எல்லை பிரச்னை, விவசாயிகள் பிரச்னை உள்ளிட்ட பல பிரச்னைகளை சுட்டிக்காட்டி ஆளும் மத்திய பா.ஜ. அரசை விமர்சித்து, கோழை பா.ஜ., என்ற ஹேஷ்டாக் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.
விவசாய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லியில் விவசாய சங்கத்தினர் தொடர்ந்து 75 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடத்திய 11 சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. விவசாயிகள் போராட்டம் சமூகவலைதளமான டுவிட்டரிலும் தினம் ஒரு ஹேஷ்டாக்கில் டிரெண்ட் ஆகி வருகிறது. அந்தவகையில் #CowardBJP என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆகிறது.
இந்த ஹேஷ்டாக்கில் பல பிரச்னைகளை சுட்டிக்காட்டி டுவிட்டர் தளவாசிகள் ஆளும் மத்திய பா.ஜ., அரசை விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக அண்டை நாடான சீனா எல்லையில் ஆக்கிரமித்து வருகிறது. ஆனால் அவர்களை தடுக்காமல் இங்குள்ள விவசாயிகள் போராட்டத்தை தடுக்க சாலைகளில் தடுப்புவேலிகள், தற்காலிக தடுப்பு சுவர்கள் எழுப்பியதை சுட்டிக்காட்டி விமர்சிக்கின்றனர்.
விவசாயிகளுடன் பேச தயார் என பிரதமர் மோடி கூறினார் ஆனால் இதுவரை பேச முன்வரவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்கின்றனர். மேலும் எல்லையில் படைகள் வாபஸ் பெறப்பட்டதை நேற்று காங்கிரஸின் ராகுல் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்தார். இதை சுட்டிக்காட்டியும் பா.ஜ., அரசை விமர்சித்து வருகின்றனர். சீனாவிற்கு பயந்து எல்லையில் படைகளை வாபஸ் பெற்றது. விவசாயிகளை நேரடியாக எதிர்க்க முடியாமல் கோழைத்தனமாக செயல்படுகிறது என தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். டுவிட்டரில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சிலர் விஷமங்களை பரப்புகின்றனர். அவர்களின் டுவிட்டர் கணக்கை முடக்கியதை கூட சுட்டிக்காட்டி கோழை பா.ஜ. அரசு என சிலர் விமர்சித்து வருகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை, பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்பனை, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கும் முடிவு உள்ளிட்ட பல பிரச்னைகளை சுட்டிக்காட்டி பா.ஜ., அரசை விமர்சித்து வருகின்றனர். இதனால் டுவிட்டரில் #CowardBJP என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.
இதேபோல் தமிழக வரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கம் போல் #GoBackModi என்ற ஹேஷ்டாக்கும் அதன் உடன் #GoBackCowardModi என்ற ஹேஷ்டாக்கும் டிரெண்ட் ஆகின.
இதனிடையே, சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்பி, வெறுப்புணர்வை துாண்டுவதை, தடுப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க கோரிய மனு மீது, மத்திய அரசு மற்றும் 'டுவிட்டர்' இந்தியா நிறுவனம் பதில் அளிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூகத்தில் உயர் பதவியில் உள்ள அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை பிரபலங்களின் பெயரில், நுாற்றுக்கணக்கான போலி சமூக வலைதள கணக்குகள் உலவுகின்றன.அவர்களின் புகைப்படங்களுடன் இயங்கிவரும் இந்த கணக்குகள் வாயிலாக பகிரப்படும் பொய்யான தகவல்களை, உண்மை என, மக்கள் கருதுகின்றனர். சமீபத்தில், குடியரசு தின விழா அன்று நடந்த கலவரத்தில் இருந்து, நாட்டின் பல்வேறு கலவரங்களுக்கும், பொய்யான பிரசாரங்கள் காரணமாக இருந்துள்ளன.
பொய்யான தகவல்கள் வாயிலாக வெறுப்புணர்வை துண்டுவது, போலி கணக்குகளை துவங்கி, நாட்டில் கலகத்தை ஏற்படுத்தும் உள்ளடக்கங்கள் மற்றும் விளம்பரங்களை ஒழுங்குபடுத்துவதற்கு வழிமுறைகள் இயற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு தொடர்பாக பதில் அளிக்கும்படி, மத்திய அரசுக்கும், 'டுவிட்டர்' இந்தியா நிறுவனத்துக்கும், நீதிமன்றம் உத்தரவிட்டது.













