மாற்றுத்திறனாளிகளுக்கான காப்பீட்டுத் திட்டங்கள்

SOCIAL SHARE
Pin It

பல காப்பீட்டுத் திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. ஆனால், இதுகுறித்த விழிப்புணர்வு அவர்களிடம் இல்லை. மாற்றுத்திறனாளிகள் யாரை அணுகி தங்களது நலத்துக்கான காப்பீட்டுத் திட்டம் அல்லது அரசு சலுகைகளைப் பெறுவது என்று தெரியாமல் உள்ளனர். எனவே, சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தையும் , அரசு சலுகைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வையும் அவர்களுக்கு ஏற்படுத்துவது அவசியம்.

முதலில், மாற்றுத்திறனாளிகளுக்காக வழங்கப்படும் அரசின் உதவித் தொகை குறித்துப் பார்க்கலாம். இதில், மாற்றுத் திறனாளிகளை மூன்று வகையினராக பிரித்து உதவித் தொகை வழங்கப்படுகிறது. 

முதலாவது - பிறப்பின் போது ஏற்படும் குறைபாடு. 

இரண்டாவது - விபத்து காரணமாக ஏற்படும் குறைபாடு.

மூன்றாவது - மனநலக் குறைபாடு.

அந்த வகையில், அதிகப்படியான பாதிப்புகள் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு அதாவது மன வளர்ச்சி குன்றியோர் 45 சதவீதம் பாதிப்பும், உடல் இயக்கக் குறைபாடுடையோர் 75 சதவீதம் பாதிப்பும், தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் 40 சதவீதம் பாதிப்பும் அடைந்திருந்தால் அவர்களுக்கு பராமரிப்பு உதவித் தொகையாக மாதம் ரூ.1,500 வீதம் வழங்கப்படுகிறது.

காப்பீட்டுத் திட்டம்: இதில் விபத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு முழுமையான காப்பீடும் மற்ற பிரிவினருக்கு குறைபாட்டின் சதவீத அடிப்படையில் காப்பீடும் வழங்கப்படுகிறது. 

Swavlamban (ஸ்வலம்பான்) காப்பீடு: இத்திட்டம் 2015 -ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இதில், மாற்றுத் திறனாளியின் வருவாய் ஆண்டுக்கு மூன்று லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் காப்பீடு இலவசமாக வழங்கப்படுகிறது. மற்றவர்கள் ரூ.355 பிரீமியம் செலுத்தி இந்த காப்பீட்டு திட்டத்தைப் பெற முடியும். பிறந்த குழந்தை முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்த காப்பீட்டை பெறலாம். இதில் ரூ.2 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது.

Nirmaya (நிர்மயா) காப்பீட்டுத் திட்டம்: கீழ்க்கண்ட ஊனம் உள்ளோருக்கு: Autism , cerebral palsy ,

Mental Retardation and Multiple Disabilities) இதில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூபாய் ஒரு லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்த காப்பீடு இலவசமாக கிடைக்கும். இதற்கு வயது வரம்பு இல்லை. 

இதற்கான விண்ணப்பத்தை www.thenationaltrust.gov.in என்ற இணையதளம் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கான disability சான்றிதழையும் இந்த இணையதளம் மூலம் பெறலாம். ஆவணங்களை சரி பார்த்த பின் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இது தவிர ஆண்டுக்கு ரூபாய் நூறு செலுத்தி மாற்றுத் திறனாளிகள் ஆயுள் காப்பீடு பெற்றுக்கொள்ளலாம். இந்த ஆயுள் காப்பீட்டில் மருத்துவச் செலவுகளும் அடங்கும். 

ARUNACHALAM