சீனாவின் டியன்ஜின் மாநகராட்சியில் ஐஸ்கிரீம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு நியூசிலாந்தில் இருந்தும், உக்ரைனில் இருந்தும் பால் பவுடர் இறக்குமதி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால், உடனடியாக அந்த ஐஸ்கிரீம் தொழிற்சாலை சீல் வைக்கப்பட்டது. மேலும், தொழிற்சாலையில் உள்ள அனைத்து ஐஸ்கிரீம்களும் அப்புறப்படுத்தப்பட்டன.
ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் வேலை செய்துவந்தவர்களில் 3 பேரின் மாதிரிகளை சோதித்ததில் மூவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பணியாளர்கள் 1600 பேரையும் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இதுவரை 700 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வந்த நிலையில், அதில் யாருக்கும் தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் அனைவரும் பரிசோதனை முடிவுகள் வரும்வரையில் தனிமைப்படுத்தி இருக்க அந்த தொழிற்சாலை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.













