மனிதர்களைப் போல வடிவமைக்கப்பட்டுள்ள ரோபோ சோபியாவின் டிஜிட்டல் கலைப்படைப்பு வியாழக்கிழமையன்று ஏலத்தில் விடப்பட்டது. 688,888 டாலருக்கு Non-Fungible Token (NFT) வடிவத்தில் விற்கப்பட்டது. ஹாங்காங்கை சேர்ந்த ஒரு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ரோபோ சோபியா. சுயமாக சிந்தித்து மனிதனின் முக பாவனைகளுக்கு ஏற்ப பதில் கூறுவதே இந்த ரோபோவின் சிறப்பு.
2016 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சோபியா, 31 வயதான இத்தாலிய டிஜிட்டல் கலைஞரான ஆண்ட்ரியா போனசெட்டோவுடன் இணைந்து தனது கலை படைப்பை உருவாக்கியுள்ளது. வண்ணமயமான கலை படைப்புகளை உருவாக்குவதற்கு பெயர் பெற்ற ஆண்ட்ரியா, டெஸ்லாவின் தலைமை நிர்வாகி எலோன் மஸ்க் போன்ற பிரபலமானவர்களின் உருவங்களை கலைப்படைப்பாக வடித்துள்ளார்.
ரோபோ சோபியாவின் படைப்புகள், கலை வரலாறு மற்றும் பல்வேறு தளங்களில், அதனுடைய சொந்த இயற்பியல் தன்மை அல்லது ஓவியங்கள் ஆகியவற்றின் கூறுகளை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ரோபோவின் படைப்பை, "பரிணாம வளர்ச்சியின் சுழல்கள்" என்று விவரிக்கிறார் ரோபோ சோபியாவை படைத்த படைப்பாளி டேவிட் ஹான்சன்.













