மும்பையில், மகன் இறந்த நிலையில், பேத்தியின் கல்விக்காக சொந்த வீட்டை விற்ற, 74 வயது முதியவரின் நிலை, சமூக வலைதளங்களில் பரவியது. பொதுமக்கள் உதவியால், அவருக்கு, 24 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.
மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த தேஸ்ராஜ், 74, இந்த தள்ளாத வயதிலும் வாடகை ஆட்டோ ஓட்டுகிறார். இவரது மகன் ஆறு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளை காப்பாற்றும் நிலை, தேஸ்ராஜுக்கு ஏற்பட்டது. வேறு வழியின்றி ஆட்டோ ஓட்டத் துவங்கினார். இவரது பேத்தி, பிளஸ் 2 தேர்வில், 80 சதவீத மதிப்பெண் பெற்றார்.
டில்லியில், பி.எட்., படிக்க விரும்பிய பேத்திக்கு, கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் தேஸ்ராஜ் தவித்தார். தாங்கள் வசித்த சொந்த வீட்டை விற்று, பேத்தியின் படிப்புக்கு பணம் செலுத்தினார். இவரது நிலை அறிந்த சிலர், சமூக வலைதளத்தில், இவரது கதையை பதிவிட்டனர். இந்த வீடியோ, 'பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து, பொதுமக்கள் தரப்பில் நிதி குவியத் துவங்கியது.
முடிவில், பொதுமக்கள் உதவியால் தேஸ்ராஜுக்கு, 24 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. இது குறித்து அவர் கூறும்போது, ''என் பேத்தி அதிக மதிப்பெண் வாங்கிய நாள் முழுதும், பொது மக்களிடம் கட்டணம் பெறாமல் ஆட்டோ ஓட்டினேன். இப்போது கிடைத்துள்ள பணம், என் பேரக்குழந்தைகளின் எதிர்காலத்துக்கு உதவும்,'' என்றார்.













