ஆதாரில் எத்தனை முறை பெயர் மாற்றம் செய்யலாம்?

SOCIAL SHARE
Pin It

ஆதார் அட்டையை பலமுறை புதுப்பிக்கவோ, அதில் மாற்றங்களை செய்யவோ இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அனுமதிப்பதில்லை. UIDAI அலுவலகத்தின் மெமோராண்டத்தின் படி, ஆதார் அட்டை வைத்திருப்பவர் தனது ஆதார் அட்டையில் பெயரை இரண்டு முறை மட்டுமே புதுப்பிக்க முடியும். பிறந்த தேதியைப் பொருத்தவரை, அதில் மாற்றம் தொடர்பான விதிகள் இன்னும் கடுமையானவை. ஆதார் அட்டையில் பிறந்த தேதியை அட்டைதாரரின் வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே புதுப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதார் சேர்க்கை நேரத்தில் பதிவு செய்யப்பட்ட பிறந்த தேதியை அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் (கூட்டியோ அல்லது கழித்தோ) மாற்ற அனுமதிக்கப்படுகிறது. அதே போல், ஆதார் அட்டையில் பாலினத்தையும் ஒரு முறைதான் மாற்ற முடியும்.

உங்கள் பெயரில் சிறிய அளவு மாற்றங்கள் இருந்தால் மட்டுமே நீங்கள் ஆதார் அட்டையில் பெயரை மாற்ற முடியும். உதாரணமாக,

- பெயரில் எழுத்துப்பிழை திருத்தம் போன்றவை.

- பெயரின் வரிசையை (Sequence) மாற்ற விரும்பினால்

- குறுகிய வடிவில் (short form) உள்ள பெயரை முழு வடிவில் (full form) ஆக்குவது.

- திருமணத்திற்குப் பிறகு பெயரை மாற்ற விரும்பினால்.

ஆதார் அட்டையில் பெயர், பிறந்த தேதி மற்றும் முகவரி ஆகியவற்றை மாற்ற நீங்கள் சரிபார்க்கப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பிடப்பட்டுள்ள முறைகளைத் தாண்டி ஆதார் அட்டையில் பெயர், பாலினம் அல்லது பிறந்த தேதியை மாற்றுவது விதிவிலக்கு கையாளுதல் செயல்முறையின் மூலம் மட்டுமே சாத்தியமாகும். அதே நேரத்தில், மொபைல் எண் அல்லது மின்னஞ்சலைப் புதுப்பிக்க எந்த வகையான ஆவணங்களும் தேவையில்லை. ஆனால் ஆதாரில் மொபைல் எண் அல்லது மின்னஞ்சலைப் புதுப்பிக்கும் முன் OTP கண்டிப்பாக தேவைப்படும்.

 

ARUNACHALAM