நம் முன்னோர்களால் உண்ணப்பட்டு வந்த ஆரோக்கியமான உணவுகளில் முதல் இடத்தினைப் பிடிப்பது சிறுதானியங்கள் தான். சிறுதானியங்கள் நம் பாரம்பரிய உணவு முறையின் அரசியாகக் கருதப்படுகிறது. இன்று நாம் உண்ணும் அரிசியின் வழிமரபு தான் இந்தச் சிறுதானியங்கள். இவை நெற்பயிரைப் போன்றே வளர்க்கப்படும் தானிய வகையாகும். அரிசியின் அளவைவிட சிறிய அளவினைப் பெற்ற சிறுதானியங்கள் குறுகிய காலப் பயிராகும். அரிசி போன்றவற்றிற்கு நல்ல மழை தேவைப்படும். ஆனால் இந்தச் சத்து மிக்க சிறுதானியங்கள் மிதமான
தட்ப வெப்ப நிலையிலும் சாதாரண மண் வளத்திலும் செழித்து வளரும். ஆதிகாலத்தில் தொடங்கி இன்று நாம் வாழும் நவீன காலம் வரை மனித இனம் பயன்படுத்தும் உணவு வகைகளில் சிறுதானியங்கள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளது. எனவே இதனை முதல் தானிய வகை உணவு என்று கூடச் சொல்லலாம்.
ஆதி காலத்தில் மனிதன் காய்கற்களையும் பழங்களையும் பச்சையாக உண்டு வந்தான். இப்பூமியில் மனிதன் கண்டுபிடித்த முதல் கண்டுபிடிப்பு நெருப்பு தான். இதன் மூலமாக் தான் மனிதன் இந்நவீன காலம் வரை ஏதேனும் ஒன்றைக் கன்டுபிடித்துக் கொண்டே இருக்கின்றான். நெருப்பைக் கண்டுபித்ததும் காய்கறி மற்றும் பழங்களைத் தீயில் சுட்டு சாப்பிட்டு வந்தான். அதன் பிறகு தான் அரிசியைக் கண்டு பிடித்தான். முதன் முதலில் அரிசி மூங்கில் மரத்திலிருந்து தான் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அதற்கு மூங்கிலரிசி என்று பெயரிட்டன் இதன் வழியாக நெற்பயிரைக் கண்டு பிடித்து அதற்குப் பெயர்களும் சூட்டினான். உதாரணமக சம்பா நெல் மற்றும் குதிரைவால் சம்பா போன்றவை ஆகும்.
மனிதன் சிறுதானிய வகைகளையும் பயிறு வகைகளையும் கண்டு பிடித்தான். சிறுதானியங்களை நவ தானியங்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு சிறுதானியமும் தனித்தனி மணத்தினையும், சுவையையும் மற்றும் அளவினையும் கொண்டுள்ளது. நம் முன்னோர்கள் “உணவே மருந்து” என்று உண்ணும் உணவிலேயே சத்துக்களையும் பெற்றனர். நோய்களையும் குணமக்கினர். ஆனால் இன்று அதிவேகத்தில் வளர்ந்து வரும் நாம் மட்டுமல்லாது நம்முடைய குழந்தைகளும், இளைஞர்களும் மருந்தே உணவு என்ற நிலைக்கு ஆளாகிவிட்டனர். இதற்குக் காரணம் நாகரீகம் என்ற பெயரில் நாம் பின்பற்றி வரும் வெளிநாட்டுக் கலாச்சாரமும் உணவு முறைகளுமே ஆகும்.
இன்று குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் மைதாவில் தயாரிக்கப்பட்ட பீட்சா, பர்கர் போன்ற அயல்நாட்டு துரித உணவுகளையே உண்கின்றனர். இதனால் நம் உடல் நம் நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஒத்துழைக்காமல் நோய் எதிர்ப்புச் சக்தியை இழந்து விடுகிறது. எனவே நம் உடல் நோய்களின் இருப்பிடமாக மாறி உள்ளது. இத்தகைய தீங்குகளிலிருந்து நம்மையும் நம் பாரம்பரியத்தையும் மீட்டெடுக்க ஒரே தீர்வு நாம் பழங்காலத்திற்குச் செல்ல வேண்டும். அதாவது பழங்கால உணவுப் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். நம் நாட்டின் பிரதான உணவாகக் கருதப்படும் அரிசியில் கூடச் சத்துக்கள் குறைவாக உள்ளன. ஆனால் சிறுதானியங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கின்றது. இவ்வாறு நாம் சிறுதானியங்களை உட்கொள்ளும் போது நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி பன்மடங்காக உயர்கிறது. உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளும் குறைக்கப் பட்டு உடல் பருமன் மற்றும் இருதய நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
சிறுதானியங்கள் என்பவை சிறிய அளவில் மற்றும் கோள வடிவில் உள்ளவை ஆகும். இவை வெள்ளை, சாம்பல், மஞ்சள் மற்றும் ஆழ்ந்த சிவப்பு நிறங்களில் கூட உள்ளன. தினையின் தாவரவியல் பெயர் “எலுசின் கொரகனா” (Eleusine coracana). தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சிறுதானியங்கள் முதன் முதலில் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு ஆசியாவில் பயிரிடப்பட்டது என்றுத் தெரிகிறது. எனினும் நமது முன்னோர்கள் சிறுதானியங்களை முதன்மை உணவாக உண்டுள்ளனர் என்பதற்கு தமிழரின் சங்க இலக்கியங்களே பெரிய உதாரணம் ஆகும். உலகில் பெரும்பாண்மையான வணிகத் தானிய உற்பத்திகள் சீனா, இந்தியா, கிரீஸ், எகிப்து மற்றும் ஆப்பிரிக்காவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
சிறுதானியங்களில் ஊட்டச்சத்து நிறைந்துள்ளன. இவற்றில் 15 சதவீதம் புரதமும் அதிக அளவு நார்ச்சத்தும் உள்ளது. மேலும் இவை வைட்டமின் ‘ஈ’, வைட்டமின் ‘பி’ காம்ப்ளக்க்ஸ், நியாசின், தயமின் மற்றும் ரிபோபிளேவின் போன்றவற்றிற்கு மிகப்பெரிய ஆதாராமாக விளங்குகின்றது.













