சாப்பிடும் அமாவு, அழுகிய உள்நாட்டு கீரைகள் மற்றும் காய்கறி உணவுகளையும் விரும்புகிறார். அமோவுக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட சுவையான உணவு சாப்பிட பிடிக்கவே பிடிக்காது!

Amou ஹாஜிக்கு சொந்தமாக வீடு கூட இல்லை. அவர் தனது கிராமத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கும் வெட்டவெளியில் வசிக்கிறார்.  இருப்பினும், கிராமவாசிகள் Amou-க்காக ஒரு சிறிய குடிசையை கட்டிக் கொடுத்துள்ளனர். ஆனால் அவருக்கு வெட்டவெளியே பிடித்திருக்கிறதாம்.  இவ்வளவு அழுக்காக இருந்தாலும், அழுகிய மாமிசத்தையும், காய்கறிகளையும் சாப்பிட்டாலும் அவருக்கு எந்தவித நோயோ தொற்றொ இல்லை என்பது அதிசயம் தான்.

அமாவுக்கு சிகரெட் புகைப்பது மிகவும் பிடிக்குமாம்… சிகரெட் புகைப்பதிலும் அமோ வித்தியாசமானவர் தான்.  ? தனது சிகரெட் பைப்பில், விலங்குகளின் உலர்ந்த மலத்தை போட்டு புகைப்பாராம்! இந்த உலகின் அனைத்து வசதிகளையும் துறந்துவிட்டு, இப்படி வாழ்வது தான் தனக்கு பிடித்திருப்பதாக உலகின் அழுக்கு மனிதர் கூறுகிறார்.

Editor's Choice

ஆன்லைனில் நிதி பரிமாற்றத்திற்கான பிரபலமான தேசிய மின்னணு நிதி பரிமாற்ற அமைப்பு (நெப்ட்) தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக வரும் சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரை 14 மணி நேரம் பொதுமக்கள் பயன்படுத்த முடியாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (நெப்ட்) என்பது இந்திய அளவிலான ரிசர்வ் வங்கியின் சொந்தமான மற்றும் இயக்கப்படும் நாடு தழுவிய மையப்படுத்தப்பட்ட பணப்பரிமாற்ற சேவை முறையாகும்.

இது ஆண்டின் அனைத்து நாட்களிலும் மக்களுக்கு கிடைத்து வருகிறது.

செயல்திறன் மற்றும் பின்னடைவை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்ட நெப்ட்இன் தொழில்நுட்ப மேம்படுத்தல் 2021 மே 22 ஆம் தேதி வணிகத்தை முடித்த பின்னர் திட்டமிடப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன்படி, 2021 மே 23, ஞாயிற்றுக்கிழமை அன்று 00:01 மணி முதல் 14:00 மணி வரை நெப்ட் சேவை கிடைக்காது. இந்த காலகட்டத்தில் ஆர்டிஜிஎஸ் அமைப்பு வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும்” என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஆர்டிஜிஎஸ் அமைப்பிலும் இதேபோன்ற தொழில்நுட்ப மேம்படுத்தல் ஏப்ரல் 18, 2021’இல் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது. உயர் மதிப்பு நிதி பரிமாற்றங்களுக்கு ஆர்டிஜிஎஸ் வசதி பயன்படுத்தப்படுகிறது. நெப்ட் என்பது நிகழ்நேர நிதி பரிமாற்ற வசதி ஆகும். நெப்ட் தற்போது நாள் முழுவதும் அரை மணி நேர இடைவெளியில் தொகுப்பாக இயங்குகிறது.

நிதி பரிமாற்றத்தைத் தவிர, அட்டை வழங்கும் வங்கிகளுக்கு கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை செலுத்துதல், கடன் ஈ.எம்.ஐ செலுத்துதல் மற்றும் உள் அந்நிய செலாவணி பணம் அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு பரிவர்த்தனைகளுக்கும் நெஃப்ட் அமைப்பு பயன்படுத்தப்படுகிறது.

Editor's Choice
69-வது ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் ஹாலிவுட் அரங்கில் உள்ள ராக் ஓட்டல் அண்ட் கேசினோவில் நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவலுக்கு இடையில் மிகுந்த பாதுகாப்புடன் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி நேற்று நடைபெற்றது.
 
