மனிதனின் வேலையை சுலபமாக்க கம்ப்யூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்ட காலம் மாறி..கம்ப்யூட்டர்களின் வேலையை சுலபமாக்க பல தொழில்நுட்பங்களை மனிதன் கண்டுபிடிக்கத் தொடங்கி விட்டான். அந்தளவுக்கு நம் உடலில் ஒரு பாகமாக மாறும் அளவுக்கு முக்கியத்துவத்தை அடைத்து விட்டது கம்ப்யூட்டர்! ஆனாலும்,
கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை இனிமேல் தான் பார்க்கப் போகிறீர்கள் என்று ஆய்வாளர்கள் ஆனந்த அதிர்ச்சிகளை அன்றாடம் வழங்கிக்கொண்டே இருக்கின்றனர். குறிப்பாக அடுத்த சில ஆண்டுகளில் உலகை ஆட்டிப்படைக்கப் போகும் தொழில்நுட்பங்கள் என்று சிலவற்றை பட்டியலிட்டுள்ளனர் அவற்றில் முக்கியமானவை உங்கள் பார்வைக்கு இதோ...
இனி தானாக ஓடும் வாகனங்கள்!
டிரைவர்கள் இல்லாமல் தானாகவே ஓடும் வாகனங்களை பேய் படங்களிலும், சில பல வெளிநாட்டு யுட்யூப் வீடியோக்களிலும் மட்டுமே பார்த்திருப்போம்..அடுத்த சில ஆண்டுகளில் நம் சாலைகளிலும் பார்க்கப் போகிறோம். டீப் லேர்னிங் அக்சலரேஷன் என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சென்சார், மேப் மற்றும் வீடியோக்கள் மூலம் வாகனங்களை கட்டுப்படுத்தி இயக்க முடியும் என்று ஆய்வாளர்கள் சோதனைகள் செய்து நிரூபித்துள்ளனர்.டிரைவர்களின் வேலைக்கு வேட்டு வைப்பதாக புகார்கள் எழும்பலாம், ஆனாலும் நேரத்தையும் பணத்தையும் இந்த தொழில்நுட்பம் வெகுவாக சேமிக்கும் என்று உறுதியாக கூறுகின்றனர் வாகன உற்பத்தியாளர்கள்.
உடலுக்குள் ஊடுருவும் தொழில்நுட்பங்கள்!
இனி உடலுக்குள் பிரச்சனை என்றால் ரத்த பரிசோதனை, ஸ்கேன், இசிஜி, என எங்கும் சென்று பரிசோதனைகள் செய்ய வேண்டாம். டிஜிட்டல் மாத்திரைகளை விழுங்கினால் போதும், அல்லது சிப்களை உடலுக்குள் பொருத்திக் கொண்டால் போதும், அல்லது சாதனங்களை உடலோடு வைத்து தைத்துக் கொண்டால் போதும், எப்போது வேண்டுமானாலும் நம் உடல் நிலையை பரிசோதித்து அறிக்கை பெறலாம் டாக்டருக்கு அனுப்பி ஆலோசனை பெறலாம். விளையாட்டு வீரர்களின் உடல் தகுதிகளை துல்லியமாக பரிசோதிக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆனாலும், இது ஹாலிவுட் படங்களில் வரும் வேற்றுகிரகவாசிகள் பூமியை துவம்சம் செய்வது போல இயற்கையாக அமைந்த உடலை கெடுக்கும் என்று ஒரு சாரார் இப்போதே எதிர்ப்பு காட்டத் தொடங்கி விட்டனர்.
நிஜ உலகையே கிராஃபிக்ஸ் உலகாக்கலாம்!
இப்போதெல்லாம் பல நூறு கோடிகள் கொட்டி படமெடுத்தாலும், ‘ அட, இது கிராஃபிக்ஸ் டா’ என்று குழந்தைகள் கூட சொல்லுமளவுக்கு தொழில்நுட்பங்கள் ஊடுருவியுள்ளன. இதை உணர்ந்த ஆய்வாளர்கள் ரியல் டைம் -ரே ட்ரேசிங் என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். நிஜ உலகின் பொருட்களையோ, ஆட்களையோ, காட்சிகளையோ பதிவு செய்து அதை கதைக்கேற்றபடி அப்படியே கிராஃபிக்ஸாக மாற்றும் தொழில்நுட்பம் இது. இனி கேம்ஸ், திரைப்படங்கள் எங்கும் நம் வயதான ஹீரோக்கள் பறந்து பறந்து நம்மை நம்ப வைத்து மகிழ்விப்பார்கள்!
- Premkumar Asogan













