சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை உணவில் நார்ச்சத்து என்று ஒன்று தேவையேயில்லை என்று கூறி வந்த ஆங்கில மருத்துவர்கள் கூட இன்று நம் உணவில் நார்ச்சத்து இருக்க வேண்டியது அவசியம் என்பதை ஒப்புக் கொள்கின்றனர்.
நார்ச்சத்து என்றால் என்ன? பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கொட்டைகள், விதைகள் போன்ற தாவரப் பொருட்களில் அவற்றின் வடிவத்தை, உருவினை, நிலைப்படுத்த உதவும் வகையில் அமைந்துள்ள ஒரு வகை கார்போஹைட்ரேட்டுகளே நார்ச்சத்துகள். வயிற்றிலும் குடலிலும் செரிக்கப்படும் ஸ்டார்ச், (மாவுப்பொருள்) போல நார்ச்சத்துகள் செரிக்கப்படுவதில்லை. வேதியியல் முறையில் தெளிவாக விளக்க முடியாத, எளிதில் கரையாத இவ்வகைக் கார்போஹைட்ரேட்டுகளில் லிக்னினுடன், செல்லுலோஸ், ஹெமிசெல்லுலோஸ், பெக்டின், இதர தாவர கோந்து வகைகள் போன்ற பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றில் சில நீரில் கரையும் தன்மை கொண்டவை. மற்றவை நீரில் கரையாதவை. இவையனைத்தும் செப்பமுறா நார்ப்பொருட்கள் என்று அழைக்கப்படுகின்றன. நார்ப்பொருட்கள் தமது கரை திறனுக்கு ஒப்ப உடலினுள் செயல்படுகின்றன.
கரையும் நார்ப்பொருள்களால் நல்ல பல நன்மைகள் ஏற்படுகின்றன. அரிசி, கோதுமை போன்ற தானியங்களிலிருந்து தேவையற்றவையென நம்மால் ஒதுக்கித் தள்ளப்படுகின்ற உமி, தவிடு போன்றவற்றில் கரையும் நார்ப்பொருள்கள் பெருமளவில் உள்ளன. இவை இரத்தக் கொலஸ்ட்ராலைக் குறைப்பதில் உதவுகின்றன. இவை தவிர அகர் அகர் எனப்படும் கடற்பாசி, றிsஹ்றீவீuனீ சிலியம் போன்ற தாவரப் பொருள்களிலும் இந் நார்ச்சத்து மிகுந்து காணப்படுகிறது.
கரையாத நார்ச்சத்துகள் வயிறு மற்றும் குடலினுள் செல்லுகின்ற போது ஒரு கடற்பஞ்சு அல்லது ஸ்பாஞ்சு போல் செயல்பட்டு தண்ணீரைத் தம்முள் உறிஞ்சிக் கொள்கின்றன. இதனால் வயிற்றிலிருக்கும் இரையின் பருமன் அதிகரிக்கிறது. குடலினுள் உணவு பயணிக்கின்ற விரைவு கட்டுப்படுத்தப்படுகிறது. சில நார்ப் பொருட்கள் பெருங்குடலினுள் பொங்கி நுரைத்து மலத்தின் அளவை அதிகரிக்கின்றன. இதனால் எளிதில் மலம் கழிய ஏதுவாகிறது. அத்துடன்ங டைவர்டிகுலம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது. காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள், கிழங்குகள் ஆகியவற்றில் இது நிறைந்து காணப்படுகிறது.
