சமையற்கலை ஒலிம்பிக் போட்டி பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வரும் இந்த கலினரி ஒலிம்பிக் போட்டியின் கார்விங் பிரிவில் கடந்த ஆண்டு நான்கு வெள்ளிப் பதக்கங்களை வென்று வந்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த யஷ்வந்த் குமார். கொரோனா பரபரப்பில் இந்த விஷயம் பெரிதாகக் கவனம் பெறவில்லை.
யஷ்வந்த் தன் தம்பி ஹரிஹரனுடன் இணைந்து நடத்தும் ‘chef YKU’ என்கிற சமையலுக்கான யூ டியூப் சேனல் இப்போது உணவுப் பிரியர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நாம் நினைப்பது போல் யஷ்வந்த் ஒன்றும் புகழ்பெற்ற சமையற்கலைஞரோ அல்லது ஸ்டார் ஹோட்டலில் பணிபுரியும் செஃப்போ இல்லை. 12ம் வகுப்பு படிக்கும் மாணவன்! அவரின் தம்பி ஹரி 10ம் வகுப்பு தேர்வுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்!
சென்னை விருகம்பாக்கத்திலுள்ள யஷ்வந்த் வீட்டிற்குள் நுழைந்தால் முதலில் மினி ஸ்டூடியோவே நம்மை வரவேற்கிறது. சமையல் பணி முழுவதும் யஷ்வந்த் என்றால், அதை வீடியோ எடுத்து, எடிட்டிங் செய்து, யூ டியூப்பில் ஏற்றுவது ஹரியின் பணி. இவர்களுக்குத் துணையாக தந்தை உமாசங்கரும், தாய் ஜெயந்தியும் இருக்கின்றனர். இதனுடன், கார்விங் பயிற்சியை தினமும் செய்து கொண்டே இருக்கிறார் யஷ்வந்த்.
‘‘முதல்ல கலினரி ஒலிம்பிக்ஸ் பற்றி சொல்றேன். மற்ற விளையாட்டுகளைப் போல் சமையற்கலைக்கு உள்ள ஒலிம்பிக்ஸ்தான் கலினரி ஒலிம்பிக்ஸ். இது நான்கு வருஷங்களுக்கு ஒருமுறை ஜெர்மன்ல நடக்கும். இந்தத் தொழிலுக்கு ஒரு மரியாதை கொடுக்கணும் என்பதற்காகவும், மக்கள் மத்தியில் ஒரு உயர்வு மிக்க தொழிலா நினைக்க வைக்கணும் என்பதற்காகவும் ஜெர்மன்ல இருக்குற சமையற்கலைஞர்கள் எல்லாம் ஒண்ணு சேர்ந்து நாலஞ்சு நாடுகளை அழைச்சு ஒரு போட்டியை ஆரம்பிச்சாங்க,
அப்படி ஆரம்பிச்சது நூற்றாண்டுகளைக் கடந்தும் நடந்திட்டு இருக்கு. இப்ப நடந்து முடிஞ்சது 25வது ஒலிம்பிக் போட்டி. மற்ற விளையாட்டு களுக்கு ஒலிம்பிக் மெடல் எவ்வளவு பெரிய பெருமையோ அதேபோல இந்தப் போட்டியில் மெடல் வாங்குவதும் பெருமை. அதேநேரம் ரொம்ப சிரமமும் கூட...’’ என்றபடியே பேசத் தொடங்கினார் 17 வயதான யஷ்வந்த் குமார்.
அடுத்து, ஜூனியர் அணி. இதுல 21 வயதுக்கு மேலயும், 25 வயதுக்குட்பட்டும் இருப்பாங்க. இதுவும் ஒரு டீமாகப் போகும். அப்புறம், மண்டல அணி, கம்யூனிட்டி அணி, தேசிய இராணுவ அணினு தனித்தனியா போய் கலந்துப்பாங்க.
இப்படி ஒவ்வொரு நாட்டிலிருந்தும் கலந்துகிட்டு தங்கள் சமையல் திறனைக் காட்டுவாங்க. ஆனா, இந்தியா இந்தப் போட்டிகள்ல கலந்துக்கறதில்ல. காரணம், செலவு அதிகம் என்பதும், அதை அவங்களே பார்த்துக்கணும் என்பதும்தான். அடுத்து, தனிநபர் பிரிவு. இதை கலினரி ஆர்ட்டிஸ்டிக் போட்டிகள்னு சொல்வாங்க. அதாவது சமையல் அல்லாத சமையல் துறை சார்ந்த பிரிவு.
