அட்லாண்டிக் பெருங்கடலில் பல ஆண்டுகளாக அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக இருந்து வரும் கம்யூனிச நாடான கியூபாவின் பொருளாதாரத்தின் பெரும்பகுதி விவசாயத்தையும் மற்றும் கம்யூனிச வல்லரசுகளான ரஷ்யா மற்றும் சீனாவிடம் இருந்து வரும் நிதி உதவியை நம்பியே இருந்தது.
காஸ்ட்ரோவின் மறைவுக்குப் பின்னர் ஒபாமா அரசு கியூபாவுடன் செய்த உடன்படிக்கயால் அமெரிக்கா மற்றும் பிற ஐரோப்பிய நாட்டின் சுற்றுலா பயணிகளின் வருகையால் அன்னிய செலாவணி நாட்டினுள் வந்தது.
ஆனால் அதற்கும் தற்போது ட்ரம்பின் அரசு முட்டுக்கட்டை போட்டது. எனவே ரஷ்யா சீனா போன்ற அரசுகளிடம் நிதியை நம்பி இருக்கும் கியுபாவின் பொருளாதாரத்திற்கு தற்போதுள்ள கொரோனா சூழ்நிலையில் அந்த நாடுகளிலிருந்து நிதிவருவது பெருமளவு குறைந்து உள்ளது. எனவே கியூபாவின் அரசு தங்களிடமுள்ள பெரும் பொக்கிஷத்தை மறுபடியும் உபயோகப்படுத்த முடிவெடுத்துள்ளது. அது தங்கமோ பெட்ரோலொ அல்லது அமெரிக்க டாலர் அல்ல.
மருத்துவர்கள்தான் கியூபாவில் கொட்டிக்கிடக்கும் பொக்கிஷம். ஆமாம் உலகத்திலேயே ஆயிரம் மக்களுக்கு எத்தனை மருத்துவர்கள் உள்ளார்கள் என்ற பட்டியலில் கியூபா 8.9 என்ற எண்ணுடன் முதல் இடத்தில் இருக்கிறது.
அடுத்தபடியாக மொனாக்கோ, சான் மரினோ, ஸ்வீடன் போன்ற நாடுகள் தலா 6.6, 6.2, 5.4 என இரண்டு மூன்றாம் மற்றும் நான்காம் இடத்திலும் ஜார்ஜியா மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகள் தலா 5.1என ஐந்தாம் இடத்தில் உள்ளன.
இத்தனை மருத்துவர்கள் கியூபாவில் உள்ளதற்கு காரணம் அனைவருக்கும் இலவசமாக மருத்துவம் கிடைக்க வேண்டும் என்ற கியூபாவின் கம்யூனிஸ சித்தாந்தமும், ஃபிடல் காஸ்ட்ரோவின் உயிர் நண்பனும் மற்றும் அவருடன் சேர்ந்து கியூபாவின் கம்யூனிச புரட்சிக்குத் தலைமை தாங்கிய சேகுவேரா ஒரு மருத்துவராக இருந்தது தான்.
இதனால் கியூபாவின் அனைத்து மக்களுக்கு இலவச மருத்துவம் கிடைத்தாலும் அங்குள்ள மருத்துவர் அனைவருக்கும் மற்றும் பிற வேலை செய்பவருக்கு ஒரே ஊதியமே.
அதிலும் மருத்துவர்கள் அதிக அளவில் உள்ளதால் பலருக்கும் முழு நேர வேலை கிடைக்காமல் இருக்கின்றது. இதனால் பல மருத்துவர்கள் ஓய்வு நேரங்களில் சுற்றுலா பயணிகளுக்கு டாக்ஸி ஓட்டும் அவல நிலையும் கியூபாவில் உள்ளது அது தனிக்கதை .
சரி இது எப்படி கியூபாவிற்கு வருமானம் ஈட்டும் பொக்கிஷம் என்றுதானே கேட்கிறீர்கள். கியூபாவின் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலான கம்யூனிச ஆட்சியில் பலமுறை உலகின் பல பகுதிகளில் நிலநடுக்கம் சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்கள் நடக்கும் போதெல்லாம் நல்லெண்ண அடிப்படையில் அங்கு முதல் ஆளாக விரைந்து செல்வது கியூபாவின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுக்கள் தான். அதனால் கியூப அரசின் இந்த நடவடிக்கை பாராட்டப்படுகிறது.
இந்நிலையில்தான் 1990களில் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு கியூபா வின் பொருளாதாரம் மிகவும் மோசமான சரிவை நோக்கி சென்றது. பசி பஞ்சம் தலை விரித்து ஆடியது.
