பாதுகாப்பு குறைந்த வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் - மன்னிக்க முடியாத செயல்

SOCIAL SHARE
Pin It

வாகன தயாரிப்பு நிறுவனங்கள், வேண்டுமென்றே பாதுகாப்பு தரம் குறைந்த வாகனங்களை இந்தியாவில் தயாரித்து, விற்பனை செய்வதாகவும்; மன்னிக்க முடியாத இந்த செயலை உடனே நிறுத்துமாறும் மத்திய அரசின் உயரதிகாரி வலியுறுத்தியுள்ளார்.

இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த, வாகன பாதுகாப்பு சம்பந்தமான நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சக செயலர் கிரிதர் அரமானி,  இந்தியாவில், வாகன தயாரிப்பாளர்கள், பாதுகாப்பு தரம் குறைந்தவற்றை வேண்டுமென்றே பயன்படுத்தி, இந்திய மாடல் கார்களின் தரத்தை குறைப்பதாக செய்திகள் வருகின்றன. இந்தசெயலை நிறுத்த வேண்டும். இது மன்னிக்க முடியாததாகும்.மிகக் குறைவான உற்பத்தியாளர்கள் மட்டுமே, பாதுகாப்பு மதிப்பீட்டு முறையை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். அதுவும் விலையுயர்ந்த மாடல் கார்களுக்கு மட்டுமே அவற்றைப் பயன்படுத்துகின்றனர் என்பது மிகவும் வருத்தம் தரக்கூடியது.

பல தர பரிசோதனைகளில், இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களில், வளர்ந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கார்களை விட, உள்நாட்டில் விற்கப்படும் கார்களில் பாதுகாப்பு தரம் குறைவாக இருப்பது தெரியவந்திருக்கிறது. இந்நிலை மாற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, ஓட்டுனர்கள் தேவைப்படாத, தானியங்கி கார்கள் விலை, தற்போதைய கார்களின் விலையை விட குறைவாக இருக்கும் என, ‘சாப்ட்பேங்க்’ குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி மசயோஷி சன் கூறியுள்ளார்.

இன்னும் இரண்டு ஆண்டுகளில், தானியங்கி கார்கள் பெருமளவில் தயாரிக்கப்படும். இதன்பிறகு, இக்கார்களின் விலை, வழக்கமான கார்களின் விலையை விட குறைவாக இருக்கும்.தொழில்நுட்ப புரட்சிகளை நம்மால் நிறுத்தவோ, அதன் வேகத்தை குறைக்கவோ ஒருபோதும் முடியாது. நாம், நம்மை அதற்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அது குறித்து கற்றுக்கொள்ள வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு, மனித குலத்துக்கு நன்மை பயப்பதாகவே இருக்கும். மக்கள் உயிர் காக்கும். போக்குவரத்து விபத்துகள் இருக்காது. ஒருவர் மற்றவருடன் தொடர்புடன் இருக்க உதவும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

ARUNACHALAM