இந்தப் பிரிவுல காய்கறி மற்றும் பழங்கள்ல கலை வேலைப்பாடுகள் செய்ற கார்விங் போட்டி நடக்கும். இதுல நான் நாலு போட்டிகள்ல கலந்துகிட்டேன். முதல் போட்டி லைவ் கார்விங் போட்டி. நேரடியா மூணு மணி நேரம் சில விதிமுறைகளை பின்பற்றி கார்விங் பண்ணணும்.
நாம்தான் காய்கறி கொண் டுட்டு போகணும். ஆனா, கட்டாயம் இருக்கணும்னு சொல்லி சில காய்கறிகளை அவங்க கொடுப்பாங்க. எனக்கு பூசணிக்காய் கொடுத்தாங்க. நான் பண்ற கார்விங் வேலையில் பூசணிக்காய்ல கார்விங் கட்டாயம் பண்ணியிருக்கணும். அப்பதான் போட்டிக்கு
எடுத்துப்பாங்க.
இதுல வெள்ளிப்பதக்கம் வாங்கினேன். அடுத்த போட்டியில முன்னாடியே காய்கறிகள் மற்றும் பழங்களை கார்விங் பண்ணிட்டு வந்து ஒருமணி நேரத்துல காட்சிப்படுத்தணும். அதைப் பார்த்து தேர்ந்தெடுப்பாங்க. இதுலயும் வெள்ளி வாங்கினேன். பிறகு சர்க்கரையில் பாஸ்திலாஜ்னு (pastillage) ஒரு பிரிவு இருக்கு. இந்த சுகர் பிரிவுல ரெண்டு போட்டிகள்ல வெள்ளிப் பதக்கம் வாங்கினேன். என்னுடன் கலந்துகிட்டவங்க எல்லோரும் என்னைவிட ரெண்டு மடங்கு வயதில் மூத்தவங்க. அவங்ககூட போட்டியிட்டு நாலு வெள்ளிப் பதக்கம் வாங்கினது ரொம்ப சந்தோஷமா இருக்கு...’’ என்று சொல்லும் யஷ்வந்துக்கு கார்விங்கில் ஆர்வம் வரக் காரணம், அவரது அப்பாவும் குருவுமான உமாசங்கர் தனபால்தான்.
‘‘அப்பா 2012, 2016ம் ஆண்டுகள்ல நடந்த கலினரி ஒலிம்பிக்ஸ் கார்விங் பிரிவுல வெண்கலப் பதக்கம் வாங்கியவர். அவரைப் பார்த்துதான் நான் கார்விங் கத்துக்கிட்டேன்...’’ புன்னகைக்கும் யஷ்வந்தைத் தட்டிக் கொடுத்துவிட்டு பேச ஆரம்பித்தார் உமாசங்கர். ‘‘நான் ஹோட்டல் மேனேஜ்மெண்ட்ல டிப்ளமோ முடிச்சிட்டு ஐதராபாத்துல கலினரி அகாடமி ஆஃப் இந்தியாவில் சான்றிதழ் படிப்பு படிச்சேன். பிறகு, செஃப்பா பல ஹோட்டல்கள்ல பணி செய்தேன்.
இந்த ஐதராபாத் அகாடமிதான் என் திறமையை வளர்த்தது. அந்தக் கல்லூரியின் முதல்வர் செஃப் சுதாகர்ராவ் சார் நிறைய ஊக்கமளிச்சார். கலினரி ஆர்ட்டிஸ்டிக்ல என்ன வாய்ப்புகள் இருக்குனு சொன்னது அவர்தான். எனக்கு அதுல ஆர்வம் வந்துச்சு. அப்புறம், நிறைய நாடுகளுக்குப் போய் அங்க கலினரி ஆர்ட்டிஸ்டிக் போட்டியில் வெற்றி பெற்றவங்கள சந்திச்சேன். 2000, 2004, 2008ல் தங்கப்பதக்கம் வாங்கின செஃப் லுஜக் புரகாஸ்கா செக் குடியரசுல இருக்கார். அவரைக் கண்டுபிடிச்சு அவர்கிட்ட 15 நாட்கள் பயிற்சி எடுத்தேன்.
பிறகு, 2012ல் நடந்த கலினரி ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஒரு பிரிவில் கலந்துகிட்டு வெண்கலப்பதக்கம் வாங்கினேன். 2016லிலும் வெண்கலம் பெற்றேன். நான் 2011ல் பயிற்சி எடுக்கும்போதே யஷ்வந்த் கத்தியில் விளையாட ஆரம்பிச்சிட்டான். அவனைக் கூர்ந்து கவனிச்சப்ப அவனுக்கு கார்விங்ல ஆர்வம் இருப்பது தெரிஞ்சது.