இந்த சமயத்தில்தான் எண்ணெய் வளம் பொருந்திய அண்டை நாடான venuzuela அரசு, அந்நாட்டில் உள்ள மருத்துவர் பற்றாக்குறையைப் போக்க கியூப மருத்துவக் குழுக்களை பணியில் அமர்த்தினர். இதற்கு பதிலுக்கு அவர்கள் கியூப அரசிற்கு கச்சா எண்ணையை கொடுத்தனர்.
இதன் மூலம் அந்நிய செலாவணி ஈட்டும் ஒரு வழிமுறையை கியூபா அறிந்தது. அதன்பிறகு க்யூபா இதுபோல மருத்துவர்களை ஏற்றுமதி செய்து பணம் சம்பாதிக்க ஆரம்பித்தது.
அதிலும் பணக்கார நாடுகளிடம் மட்டுமே அதிகபணம் பெற்றுக் கொண்டது கியூப அரசு. ஆனால் ஆப்பிரிக்கா அமெரிக்கா ஆசியாவில் உள்ள ஏழை நாடுகளில் மருத்துவர்களை இலவசமாக அனுப்பி வைக்கிறது. மற்றும் பேரிடர் காலத்தில் எங்கு மருத்துவர்களை அனுப்பினாலும் பணம் பெறாமல் தான் சேவை செய்கின்றனர்.
அதிலும் தற்போது குறிப்பாக உலகப் பொருளாதாரமே முடங்கி இருக்கும் காலத்தில் கியூபாவின் ஒரே பணம் சம்பாதிக்கும் வழியாக இது உள்ளது., தீவு நாடான கியூபாவின் உணவு பொருட்களில் பெரும்பகுதி இறக்குமதி தான் செய்யப்பட்டது.
தற்பொழுது உள்ள சூழ்நிலையில் நிதி பற்றாக்குறையால் அது பெருமளவு குறைந்துள்ளது. எனவே தற்பொழுது அரசு ரேஷன் முறையில் தான் மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கி வருகிறது. அதனால் காலை 4மணி முதலே ரேஷன் கடைகளின் முன்னே மக்கள் வரிசையில்நிற்கும் அவல நிலை தற்பொழுது உள்ளது.
கியூபாவின் வருமானம் மருத்துவர்களைதான் பெருதும் நம்பியுள்ளது . மருத்துவர்கள் மூலம் பணம் சம்பாதிப்பது மட்டுமில்லாமல், இத்தாலி என்ற ஒரு பெரும் நாட்டின் கோரோனா போரில் அவர்கள் பெரும் பங்கு வகித்தனர்.
ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் இத்தாலியின் கொரோனா தாக்கம் சீனாவையும் தாண்டி அமெரிக்காவிற்கு நிகராக சென்றுகொண்டிருந்தது.
தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பாதிக்கப்பட்ட போது அந்த நாட்டின் மருத்துவத் துறையும், அரசும் செய்வது அறியாமல் நின்று கொண்டிருந்தன. அந்த சமயத்தில்தான் ஆயிரக்கணக்கான கியூபாவின் மருத்துவ குழுக்கள் இத்தாலியை வந்தடைந்தார்கள்.
பெரும் போராட்டத்துக்குப் பின்னர், இத்தாலியில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. இதைப்போலவே ஐரோப்பாவில் பல நாடுகளிலும் கியூபாவின் மருத்துவர்கள் தற்போது குரோநாவிற்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் கியூபாவின் இந்தப் பணம் சம்பாதிக்கும் வழிமுறை ட்ரம்ப்பின் அரசுக்குப் பிடிக்கவில்லை. இதன்மூலம் கியூபா வளர்ச்சி அடைந்தால் அவர்கள் கம்யூனிச சித்தாந்தத்தை பரப்பக் கூடும் என்று கியூபா மீது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தடை கொண்டு வந்தது அமெரிக்கா.
அது மட்டுமில்லாமல் மற்ற நட்பு நாடுகளையும் பிற ஐரோப்பிய நாடுகளையும் இவர்கள் அடுத்தவர்களை வைத்து நடத்தும் செயலை ஹியூமன் டிராபிக்கிங், அதாவது ஆள்கடத்தல் போன்றதற்கு சமம் என்றும், மனித உரிமை மீறல் என்றும் கூறி தடைவிதிக்க வேண்டும் என்று ட்ரம்ப் நிர்வாகம் கேட்டுக்கொண்டது.
ஆனால் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ள கோரோனா காலகட்டத்தில் இத்தகைய கியூப மருத்துவக் குழு பல நாடுகளுக்கு பேருதவியாக உள்ளது.
ஆதலால் எந்த ஒரு நாடும் ட்ரம்பின் கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை. ஆகவே கியூபாவின் கம்யூனிச ஆட்சி இருக்கும்வரை கியூப மருத்துவர்களின் இந்த சேவை தொடர்ந்து கொண்டே இருக்கும் என எதிர்பாக்கலாம்..













