உத்தர பிரதேசம் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகளவில் நடப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. சில சம்பவங்கள் தேசிய அளவில் பேசபடுகின்றன. குறிப்பாக உன்னாவ் மாவட்டத்தில் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இப்போது இதே மாவட்டத்தில் பாபுரா கிராமத்தில் கால்நடைகளுக்கு தீவனம் கொண்டு வர வயல்வெளிக்கு சென்றுள்ளனர் மூன்று இளம் பெண்கள். வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவர்களது சகோதரர் வயல்வெளிக்கு சென்றார். அங்கு இரண்டு பேர் சடலமாக கிடந்தனர். மற்றொரு பெண் உயிருக்கு போராடினார். அதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இறந்த பெண்கள் கை கால்கள் கட்டப்பட்டு இருந்ததாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் இது கொலையா இருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர்.
''அனைத்து தரப்பினரப்பிடமிருந்து வாக்குமூலம் பெற்றுள்ளோம். இறந்த பெண்களின் உடலில் காயங்கள் இல்லை. ஆனால் அவர்கள் உடல் கட்டப்பட்டு இருந்ததாக அவர்களது சகோதரர் தெரிவித்தார். ஆனால் நாங்கள் வரும் முன்பே உடல்களை எடுத்து சென்றுவிட்டனர். மேலும் அவர்களின் வாயில் வெள்ளையாக திரவம் ஒன்று படிந்து இருந்தது. இதனால் விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என போலீசார் கூறுகின்றனர்.
இந்த விவகாரம் டுவிட்டரில் #Save_Unnao_Ki_Beti என்ற ஹேஷ்டாக்கில் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. பலரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களையும், ஆளும் யோகி ஆதித்யநாத் அரசையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இது நிச்சயமாக கொலையாக தான் இருக்கும், ஏனென்றால் இறந்த பெண்கள் உடல்கள் கட்டபட்டு இருந்தன. இதுப்பற்றி போலீசார் நியாயமான முறையில் விசாரிக்க வேண்டும் என கருத்து பதிவிட்டுள்ளனர். மேலும் பெண்களுக்கு எதிராக நடக்கு வன்முறைகளை தடுக்க முடியவில்லை என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இதனிடையே இறந்த பெண்களின் கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் யாரையும் அரசியல் கட்சியினரையோ அல்லது பிற அமைப்பை சேர்ந்தவர்களையோ சந்திக்காத வண்ணம் தடுப்பு வேலிகளை அமைத்துள்ளனர். மேலும் சிலர் அங்கு போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளனர். குறிப்பாக இதை சம்பவத்தை சிபிஐ., விசாரிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.













