உத்தர பிரதேசத்தில், நான்கு பேருடன் வீட்டை விட்டு ஓடிய பெண், பஞ்சாயத்தார் முன்னிலையில், குலுக்கல் வாயிலாக, ஒருவரை கணவராக்கிய விசித்திர சம்பவம் நிகழ்ந்து உள்ளது.
லக்னோவைச் சேர்ந்த இளம்பெண், சமீபத்தில், நான்கு நண்பர்களுடன் திடீரென வீட்டை விட்டு ஓடியுள்ளார். இரவு முழுதும் நண்பர்களுடன் ஒரு வீட்டில் தங்கியிருந்த அந்த பெண், காலையில் ஊர் திரும்பினார். உடனே, மகளை கடத்திச் சென்ற நான்கு பேர் மீது, போலீசில் புகார் கொடுக்க, பெற்றோர் முடிவு செய்தனர்.
அதை தடுத்த, பஞ்சாயத்து தலைவர், 'நான்கு பேரில் ஒருவரை, அந்த பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்து விடலாம்' என, கூறியுள்ளார். ஆனால், நால்வரும், அந்த பெண்ணை ஏற்க மறுத்து விட்டனர். இதையடுத்து, அந்த பெண்ணிடம் 'நீ யாரை விரும்புகிறாய் என சொல்; திருமணம் செய்து வைக்கிறோம்' என, பெற்றோர் கேட்டனர். அதற்கு அந்த பெண்ணால் பதில் சொல்ல முடியவில்லை.
உடனே, பஞ்சாயத் தலைவர், 'குலுக்கல் முறையில் நால்வரில் ஒருவரை தேர்வு செய்யலாம்' என்றார். அதை பெண்ணும், பெற்றோரும் ஏற்றுக் கொண்டனர். உடனே, நான்கு பேரின் பெயர்கள் எழுதப்பட்ட துண்டு சீட்டுகள் குலுக்கி போடப்பட்டன. அவற்றில் ஒன்றை, அப்பெண் எடுத்தார். இதையடுத்து, அந்த சீட்டிற்கு உரியவர், ஊரார் முன்னிலையில், அந்த பெண்ணை தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். அவருக்கு, இதர நண்பர்கள் மூவரும் மகிழ்ச்சியுடன் கைகுலுக்கி, வாழ்த்து தெரிவித்தனர்.













