வீணாகும் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு பசை தயாரிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்யலாம். ஆனால், 'மேற்சுழற்சி' செய்ய முடியுமா? முடியும். இதற்கான யுக்திகளை உருவாக்கியுள்ளனர், அமெரிக்காவிலுள்ள, கலிபோர்னிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.
உலோகங்கள், காகிதம் போன்றவற்றை மறுசுழற்சி செய்வதன் மூலம், மதிப்புக்கூட்டப்பட்ட புதிய பொருட்களை உருவாக்க முடியும். ஆனால், பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்தால், முன்பு இருந்ததைவிட மதிப்புக் குறைந்த பொருட்களையே உருவாக்க முடியும்.
இந்த சிக்கலை தவிர்க்கிறது 'அப்சைக்கிள்' எனப்படும் மேற்சுழற்சி முறை. இந்த முறையை பயன்படுத்தி, பிளாஸ்டிக்கிலிருந்து, பாலிஎத்திலினை பிரித்தெடுத்து, சில புதிய வினையூக்கிகள் மூலம் பசைகளை தயாரிக்கலாம்.
இந்த பசை, செயற்கை இடுப்பு மற்றும் மூட்டுக்களை பொருத்துகையில், பயன்படுத்தலாம். மேலும், பிளாஸ்டிக் மற்றும் உலோகப் பொருட்களை ஒட்டவும் பயன்படும். மற்ற பசைகளைவிட மேற்சுழற்சி பிளாஸ்டிக் பசைக்கு, 20 சதவீதம் கூடுதல் ஒட்டும் தன்மை உள்ளதாக கலிபோர்னிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.













