புத்தாண்டை எப்படி வரவேற்பது?

SOCIAL SHARE
Pin It
உலகின் ஒவ்வொரு பகுதியில் வாழும் தமிழர்களும், குறிப்பாக இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழும் தமிழ் மக்களும் சித்திரை மாதத்தின் முதல் நாளைக்  கொண்டாடுகின்றனர்.

பங்குனியின் இறுதி நாட்களில் அல்லது சித்திரை முதல் நாளில் தான் வழக்கமாக வேங்கை மரம் பூக்கும். மலைபடுகடாம் ‘‘தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை” என்றும், பழமொழி நானூறு ‘‘கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால்” என்றும் பாடுவதால் இளவேனில் துவக்கமான சித்திரையே அக்காலத்தில் தலைநாளாகக் கருதப்பட்டது.பூமி, சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் வருட கால அளவாகும். சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் போது தொடங்கும் ஆண்டு, மீன ராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது.

சங்க இலக்கியமான நெடுநல்வாடையில் மேழமே முதல் ராசி என்ற குறிப்பு இருக்கிறது. திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து” (வரி 160-161”) தமிழ்ப் பஞ்சாங்கங்களில், ஆண்டு பிறக்கும் சரியான நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அடிப்படையிலேயே ஆண்டுக்காலம் கணிக்கப்படுகிறது. இந்த நாளில் நாம் என்ன செய்கிறோம். வீடு, வாசலைச் சுத்தம் செய்கிறோம். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்கள் வைத்து வழிபடும் மரபு தொன்று தொட்டு இருக்கிறது. அதிகாலையில் நீராடி , புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவதும், அநேகமாக எல்லாக் கோயில்களிலும் சிறப்புப் பூஜைகள்  நடைபெறுவதும் வழக்கம்.

அன்றைய சமையலில் வடை பாயசம் இருந்தாலும், வேப்பம்பூ பச்சடியும், மாங்காய்ப் பச்சடியும் சமைப்பது  மரபாகும். சித்திரையில் மா மரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும். மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் அம்சமாக இச்செயற்பாடு கருதப்படுகிறது. வாழ்க்கையின் ஆழத்தையும் இயல்பையும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள் என்பதை, இந்த சமையல் குறிப்பே உணர்த்திவிடும்.

இந்த சித்திரை மாதம். திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருக்கும். ஒரு சித்திரையில் பள்ளிக்கூடம் சென்றிருப்பீர்கள்.
ஒரு சித்திரையில் ஏதோ ஒரு துக்க நிகழ்வு நடந்திருக்கும்.ஒரு சித்திரையில் திருமணம் நடந்திருக்கும். எல்லாம் ஒரே சித்திரை அல்ல.
இதோ இந்த ஆண்டு பிலவ ஆண்டு. அறுபது வருட சுழற்சியில் 35 வது ஆண்டு. இந்த ஆண்டும் திரும்பத்திரும்ப வரும். ஆனால், இந்த பிலவ ஆண்டை அதிகபட்சம் மனித வாழ்க்கையில் ஒருமுறைதான் திரும்பவும் சந்திக்க நேரும்.

60 வயதுக்கு உட்பட்டவர்கள், இந்த பிலவ ஆண்டை முதல் முறையாகச் சந்திக்கிறார்கள். அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள், இந்த பிலவ ஆண்டை  இரண்டாம் முறையாகச் சந்திக்கிறார்கள். மூன்றாம் முறையாகவும் இந்த பிலவ ஆண்டைச் சந்திக்க வேண்டும் என்றால், ஆயுள் 120 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்க வேண்டும். ஆனால், அது சாத்தியமற்றது.

நாம் மனிதர்களை வாழ்த்தும்பொழுது. அதிகபட்சம் 100 ஆண்டுகள் வாழ்க. என்று வாழ்த்துகின்றோம்.

கார்காலத்தில் மழை பெய்யும். பனிக்காலத்தில் பனி பெய்யும். கோடைகாலத்தில் வெயிலடிக்கும். இலையுதிர் காலத்தில் இலைகள் உதிரும். வசந்த காலத்தில் இலைகள் மறுபடியும் பிறக்கும். இது ஒரு சுழற்சிமுறை. காலம் யாரையும் ஏமாற்றுவது கிடையாது.

காலம் கடந்த பின்னும் ஒருவரை நிலை நிறுத்துவது தெய்வபலமும், தெய்வபலத்தின் அடிப்படையில் அவன் செய்த செயல்களும். காலத்தைக் கட்டுப்படுத்துகின்ற அந்தத்  தெய்வத்தைத்  துதிப்போம். புத்தாண்டை மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்.

ARUNACHALAM