ஜெயலலிதா கோபம் - உற்சாகமான தொண்டர்கள்

SOCIAL SHARE
Pin It

ஜெயலலிதா, எந்தளவுக்கு சாந்தமாக இருப்பாரோ, அந்தளவுக்கு கோபக்காரர் என்பது, கட்சியின், 2ம் கட்ட தலைவர்களுக்கு தெரியும். அதனால் தான், அவரின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்றபடி செயல்படுவர்.

கடந்த, 2001 சட்டசபை தேர்தலின் போது, நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த ஜெ., ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். சிவகங்கை மாவட்டம், திருப்பத்துாருக்கு மாலை, 5:00 மணிக்கு அவர் சென்ற போது, நான்கு தொகுதிகளிலும், அவரது வேட்பு மனுக்கள், குற்ற வழக்குகளை காரணம் காட்டி, தள்ளுபடி செய்யப்பட்டதாக, தகவல் தரப்பட்டது. இதையடுத்து, டெம்போ வேனில் இருந்து கீழே இறங்கியவர், அருகில் நின்ற திறந்த ஜீப்பின் பேனட்டில் ஏறி நிற்க, தொண்டர்கள் வெகுண்டெழுந்தனர்.

ஜெ., முகம் சிவக்க, மைக்கை வாங்கி பேசுகையில், 'இது நியாயமா, தேர்தல் கமிஷன் செய்தது நியாயமா' என, தன், 'டிரேடு மார்க்' கேள்விகளை எழுப்ப, ஒட்டுமொத்த கூட்டமும், 'இல்லை' என, குரல் கொடுத்தது. ஒரு கட்டத்தில், கோபத்தின் உச்சத்திற்கே சென்ற ஜெ., 'அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவசிரிப்பு. நல்ல தீர்ப்பை சொல்லும் நாள் வரும் போது, சிரிப்பவர் யார், அழுபவர் யார் தெரியும் அப்போது எனக்கூற, ஒட்டுமொத்த தொண்டர்களும் உற்சாகமுற்றனர்.

அதேபோல, துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் இடைத்தேர்தலில், யாரும் எதிர்பாராத வகையில் சாதாரண தொண்டர் நீலமேகவர்ணத்தை வேட்பாளராக அறிவித்தார். நீலமேகவர்ணத்திற்காக, ஆறுமுகனேரி விருந்தினர் மாளிகையில், ஐந்து நாட்கள் தங்கி, தொகுதி முழுக்க, ஜெ., பிரசாரம் செய்தார். செட்டிகுளம் என்ற ஊரில், பிரசாரத்திற்கு சென்ற போது, கிராமத்தினரை காணவில்லை.  இதை கவனித்த ஜெ., பிரசாரத்தை முடித்து விட்டு, 'யார் இன்சார்ஜ்' என, கேள்வி எழுப்பினார்.

முன்னாள் எம்.பி.,யும், அப்போதைய அமைச்சர் ஒருவரும் வந்து, 'அம்மா...' என நிற்க, 'அறிவு இருக்கா; நான் உங்களை பாக்கவா வந்தேன். கிராமத்தினரையே காணோம். நான் பேசுவதை அவர்கள் கேட்டால் தானே, நம் வேட்பாளர்களுக்கு ஓட்டு போடுவர். இது தெரியாதா' என, கடிந்து கொண்டார்.

ARUNACHALAM