74 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் மெக்சிகோ நாட்டை சேர்ந்த  26 வயதான ஆண்ட்ரியா மெஸாவும், பிரேசிலின் ஜூலியா காமாவும் (28) இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இதில் பிரபஞ்ச அழகியாக மெக்சிகோவின் 26 வயதான ஆண்ட்ரியா மெஸா அறிவிக்கப்பட்டார்.
 
இந்நிலையில், பிரபஞ்ச அழகி போட்டியில் மியான்மர் நாட்டை சேர்ந்த துசர் விண்ட் லவின் பங்கேற்றார். இவர் இறுதி சுற்றுக்கு தகுதி பெறாத போதும் அதற்கு முந்தைய சுற்றுகளில் பங்கேற்றார். அப்போது, அழகி போட்டி நடைபெறும் மேடையில் துசர் விண்ட் லவின் தனது கையில் ஒரு பதாகையுடன் வந்தார். அந்த பதாகையில் ’மியான்மருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என எழுதப்பட்டிருந்தது. 
 
மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரில் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
மியான்மரில் ராணுவம் நடத்திவரும் தாக்குதல்கள் மற்றும் வன்முறையை உலகநாடுகளுக்கு தெரியப்படுத்தும் வகையிலும், உலக நாடுகள் தங்களுக்க்கு உதவவேண்டும் என்பதற்காகவே பிரபஞ்ச அழகி போட்டியில் ’மியான்மருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என்ற பதாகையுடன் துசர் விண்ட் லவின் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Editor's Choice

முகக்கவசங்களை நாம் அனைவரும் அணிந்தாலும், அவற்றை எப்படி சரியான முறையில் அணிய வேண்டும் என்பது பலருக்குத் தெரிவதில்லை. இதன் காரணமாக, நாம் பல தவறுகளை செய்து விடுகிறோம். இதனால், பலர் முகக்கவசம் அணிந்திருந்தாலும் தொற்றுக்கு ஆளாகிறார்கள்.

1. முகக்கவசத்தை அணிந்தபின்னர், பலர் அதை மீண்டும் மீண்டும் தொடுவதை நாம் அடிக்கடி பார்கிறோம். இது மிகப்பெரிய தவறாகும். முகக்கவசத்தின் வெளிப்புறத்தில் நோய்த்தொற்று பரவும் வைரஸ்கள் இருக்கலாம். எனவே முகக்கவசத்தை மீண்டும் மீண்டும் தொடுவது ஆபத்தை விளைவிக்கும். மேலும், ஒரே முகக்கவசத்தை மீண்டும் மீண்டும் அணிய வேண்டாம்.  ஏனென்றால் நாம் முகக்கவசத்தை அகற்றி கிருமி உள்ள இடத்தில் வைத்தால், அதை மீண்டும் அணிவதன் மூலம், தொற்று மூக்கு மற்றும் வாய் வழியாக உடலில் நுழைய வாய்ப்புள்ளது. 

2. மூக்கை கூட மூடாமல் சிலர் முகக்கவசம் அணிகிறார்கள். இது பெரிய தவறாகும். அமெரிக்காவின் சி.டி.சி (நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்) படி, மூக்கு, வாய் மற்றும் கன்னம் ஆகியவற்றை உள்ளடக்கிய முகக்கவசத்தை தான் மக்கள் அணிய வேண்டும். முகக்கவசம் முகத்தில் நன்றாக பொருந்த வேண்டும். முகக்கவசத்தை சரியாக அணியாவிட்டால், கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.

3. முகக்கவசத்தை தொட்ட பிறகு ஒவ்வொரு முறையும் உங்கள் கைகளைக் கழுவ வேண்டும். முகக்கவசத்தை அணிவதற்கு முன்பும், அதை நீக்கிய பின்னும், கைகளை நன்கு சோப்பு நீரில் அல்லது ஒரு சானிட்டைசர்  மூலம் சுத்தம் செய்வது மிகவும் முக்கியமாகும். முகக்கவசத்தை அணிவதற்கு முன்பு கைகளைக் கழுவுவது முகக்கவசத்தில் தொற்று வைரஸ் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யும். மேலும் முகக்கவசத்தை அகற்றிய பின், உங்கள் கைகளைக் கழுவுவது முகக்கவசத்தில் வைரஸ் இருந்தாலும் அதை நீங்கள் பரப்பாமல் இருப்பதை உறுதி செய்யும். 

