ரெம்டெசிவிர் மருந்து ஒரு ஆன்டிவைரஸ் மருந்தாகும். எபோலோ வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட இந்த மருந்து, தற்போது கொரோனா வைரஸ் சிகிச்சைக்கும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதித்து சிகிச்சைப் பெற்று வருபர்களுக்கு இந்த மருந்தை பயன்படுத்தும்போது, குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
“ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நபர்களுக்கே இந்த மருந்து தேவைப்படுகிறது. கரோனா தொற்று தீவிரமடைந்த பின் ரெம்டெசிவிர் மருந்து கொடுத்தாலும் பயன் இல்லை. இது வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் மருந்து மட்டுமே” என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ரெம்டெசிவிர் மருந்து பற்றி www.covid19treatmentguidelines.nih.gov தளத்தில், தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், “ரெம்டெசிவிர் வைரஸ் உடலுக்குள் பெருகுவதைக் கட்டுப்படுத்துகிறது. ரெம்டெசிவிர் SARS-CoV-2 (கொவிட்-19) வைரஸ் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. இந்த மருந்து சிகிச்சைக்கான அளிக்கப்பட்ட விலங்குகளுக்குக் குறைவான நுரையீரல் தொற்றே ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுக்கும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதிற்கு மேற்பட்ட 40 கிலோ எடை கொண்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து அளிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கருவுற்றிருப்பவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து அளிக்கப்படுவதில்லை. ஆனால் சில விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ரெம்டெசிவிர் மருந்தைப் பொறுத்தவரையில் சார்ஸ் (SARS ) மற்றும் மெர்ஸ் (MERS) வைரஸ்களுக்கு எதிராக போராட வல்லது. இந்த இரண்டு வைரஸ்களும் கொரோனா வைரஸை ஏற்படுத்தி வரும் SARS-CoV-2 வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது என்பதால், ரெம்டெசிவிர் மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ரெம்டிசிவியர் மருந்தை அமெரிக்காவைச் சேர்ந்த கிளீயட் சயின்ஸ் நிறுவனம் கண்டுபிடித்து எபோலோ வைரஸூக்கு எதிராக பயன்படுத்தியது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு வாரியம், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு எமர்ஜென்சியில் இருப்பவர்களுக்கு இந்த மருந்தை பயன்படுத்தலாம் என அனுமதி வழங்கியது. இந்த அனுமதி தற்காலிகமானது என்றும், நோயாளிகளை ஆபத்து கட்டத்தில் இருந்து மீட்டு கொண்டுவருவதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தெளிவுபடுத்தியது. பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து 5 முதல் 10 நாட்களுக்கு ரெம்டிசிவியரை பயன்படுத்தலாம் எனக் கூறியுள்ள எப்.டி.ஏ இந்த தடுப்பு மருந்து தற்போது வரை ஆய்வில் மட்டுமே இருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
ரெம்டெசிவிர் மருந்தை இந்தியா உள்ளிட்ட 127 நாடுகள் பயன்படுத்திக்கொள்ள கிளீயட் சயின்ஸ் நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் 4 நிறுவனங்களுக்கு இந்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. முறையான தடுப்பூசி மற்றும் மருந்துகள் கண்டுபிடிக்கும் வரை மட்டுமே ரெம்டெசிவிர் மருந்தை உற்பத்தி செய்து கொள்ள முடியும் என்ற கட்டுப்பாட்டையும் கிளீயர் சயின்ஸ் நிறுவனம் விதித்துள்ளது.
ரெம்டெசிவிர் என்பது நியூக்ளோசைட் அனலாக். வைரஸ் ஒருமுறை உடலுக்கு நுழைந்தவுடன் ஆரோக்கியமான செல்களுடன் இணைந்து இரண்டு, மூன்றாக பெருக தொடங்குகிறது. ரெம்டெசிவிர் தடுப்பு மருந்து செலுத்தப்படும்போது, இந்த மருந்து உடலுக்குள் இருக்கும் வைரஸ் செல்களைப்போல் உருமாற்றிக்கொண்டு, அந்த செல்கள் மீண்டும் பெருகுவதை தடைசெய்கிறது. வைரஸ் பெருகுவது தடையாகும்போது, பாதிப்பு குறையத் தொடங்கும்.
ரெமிடிசிவியர் மருந்தை குறிப்பிட்ட நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அனைத்து நோயாளிகளுக்கும் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. இந்த மருந்து இரண்டு விதமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தவல்லது. அதாவது, கல்லீரலில் என்சைம் பெருக்கத்தில் மாற்றத்தை உண்டாக்கும். இதனால், ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்தியவர்கள் தங்களின் கல்லீரலை பல்வேறு ரத்தசோதனைகள் மூலம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. மற்றொன்று ஒவ்வாமை காரணமாக வாந்தி, படபடப்பு, வியர்வை மற்றும் குறைவான ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.













