பிரபல மெத்தை நிறுவனம் நிம்மதியான தூக்கம் பற்றிய ஆய்வை ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகிறது.
தங்களது ஆய்வுக்காக 100 நாள் தூங்கும் போட்டியையும் கடந்த ஆண்டு முதல் நடத்தி வருகிறது. இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் தினமும் 9 மணி நேரம் தூங்கி எழ வேண்டும். இதுதான் போட்டியாளர்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை. என்னது தூங்கி எழுந்தால் போதுமா.. இப்படி ஒரு போட்டியா என ஆச்சர்யப்பட வேண்டாம். ஏற்கனவே கடந்தாண்டு இதன் முதல் சீசன் நடந்து முடிந்தது. தற்போது நடைபெற உள்ளது இரண்டாவது சீசன் ஆகும்.
இதில் பங்கேற்க விரும்புவர்களுக்கு இரண்டு தகுதிகள் மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது. அதில் முதலாவது ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அடுத்தது, படுத்த 10 - 20 நிமிடங்களுக்குள் தூங்குபவராக இருக்க வேண்டும்.
பிக் பாஸ் நிகழ்ச்சியைப் போலவே மொத்தம் 100 நாட்கள் இந்த போட்டி நடத்தப்படும். தினமும் எந்தவித இடையூறும் இல்லாமல் தூங்குபவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 1 லட்சம் சம்பளமாக வழங்கப்படும். இறுதியில் இந்த நிகழ்வில் பங்கேற்றவர்களில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ. 10 லட்சம் பரிசுப்பணமும், சாம்பியன் என்ற பட்டமும் தரப்படும்.
இந்த ஆய்வில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருக்கிறார்கள்.