2012க்குப் பிறகு வகுப்புகள் எடுக்க நினைச்சேன். அப்ப நான் சொல்லிக் கொடுக்கிறதைப் பார்த்தே யஷ்வந்த் கத்துக்கிட்டான். நான் கத்தியை எப்படி பிடிக்கணும், அதுல எவ்வளவு அழுத்தம் கொடுக்கணும்னு வர்றவங்க கையைப் பிடிச்சு சொல்லித் தருவேன். ஆனா, யஷ்வந்தைப் பொறுத்தவரை அவன் கையைப் பிடிக்கல. அவனே பார்த்துக் கத்துக்கிட்டதுதான். அப்புறம், பத்து வயசுல பள்ளி விடுமுறையில் ஐதராபாத் கலினரி அகாடமியில் சமையல் கத்துக்க போனான். 15 நாட்கள் பயிற்சியில் ஒருத்தர் பேக்கரி ஐட்டமும், இன்னொருத்தர் இந்தியன் கிரேவி ஐட்டமும் அவனுக்கு சொல்லித் தந்தாங்க.
அப்புறம், தென்னிந்தியா செஃப் அசோஸியேஷன் நடத்தின வொர்க் ஷாப்ல கலந்துகிட்டு நிறைய படிச்சான். பிறகு, அவன் பாட்டிகளைப் பார்த்தும், அம்மாவிடம் இருந்தும் நுணுக்கங்களைத் தெரிஞ்சுக்கிட்டான். முதல்ல யூ டியூப்ல கார்விங்தான் செய்தான். அப்புறம் சமையலுக்குள் வந்தான். இதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. நேஷனல் லெவல்ல நடந்த கலினரி போட்டிகள்ல நிறைய வெற்றி பெற்றான். சர்வதேச அளவுனா, அது கலினரி ஒலிம்பிக்ஸ்தான்.
2016ல் நான் வெண்கலம் வாங்கினப்ப இவன் நாலாவது இடம் வந்தான். ஆனா, இந்தப் போட்டிக்கு அரசின் உதவி தேவைப்படுது. ஏன்னா, நாலு வருஷத்துல நாலு முறை சீனாவுக்கு பயிற்சிக்காக அழைச்சிட்டு போயிருக்ேகன். அங்க கார்விங் பயிற்சி ரொம்ப சிறப்பா இருக்கும்.
சீனாவுல 15 நாள் பயிற்சிக்கு மூணு லட்சம் ரூபாய் செலவாச்சு. அடுத்து, ஒலிம்பிக்ஸ்ல கலந்துக்க ஒரு ஈவென்ட்டுக்கு நூறு யூரோ கட்டணும். ஏறக்குறைய 8 ஆயிரம் ரூபாய். அப்புறம், போய் வர செலவுகள் இருக்கு. எனக்கு வருமானம் இருந்ததால யஷ்வந்த் வந்தான். இந்த விஷயம் எத்தனை பேருக்கு சாத்தியப்படும்னு தெரியல. அதுக்காகவே அரசின் உதவி தேவையா இருக்கு.
யஷ்வந்த் மாதிரி திறமைசாலியான குழந்தைகள் நிறைய இருக்காங்க. அந்தக் குழந்தைங்களை கணிதம் படி, ஆங்கிலம் படினு சொல்றது சரியில்ல. அதுக்கு இந்த ஓப்பன் ஸ்கூல் திட்டம் ரொம்ப பெஸ்ட்டா இருக்கும். இதை பெற்றோர் தெரிஞ்சுகிட்டு இதுல படிக்க முன்வரணும். யஷ்வந்த் பத்தாம் வகுப்புல 500க்கு 401 மார்க் வாங்கினான்...’’ எனப் பெருமையுடன் உமாசங்கர் நிறுத்த யஷ்வந்த் தொடர்ந்தார்.
‘‘இப்ப உலகளவுல நடக்க இருக்குற கார்விங் போட்டிகள்ல வெற்றி பெற பயிற்சி எடுத்திட்டு இருக்கேன். எல்லா திறமைகளும் அடங்கிய ஒரு செலிபிரிட்டி செஃப்பா வரணும் என்பது குறிக்கோள். அந்த லட்சியத்தை நோக்கியே பயணிச்சிட்டு இருக்கேன்...’’ என்கிறார் யஷ்வந்த்
உற்சாகமாக!













