கார்பன் வாயுக்களை வளிமண்டலத்தில் வெளியிடாமல் தடுக்கும் சிறந்த தொழில்நுட்பத்தை பரிந்துரைப்பவர்களுக்கு 100 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.730 கோடி பரிசளிக்கப்படும் என்று உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
தற்போது உலகம் முழுவதும், வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம் பெரும் கவலைக்குரிய பிரச்னையாகியுள்ளது. தொடர்ச்சியாக அதிக பசுமை இல்ல வாயுக்களை வளிமண்டலத்தில் வெளியேற்றுவது இப்பிரச்னைக்கு முக்கிய காரணியாகும். தொழிற்சாலைகள், மின்சார உற்பத்தி, படிம எரிபொருட்கள் பயன்பாடு போன்றவற்றால் இவ்வாயுக்கள் அதிகம் வெளியேற்றப்படுகின்றன. இந்நிலையில் மின்சார கார்கள் உற்பத்தி செய்யும் உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கார்பன்களை கைப்பற்றி நீக்கும் தொழில்நுட்பம் பற்றி விவாதத்தை தொடங்கி வைத்துள்ளார்.
சிறந்த 'கார்பன் கேப்சர்' தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துபவர்களுக்கு பரிசளிப்பதற்காக 100 மில்லியன் டாலர்கள் நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளார். அவர் இத்தகவலை வெளியிட்ட சில மணி நேரங்களில் டிவிட்டரில் பல லட்சம் பேர் பகிர்ந்துள்ளனர்.













