ஐ.நா.,வில், பொதுவாழ்வில் பெண்கள் நிலை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பேசிய அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், பெண்களுக்கு உள்ள சுயாதிகாரத்தின் அடிப்படையில் தான், ஒரு நாட்டின் ஜனநாயக செழுமையை மதிப்பிட முடியும். முடிவெடுக்கும் பொறுப்புகளில், பெண்களை அமர விடாமல் விலக்கினால், அந்நாட்டின் ஜனநாயகத்தில் குறைபாடு உள்ளதாகவே கருதப்படும். பெண்களின் பங்களிப்பு, ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என கூறினார்.
உலகளவில் பாதுகாப்பான உணவு, போதுமான ஆரோக்கியப் பராமரிப்பு சேவை ஆகியவற்றை பெற, பெண்கள் போராடி வருகின்றனர். இதை, கொரோனா மேலும் மோசமாக்கி விட்டது. பெண்களை வறுமையில் வாழ விடுவது, பாலின வன்முறைக்கு வித்திடும். இதனால், அனைவரும் பாதிக்கப்படுவர். அதனால், முடிவெடுக்கும் பொறுப்புகளில் பெண்களின் பங்கை அதிகரிக்க வேண்டும்; தவறினால், ஜனநாயகம் செழிக்கத் தவறிவிடும்.ஒரு நாட்டின் ஜனநாயகம், அங்குள்ள பெண்களின் நிலையை வைத்து தான் மதிப்பிடப்படுகிறது.
அமெரிக்கா, இந்த இரண்டு அம்சங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. ஜனநாயகம், மனித உரிமைகளை பாதுகாக்கிறது, மனித கண்ணியத்தை மேம்படுத்துகிறது. சீரான சட்ட நடைமுறைக்கு துணை புரிகிறது. இதன் மூலம், அமைதியை ஏற்படுத்தி, வளங்களை சமமாக பகிர்ந்து கொள்ள வாய்ப்பளிக்கிறது. அமெரிக்காவில், பெண்களின் சுயாதிகாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்த, 56 ஆண்டுகளில், அதிபர் தேர்தல்களில், ஆண்களை விட, அதிகமாக பெண்கள் ஓட்டு போட்டுள்ளனர் என அவர் பேசினார்.













