செயற்கை நுண்ணறிவு பல காலமாக பேசப்பட்டு வந்த போதும் சமீப காலமாக அதிக ஆய்வுகள் நடப்பதற்கான காரணம் என்ன என்பதை உற்று நோக்குவோம்.
தேவை
தேவையே கண்டுபிடிப்புகளின் தாய் என்பர்.
இன்றைய பயனர்கள் தங்களின் தினசரி செயல்களை எளிதாக்க தானியக்கிகளை தேடுகின்றனர். தட்பவெட்ப நிலை, போக்குவரத்து நெரிசல், கட்டணம் செலுத்த வேண்டிய நாள், சந்திப்புகளுக்கான நினைவூட்டல் என அனைத்திற்கும் திறன்பேசியை (Smartphone) சார்ந்திருக்கும் மனநிலைக்கு நாம் தள்ளப்பட்டதால் இத்தகைய செயற்கை அறிவுத்திறன் உள்ள செயலிகளின் (Applications) தேவை அதிகரிக்கிறது.
வன்பொருள் உட்கட்டமைப்பு (Hardware Infrastructure)
முன்பைக்காட்டிலும் வன்பொருள்களின் விலை பலமடங்கு சரிந்துள்ளது. இதனால் முன்னர் கல்லூரிகளிலும், ஆய்வுக்கூடங்களிலும் மட்டுமே இருந்த செயற்கை அறிவுத்திறன் குறித்த ஆய்வுகளுக்கும், முயற்சிகளுக்கும் தேவையான வன்பொருள் எளிதில் அனைவரும் அடையும் வண்ணம் கிடைக்கிறது. நம்மிடம் சக்திவாய்ந்த வன்பொருள் இல்லாவிடினும் மெய்நிகர் இயந்திரங்கள் (Virtual Machines) மூலம் இன்று நமக்கு தேவைப்படும் வன்பொருளை குறைந்த செலவில், தேவைப்படும் நேரத்தில் மட்டும் பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் நினைவகம் (Storage) மற்றும் கணித்திறன் (Computing) செலவுகள் குறைவதால் அதிக அளவில் தரவுகளை சேமித்து அதனை கற்றலுக்கு பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
மென்பொருள் உட்கட்டமைப்பு (Software Infrastructure)
கட்டற்ற மென்பொருள் (Open Source Software) பிரபலம் அடைந்த பிறகு நமது முயற்சிகளை முதலில் இருந்து தொடங்க வேண்டிய தேவை குறைகிறது. இது தனித்தனித் தீவுகளாக செயலாற்றிய வல்லுநர்களை ஒன்றிணைத்து மற்றவரின் கண்டுபிடிப்புகளின் மேல் நமது கண்டுபிடிப்புகளை கட்டமைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது. இன்று பயன்பாட்டில் உள்ள பல மென்பொருள் நிரலகங்கள் (Software Libraries) இத்தகைய பயன்பாடுகளை வடிவமைப்பதை மிகவும் எளிதாக்கி விடுகிறது.
இணையம் (Internet)
செயற்கை அறிவுத்திறன் வளர்ச்சியில் இணையத்தின் பயன் அளவிடற்கரியது. இணையம் வேகமாக உள்ளதால் படங்களையும், குரலையும் சக்திவாய்ந்த வழங்கிகளுக்கு (Servers) அனுப்பி அவற்றை முறையாக்கம் செய்து விரைவில் அதன் முடிவை பெற முடிகிறது. இன்று இணையம் அனைவரின் திறன்பேசியிலும் எளிதில் தவழ்வதால் பலரும் தத்தம் மொழிகளில் உருவாக்கும் படைப்புகள் இயந்திரக் கற்றலுக்கு உள்ளீடுகளாக அமைந்து அவற்றை மேலும் மெருகூட்டுகிறது. பாரிய திறந்த இணைய வகுப்புகளும் (MOOC), இணையம், சமூக வலைத்தளங்களின் மூலம் ஏற்பட்ட விழிப்புணர்வும் இதன் முக்கியமான காரணங்களுள் ஒன்று.
கண்டுபிடிப்புகள்
ஆழ்கற்றல் (Deep learning), செயற்கை நரம்பணு பிணையம் (Artificial Neural Networks), சீரற்ற வனப்பகுப்பு (Random Forest Classification), பொருட்களின் இணைய உலகம் (Internet of Things) போன்ற துறைகளில் நிகழும் புதிய கண்டுபிடிப்புகள் இதன் பயன்பாட்டை அதிகப்படுத்துகிறது. பெரிய தரவு ஆய்வுகளுக்கான (Big data analytics) கருவிகள் அதிக அளவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது இத்துறையில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது.
பெரு நிறுவனங்கள் இவற்றில் ஆர்வம் காட்டுவதும், இதன் வளர்ச்சிக்காக பெரும் தொகையை செலவிடுவதும் இத்தகைய வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது. நம் தமிழ் மொழிக்கு யார் நேரத்தையோ பணத்தையோ செலவிடத் தயாராக உள்ளனர்? நம்மைப் போன்ற பலரின் சிறு சிறு பங்களிப்புகளாலே இத்துறையில் தமிழுக்கான இடத்தை பெற முடியும்.
ஹார்வார்ட் தமிழ் இருக்கை போன்ற முன்னெடுப்புகள் சற்றே நம்பிக்கை தருவதாக இருப்பினும் அதற்கான நிதிக்கும் நாம் கையேந்தும் நிலையிலேயே உள்ளோம். அரசாங்கமும் பாராமுகமாக இந்தியை வலிந்து நம் தலையில் திணிக்கவே நம் வரிப்பணத்தை செலவிடுகிறது.
- Manikandan T S













