மனித உடலில் இயற்கையாக அமைந்துள்ள தடுப்பாற்றல் சக்தியானது நம் இரத்த வெண் செல்களை இடமிருந்து நிறுத்தி பாக்டீரியா, பூஞ்சாளம், வைரஸ் மற்றும் பிற ஒட்டுண்ணிகளாலும் ஏற்படுகின்ற நோய்களை எதிர்க்கச் செய்கிறது. பிறவியிலேயே சிலருக்கு தடுப்பாற்றல் வலுவாக இருக்கிறது. இது வாரிசு வழி வருவது. இதனால் மற்றவர்கள் தடுப்பாற்றலைப் பெற முடியாது என்று பொருளல்ல. தடுப்பாற்றலை வளர்க்கக் கூடிய
இயற்கைப் பொருள்களைத் தேர்ந்தெடுத்துத் தக்க முறையில் உண்டு வருவார்களானால் அவர்களும் சிறப்பான தடுப்பாற்றலை பெற முடியும் என்பது உடல் நல அறிவியலார் பலரின் ஒருமித்த கருத்தாகும்.
“தடுப்பாற்றலை வளர்ப்பதில் இயற்கை உணவுகள் முன்னிலை வகிக்கின்றன” என்கிறார் ஜெப்ரே ப்ளம்பர்க் என்னும் அமெரிக்க உணவியல் அறிஞர். வயிறு நிறைய உணவு உண்டால் மட்டும் போதாது உணவுகள் இயற்கை உருவிலும், ஊட்டச்சத்து நிரம்பியும் இருக்க வேண்டுமென்றும், சில குறிப்பிட்ட இயற்கை உணவுகள் உடலின் தடுப்பாற்றலை உயர்த்துவதில் பெரும்பங்கு வகிக்கின்றன என்றும் கூறுகிறார் பேராசிரியர் ப்ளம்பர்க். இவ்வகை உணவுகளை இயற்கை வடிவில் உண்ணுகின்ற போது உடலின் தடுப்பாற்றல் மிக உன்னதமான நிலைக்கு உயர்த்தப்படுகிறது.
இயற்கை வடிவில் பெறப்படுகின்ற விட்டமின் ஏ யும் அதன் முன்னோடியான கரோட்டினும் தடுப்பாற்றலை உயர்த்தி சருமத்தின் பராமரிப்புக்கு உதவுகின்றன. இரத்த வெண் செல்களை ஊக்குவித்து புற்றுநோய் போன்றவைகள் தோன்றா வண்ணம் காக்கின்றன. ஏறத்தாழ இரண்டு சர்க்கரை வள்ளிக் கிழங்கிலுள்ள விட்டமின் ‘ஏ’ நமது ஒரு நாள் தேவையை ஈடு செய்கிறது. கேரட், லெட்டூஸ், முளைக்கீரை போன்றவற்றிலும் பப்பாளி, மாம்பழம், ஆரஞ்சு, தக்காளி போன்றவற்றிலும் கரோட்டின் மிகுந்து காணப்படுகிறது. விட்டமின் ‘ஏ’ யை மாத்திரை வடிவில் சாப்பிட முடியாதா என்று சிலர் கேட்கலாம். சாப்பிட முடியும். ஆனால் இயற்கை வடிவில் உட்கொள்ளப்படும். கரோட்டின் உடலுக்கு தேவையான அளவை மட்டுமே விட்டமின் ‘ஏ’ யாக மாறச் செய்யும். ஆனால் செயற்கை மருந்துகள் அப்படியில்லை. விட்டமின் ஏ தேவைக்கு அதிகமானால் உடலுக்குத் தீங்கு செய்யக் கூடும்.
தடுப்பாற்றலை உயர்த்துவதில் பி விட்டமின்கள் முக்கிய இடம் பெறுகின்றன. நாளன்றுக்கு இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் நமது பி6 விட்டமின் தேவையை அது நிறைவு செய்து விடும். கைக்குத்தல் அரிசிக் சோறும், முளைவிட்ட பயறு வகைகளும் பிற பி விட்டமின் தேவைகளை ஈடு செய்யும்.
உடலில் ஏற்படும் வைரஸ் தொற்றினை எதிர்த்து நிறுத்தவும், புற்றுநோய் எதிர்ப்பு செல்களின் உற்பத்தியை ஊக்குவிக்கவும் வல்ல வேதியின் சுரப்பை உடனடியாக உயர்த்தக் கூடியது விட்டமின் ‘சி’ யாகும். ஒரு கப் ஆரஞ்சு சாறு, ஒரு கொய்யாப் பழம் உங்களுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய விட்டமின் ‘சி’ யைத் தந்து விடும். எலுமிச்சை, நாரத்தை, தக்காளி போன்ற பழங்கள், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர், முளைக்கீரை போன்ற காய்கறிகள் விட்டமின் ‘சி’ செறிந்தவையாகும்.
தடுப்பாற்றலை உயர்த்துவதில் விட்டமின் இ பெரும்பங்கு வகிக்கிறது என்று பல ஆய்வர்கள் கூறுகின்றனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொடர்ந்து விட்டமின் இ தரப்பட்டதில் அவர்களது தடுப்பாற்றல் ஏறக்குறைய 35 அல்லது 40 வயதுடையவர்களின் தடுப்பாற்றலை ஈடு செய்ய வல்லதாக இருந்தது என்கிறார் டாக்டர் லிண்டா எட்வர்டு. எல்லோரும் இவ்விட்டமினால் பயன் பெறலாம். பாதாம், பிஸ்தா, அக்ரூட், வேர்க்கடலை போன்ற பருப்பு வகைகளிலும் கடலை எண்ணெய், சூரியகாந்தி, சோயா எண்ணெய் போன்றவற்றிலும் உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கேரட், பச்சைப் பட்டாணி, கீரை வகைகள் போன்றவற்றிலும் விட்டமின் இ அதிகமாக காணப்படுகிறது.
எனவே நல்ல தடுப்பாற்றலைப் பெற நாம் சிறப்பாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. இயற்கையாகக் கிடைக்கும் காய்கறி, கீரை, கிழங்குகள், பழங்கள் போன்றவற்றை உண்டு வருவதன் மூலம் நமது தடுப்பாற்றலை உயர்த்திக் கொள்ள முடியும்.