குடலில் உள்ள நார்ப் பொருட்கள் உணவிலுள்ள சர்க்கரைச் சத்து இரத்தத்தில் சேருவதைத் தாமதப்படுத்துகின்றன. இதனால் கணையம் அதிகச் சிரமமின்றிச் செயல்பட முடிகிறது. “நார்ச்சத்து மிக்க உணவினை உட்கொண்ட சர்க்கரை நோய்க்காரர்களின் இன்சுலின் தேவை 25 சதவிகிதம் குறைந்தது” என்று கென்ட்டகி பல்கலைக் கழகத்தில் டாக்டர் ஜேம்ஸ் ஆன்ட்டர்சன் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
நவீன சத்து மிகுந்த இயற்கை உணவுகளையும் பச்சைக் காய்கறிகளையும் உண்ணுகின்ற ஆப்பிரிக்க மக்களிடையே சர்க்கரை நோய் குறைவாக இருப்பது நோக்குதற்குரியது. இது மட்டுமின்றி சென்ற சில ஆண்டுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் இருந்து நார்ப் பொருள்கள் மனித உடற்செல்கள் இன்சுலினைத் திறம்படக் கிரகிக்க உதவுகின்றன என்பது தெரியவந்துள்ளது. இதயத் தாக்கையும் பிற இதய நோய்களையும் தடுப்பதில் நார்ச்சத்து பெருமளவு உதவுகிறதென்றும், பித்த உப்புகளை நார்ச்சத்து தன்னுள் கவர்ந்து கொள்வதால் அவை இரத்தத்தினுள் சுவரப்பட்டு உட்செல்வது என்றும் தடுக்கப்படுகிறது. இதனால் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறதென்றும் இவ்வாய்வுகள் உறுதிபடத் தெரிவிக்கின்றன. ஆய்வுக்காக உணவுப் பொருள்களுடன் சேர்ந்து பெக்டின், தாவர கோந்து போன்றவை உட்கொள்ளப்பட்ட போது இரத்தச் சர்க்கரையின் அளவு குறைந்திருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. வெந்தயத்தில் 40 சதவிகிதம் நார்ப்பொருள் இருக்கிறதென்றும் அது இரத்த சர்க்கரையையும் கொலஸ்ட்ராலையும் குறிப்பிடத்தக்க விதத்தில் குறைக்கிறதென்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
நார்ப்பொருள்களால் ஏற்படக்கூடிய மற்றொரு குறிப்பிடத்தக்க நன்மை பெருங்குடல் புற்றைத் தவிர்ப்பதில் அவை பெரும்பங்கு வகிக்கின்றன. இந்திய, சீன, ஆப்பிரிக்க மக்களுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க மக்களிடையே பெருங்குடல் புற்றுநோய் அதிகமாகக் காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்கர்களது உணவில் நார்ப் பொருள்கள் மிகக் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம் என்று பல ஆய்வர்கள் கருதுகின்றனர். அதே போன்று நார்ப்பொருள்கள் உணவில் அதிகரிக்கின்ற போது கொழுப்பும் பொருள்கள் குறைகின்றன. அதன் காரணமாகவும் நார்ப் பொருள் உண்பவர்களிடையே பெருங்குடல் புற்றுநோய் குறைவாக இருக்கலாம் என்றும் சில ஆய்வுகள் கருதுகின்றனர். எது எவ்வாறாயினும் உணவில் நார்ப் பொருள்கள் கட்டாயத் தேவை என்பது மட்டும் தெளிவாகியுள்ளது.
மனிதன் இயற்கை உணவுகளை மிகுதியாக உண்டு வந்த காலங்களில் அவனுக்கு நார்ச்சத்தத் தடையின்றிக் கிடைத்து வந்திருக்கிறது. நாகரீகம் வளர வளர, நாக்கின் சவை கருதி மக்கள் செயற்கை உணவுகளின் பால் செல்லத் தொடங்கி விட்டனர். விளைவு உடல் நலத்துக்கு இன்றியமையாத நார்ப்பொருள்கள் ஒதுக்கப்பட்டுவிட்டன. நடைமுறை வாழ்வில் நார்ச்சத்தின் தேவை மறக்கப்பட்டுவிட்டது. சாதாரணமாக ஒருவரது தினசரி உணவில் 30 முதல் 35 கிராம் வரை நார்ச்சத்து இடம் பெற வேண்டும். ஆனால் மிகப் பெரும்பான்மையானவர்களது உணவில் இது சிறிது கூட இருப்பதில்லை. இன்றைய நிலையில் சராசரியாக ஆண்கள் 17 முதல் 20 கிராம் வரையும் பெண்கள் 12 முதல் 15 கிராம் வரையும். நாளன்றுக்கு நார்ச்சத்து உட்கொள்வதாக கணக்கிடப்பட்டுள்ளது. பலரது உணவில் நார்ப் பொருள் இல்லாது போவதால் இதைக் கட்டாயமாக உட்கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதன் காரணமாக பொடி வடிவிலும் மாத்திரை வடிவிலும் நார்ப்பொருள்கள் குப்பியில் அடைத்து விற்கப்படுகின்றன. இதில் ஒரு வேடிக்கை பாருங்கள்! செயற்கை முறையில் செய்யப்பட்ட உணவுகளை உண்பதால் ஏற்படுகின்ற ஒரு குறைபாட்டுக்கு திரும்பவும் ஒரு செயற்கை முறைத் தீர்வு.