4. முகக்கவசத்தை அணிவது மட்டும் போதாது. சுத்தமான முகக்கவசத்தை அணிவது முக்கியமாகும். டிஸ்போசபில் முகக்கவசங்களுக்கு இது தேவையில்லை. ஆனால் நீங்கள் துணியால் ஆன மறுபயன்பாட்டு முகக்கவசத்தைப் பயன்படுத்தினால், அவற்றை வெதுவெதுப்பான நீர் மற்றும் சோப்பால்  நன்கு சுத்தம் செய்து வெயிலில் உலர வைக்க வேண்டும்.  சுத்தம் செய்யாமல் மீண்டும் மீண்டும் முகக்கவசத்தை அணிவது தொற்றுநோயை அதிகரிக்கும்.

5. கோடைகாலத்தில் அடிக்கடி வியர்ப்பதால் நீண்ட நேரம் முகக்கவசத்தை அணிவதால் முகக்கவசம் ஈரமாகிவிடும். முகக்கவசம் ஈரமாகிவிட்டால், உடனடியாக அதை மாற்றவும். கொரோனா வைரஸிலிருந்து உங்களைப் பாதுகாக்க ஈரமான முகக்கவசம் பயனுள்ளதாக இருக்காது என்று WHO அறிவுறுத்தியுள்ளது. எனவே முகக்கவசம் ஈரமாகி விட்டால் அதை உடனடியாக மாற்றி விடவும். 

Editor's Choice

1997-ல் விடுதலைப்புலிகளை மையப்படுத்தி மல்லி என்ற படத்தை சந்தோஷ் சிவன் இயக்கினார். டெரரிஸ்ட் என்ற பெயரில் அப்படம் உலகம் முழுவதும் வெளியானது. 19 வயது நிரம்பிய மல்லி என்ற இளம் பெண் மனித வெடிகுண்டாக மாறி, அரசியல் தலைவரை கொலை செய்ய புறப்படுவது கதை. மனித வெடிகுண்டாக மாறுவது என்று தீர்மானித்த பிறகே மல்லிக்கு தான் கர்ப்பமாக இருப்பது தெரியவரும். உயிரின் விலையை அறிந்து கொள்ளும் மல்லி தனது முடிவை மாற்றினாளா இல்லையா என்பது கதை.

ஈழப்போர் என்பது அசாதாரணமான நெருக்கடி. அந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் மனிதர்கள் எடுக்கும் முடிவுகளை, அவர்களின் நியாயங்களை, சராசரி மனிதர்களின் உணர்வுகளுடனும், அறங்களுடனும் ஒப்பிட்டு எடுக்கப்படும் திரைப்படங்கள், பாதிக்கப்பட்ட மனிதர்களின் உணர்வுகளை மதிக்கவும், தெரிந்து கொள்ளவும் தவறிவிடுகின்றன. அந்த தவறுதல் தான் மல்லி திரைப்படமும்.

இதுபோன்ற படங்கள் வெளியாகும் போது சர்ச்சைகளும், எதிர்ப்புகளும் கிளம்பும். அப்படி 2014 -ல் எதிர்ப்பை சந்தித்த ஈழத்தமிழர் குறித்த திரைப்படம், இனம்.

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கிய இந்தப் படத்தை லிங்குசாமி விநியோகித்திருந்தார். எதிர்ப்பை மீறி வெளியான படம் ஒரே வாரத்தில் திரையரங்குகளிலிருந்து தூக்கப்பட்டது.

இனம் திரைப்படத்துக்கு எழுந்த எதிர்ப்புக்கு மல்லியும் ஒரு காரணம். படம் வெளியாகி 7 வருடங்கள் கழிந்த நிலையில் இனம் படத்தை ஓடிடியில் சந்தோஷ் சிவன் வெளியிடுகிறார். படம் எந்த ஓடிடி தளத்தில், எப்போது வெளியாகும் என்பதை அவர் குறிப்பிடவில்லை.

இனத்தில் கருணாஸ், கரண், சரிதா, ஷியாம் சுந்தர் உள்பட பலர் நடித்திருந்தனர்.

பக்கம் 20 / 90