அம்மன்குடி அஷ்ட புஜ துர்க்கை ஆலயம்

SOCIAL SHARE
Pin It

அம்மன்குடி துர்க்கை ஆலயம், கும்பகோணத்தின் அருகில் உள்ள திருநாகேஸ்வரத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள  இந்த ஆலயம் ராஜ ராஜ சோழனின் தளபதி கிருஷ்ண ராமப் பிரம்பிரான் என்பவனால் கட்டப்பட்டது. 

புராணம் கூறும் செய்திப்படி, மகிஷாசுரனை அழித்தபின், அப்பாவம் நீங்கள் துர்க்கை இந்த இடத்தில் சிவனை எண்ணித் தவமிருந்தாராம்.

சிவபெருமான் அவர் முன் தோன்றி, அவரது பாவங்களைப் போக்கி, இத்தலத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருளுமாறு பணித்தாராம். 

பிறகு துர்க்கைக்கு இங்கு ஆலயம் அமைந்தது. பக்தர்கள் தங்களுடைய பாவம் மற்றும் தோஷங்களை நீங்க இத்தல துர்க்கையை வணங்கி வழிபாடு செய்கிறார்கள்.

மகிஷனை வதைக்க பிரம்மனிடம் இரத்த நிறமும், விஷ்ணுவிடம் வெண்மையும், சிவனிடம் தேஜஸும் பெற்றவர் துர்க்கை, இங்கே சாளக்கிராம கல்லினால் செதுக்கப்பட்டு எட்டுக் கரங்களிலும் சிவனளித்த சூலம், விஷ்ணு அளித்த சக்கரம், வாயு பெற்ற அமபு, வில், இந்திரனின் வஜ்ராயுதம் இவற்றை ஏந்நி ஒளி பிரகாசிக்க நிற்கிறார்.    அசுரனை அழித்து கோப ஆவேசமாக நின்றாலும் அவரது முகத்தில் மென்மை நிலவுகிறது.

இந்த ஆலயத்தில் ஒவ்வொரு  செவ்வாய்கிழமை மற்றும், அமாவாசை, பௌர்ணமி தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இந்தப் பூஜையில் கலந்து, அம்மனை வழிபாடு செய்ய, திருமணத் தடை நீங்குகிறது. 

செவ்வாய்கிழமை, மற்றும் அஷ்டமி திதியில் நடைபெறும் பூஜையில் கலந்து கொள்ள  ராகு கேது தோஷம் நீங்கும். 

வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்ள, செல்வ வளம் அதிகரிக்கும். 

 குழந்தைப் பாக்கியத்திற்கு திங்கட்கிழமை நடைபெறும் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். 

 செவ்வாய்கிழமை நடைபெறும்  ராகு கால பூஜையில் பங்கேற்க நோய் நொடிகள் விலகும். 

 நீண்ட ஆயுளுக்கு சனிக்கிழமை நடைபெறும் பூஜையில் பங்கேற்று வழிபாடு செய்ய வேண்டும்.

இந்த ஆலயத்தில் சரஸ்வதி சந்நிதியும் அமைந்துள்ளது. கையில் வீணையின்றி அவர் காணப்படுகிறார். 

 

ARUNACHALAM