நாவின் சுவை கருதியும், நாகரீகத்தின் பெயராலும் உண்ணப்படுகின்ற செயற்கை முறையில் தயாரிக்கப்படும் பிரெட், சாக்லேட், சிப்ஸ், பிஸ்கட், ஐஸ்கிரீம் மற்றும பிற வகை இனிப்புகள், காரங்கள் உண்பதைக் குறைத்து அதற்கு மாற்றாக உயர் விகித நார்ப்பொருட்கள் கொண்ட உணவுகளை உண்ணப் பழகுதல் வேண்டும். உயர்விகித நார்ப் பொருள்கள் என்றால் என்னவென்று கேட்கத் தோன்றும். அதாவது ஒருவர் உண்ணுகின்ற உணவில் சாதாரணமாக இருக்கக் கூடிய நார்ப்பொருளைப் போன்று 3 மடங்கு நார்ப்பொருள் உள்ளவையே உயர்விகித நார்ப்பொருள் உணவு. கைக்குத்தல் அரிசி, தீட்டப்படாத கோதுமை, சாமை, வரகு, ராகி போன்ற தானியங்கள், பீன்ஸ், துவரை, பாசிப்பயறு, வாழைப்பூ, காலிப்ளவர், முள்ளங்கி போன்ற காய்கறிகள். அகத்தி, முருங்கை, பசலை, பொன்னாங்கண்ணி, வல்லாரை போன்ற கீரைகள். ஆப்பிள் கொய்யா, திராட்சை, சப்போட்டா, ஆரஞ்சு போன்ற பழங்கள் ஆகியவை உயர் விகித நார்பபொருள் உணவுகளாகும்.
நார்ச்சத்துப் பெற நாம் செய்ய வேண்டியதென்ன?
இயன்ற வரை இயற்கை உணவுகளை உண்ணத் தொடங்க வேண்டும். முடிந்த வரை சமைக்காமலும் அப்படி இயலாவிட்டால் சிறிதளவு சமைத்தும் உண்ணலாம்.
நாளும் ஒன்றிரண்டு வகைப் பழங்களை உண்ண வேண்டும்.
உருளைக்கிழங்கைத் தோல் சீவாமல் நன்கு தேய்த்துக் கழுவி விட்டு ஆவியில் அவித்து தோலை நீக்காமல் சாப்பிடலாம்.
பழங்களைத் தோல் சீவாமல் நன்கு கழுவி விட்டுச் சாப்பிடலாம்.
மைதா ரொட்டிக்குப் பதிலாக கோதுமை ரொட்டியைப் பயன்படுத்தலாம்.
கேரட், முள்ளங்கி, வெள்ளரி, தக்காளி, முட்டைகோஸ், காலிஃப்ளவர் போன்றவற்றை எலுமிச்சைசாறு பிழிந்து பச்சையாக உண்ணலாம்.
வெங்காயம், வெள்ளரி, நூக்கல், டர்னிப், செலரி, வெங்காயத் தாள் ஆகியவற்றைத் தயிர்ப்பச்சடி செய்து உண்ணலாம்.
நிலக்கடலை, அக்ரூட், பாதாம் பருப்பு, கிஸ்மிஸ் பழம் போன்றவற்றில் ஒன்று உண்ணலாம்.













