வேர் முதல் நுனிவரை பலன் தரும் பனை மரம்

SOCIAL SHARE
Pin It

தமிழகத்தின் மாநில மரம் பனை. புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். தமிழ்நாட்டின் கால நிலையை ஒத்த மிதவெப்ப மண்டல பகுதிகளில் வளரும் தன்மையுள்ள பனை, குறைந்தது 60 வருடங்களுக்கு மேல் வாழும். வேர் முதல் நுனி வரை பனையின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு பல பயனுள்ள பயன்களைத் தருகின்றது.

மிக நீளமான உறுதியான சல்லி வேர் தொகுப்பை இது பெற்றிருப்பதால் மண் அரிப்பைத் தடுக்கும் இயற்கை அரணாக நம் முன்னோர் இதனை வயல் வரப்புகளிலும் குளம் கால்வாய்கள், ஆற்றுப்படுகைகளிலும் கடலை ஒட்டிய பகுதிகளிலும் வளர்த்தனர். இடத்தின் எல்லைகளைக் குறிக்கவும் வயல்களிலும் தோட்டங்களிலும் நட்டனர்.

கரும் பாறையைப் போன்ற உறுதியான பனையின் தண்டுப்பகுதி குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் பனங்கையாகவும் பனம் வரிச்சலாகவும் சிறு கால்வாய்கள், வாய்க்கால்களைக் கடக்க உதவும் மரப்பாலமாகவும் பயன்படுகிறது.

சங்க காலத்தில் செய்திப் பரிமாற்றங்கள் பனை ஓலையில்தான் நடைபெற்றன. கடும் புயலைக்கூட தாங்கி நிற்ககூடிய வீடுகளை நம்முன்னோர் பனை ஓலையால்தான் முடைந்தனர். தோல் பொருள்கள் பிளாஸ்டிக் பொருள்களின் வரவுக்கு முன்னால் பனை ஓலைகளைக் கொண்டுதான் கூடைகள், சாப்பிட உதவும் தொன்னைகள், குதிர்கள், பெட்டிகள், பாய்கள் போன்றவற்றை நம் முன்னோர் செய்து பயன்படுத்தினர். பனை ஓலையில் வைக்கப்படுகின்ற பொருள்கள் எளிதில் கெட்டுப் போவதில்லை. இன்றும்கூட சில கிராமப்புறங்களில் உணவுகளைப் பனை ஓலையில்தான் கொடுப்பார்கள்.

பனையில் நொங்கு வண்டிகள், காத்தாடிகள், பனை விதைப் பொம்மைகள் செய்து சிறுவர்கள் விளையாடினர். பனை ஓலையைத் தாங்கி நிற்கக் கூடிய மட்டை, வீடுகளைச் சுற்றி வேலி அமைக்கவும், தடுப்புத்தட்டிகள் பின்னுவதற்கும், கயிறு திரிக்கவும் பயன்படுகிறது. வெயில் காலங்களில் அற்புதம் பனை நொங்கு. தித்திக்கும் சுவையுடைய ஜெல்லி போன்ற நொங்கின் சுளை வெயில் காலங்களில் ஒரு சிறந்த குளிர் பானமாகவும், தாதுப் பொருள்கள், விட்டமின்கள், நீர்சத்துக்களைக் கொண்ட மருந்தாகவும் பயன்படுகிறது.

முளைத்து கிழங்கு விட்ட பனை விதை மிகச் சிறந்த சிற்றுணவாக பயன்படுகிறது. அதில் அதிக அளவு நார்சத்துக்கள். தாதுப் பொருட்கள் உள்ளன. பனையிலிருந்து கிடைக்கப்பெறும் பதனீர் ஒரு சிறந்த குளிர்ச்சிபானமாகும். பதனீரைக் காய்ச்சி பனைவெல்லம் செய்யப்படுகிறது. பனைவெல்லம் ஒரு சிறந்த மருத்துவ குணமுடைய இனிப்பு பொருளாகும்

  • ஒரு பனை குறைந்தது 30 அடி உயரத்திற்கு வளருமாதலால் பல உயிரினங்களுக்கு இருப்பிடங்களாகவும் கூடுகளை அமைத்து தங்களது இனத்தை விருத்தி செய்யவும், எதிரிகளிடமிருந்து காக்க உதவும் அரணாகவும் பனை விளங்குகிறது.
  • “இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்ற வாசகம் நடமாடும் கறுத்த யானைக்கு மட்டுமல்ல என்றும் நிலையாக கறுத்து உயர்ந்து நிற்கும் பனைமரத்துக்கும் பொருந்தும்.
  • ஒரு பனை உயிர்நீத்து தலை வீழ்ந்த போதிலும் பனையின் பட்டுப்போன மரப்பகுதி பல பறவைகளுக்கு கூடுகளை அமைத்து முட்டையிட்டு குஞ்சுகள் வளர்க்கச் சிறந்த பாதுகாப்பான இடமாக இருப்பதால் பல பறவைகள் ஓர் மாடி வீட்டில் வசிப்பது போல கூட்டமாக வாழ்கின்றன. தற்போது அருகி வரும் உயிரினங்களான பச்சைக் கிளிகள், பனங்காடைகள், வானம்பாடிகள், மைனாக்கள், ஆந்தைகள், வெளவால்கள், உடும்பு, மரநாய் போன்றவற்றின் கடைசி இருப்பிடம் பனைதான்.

ARUNACHALAM