இந்தியாவில் வாழச் சிறந்த நகரம் குறித்து ஆண்டு தோறும் அனைத்து மாநிலங்களிலும் ஆய்வு நடத்தப்படுகிறது. அதில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சிறந்த இடங்களை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் நடத்துகிறது. இந்த நிலையில் நடப்பாண்டில் தமிழகத்தில் இருந்து சென்னை, கோவை உட்பட 10க்கு மேற்பட்ட மாநகராட்சிகளின் பெயர்கள் இடம்பெற்றன. இந்த ஆய்வில், நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் மக்களின் வாழ்க்கை திறன், சுகாதார மேம்பாடு, திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த நகரங்களுக்கான பட்டியலை மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் எச்.எஸ்.பூரி டெல்லியில் அதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில்,' சுமார் 10லட்சம் மக்கள் தொகைக்கு மேலாக உள்ள நகரங்கள் பட்டியலில் தமிழகத்தின் சென்னை மற்றும் கோவை ஆகியவை இடம்பெற்றுள்ளது. இதில் சென்னைக்கு 4வது இடமும், கோவைக்கு 7வது இடமும் கிடைத்துள்ளது. குறிப்பாக கர்நாடகாவின் பெங்களூரு நகரம் நாட்டிலேயே முதல் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.













