கோடைகாலம் வரும் முன்னே மாம்பழம் வரும் பின்னே என்பார்கள்… இதோ அக்னி வெயில் தகிக்கும் வேளையில் மாம்பழ வாசனையும் வீசத் தொடங்கிவிட்டது. மாம்பழத்தில் பல வகை இருந்தாலும் சில குறிப்பிட்ட ரகங்கள் அலாதியான சுவை கொண்டவை. அல்ஃபோன்சா, மல்கோவா, இமாம்பசந்த், சேலம் பெங்களூரா, நடுசாலை(பீதர்), சேலம் குதாதாத் ஆகிய மாம்பழங்கள்.
மாம்பழத்தின் தாயகம் இந்தியா ஆகும், கி மு 4000 ஆண்டிலேயே மாம்பழங்கள் அதிக அளவு பயன்படுத்தி இருக்கிறார்கள். தெற்கு ஆசியாவில் தான் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. மாம்பழ உற்பத்தியில் இந்தியாதான் முதலிடம் வகிக்கிறது. உலக மொத்த உற்பத்தியில் 63 சதவிகிதம் இந்தியாவில் இருந்து தான் உற்பத்தியாகின்றது.
அல்ஃபோன்சா (Alphonso Mango)
இதன் பொன்மஞ்சள் நிறம் மாம்ழத்திற்கு கூடுதல் சிறப்பு அளிக்கிறது. நாவை வருடும் சுவையுடன் உள்ள இந்த பழம் மிகவும் இனிப்பாகவும் அதிக சதைப்பற்றுடன் நார் இல்லாமல் சாறு நிறைந்ததாக இருக்கும். இது, மாம்பழங்களின் ராஜா என்றும் அழைக்கப்படுகிறது.
மல்கோவா (Malgova or Malgoa)
மாம்பழம் என்றாலே நம் நினைவிற்கு வருவது இந்த மல்கோவா மட்டுமே. தென்னிந்தியா முழுவதும் பரவலாக இந்த மாம்பழங்கள் கிடைத்தாலும் சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் கிடைக்கும் மல்கோவா மாம்பழங்கள் தனி சிறப்பு வாய்ந்தது. தித்திப்பு சுவை கொண்ட இந்த மல்கோவா மாம்பழங்கள் பழுக்க பழுக்க இந்த வாசனை ஊரெல்லாம் பரவும்.
இமாம்பசந்த் (Imampasanth, Himayat or Humayun Pasand)
தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் விளைவிக்கப்படும் இந்த மாம்பழம் பச்சை நிறத்தில் காண்போரை கவரும்.
பீதர் (Peethar)
நடுசாலை அல்லது பீதர் மாம்பழங்கள் இளம் சிவப்பு பச்சை மற்றும் மஞ்சள் கலந்த நிறம் பார்ப்பவர்களை கவர்ந்து இழுக்கும். இதன் காயும் கனியும் சிறியதாகவே வளரும்.
சேலம் பெங்களூரா (Salem Bangalora)
நமது சேலம் பெங்களூரா மாம்பழம் அருமையான சுவை கொண்டது. இவற்றிற்கு தோத்தாபூரி, கல்லாமை, சுந்தர்சா, என பல்வேறு பெயர்களும் உண்டு. கர்ப்பிணிப் பெண்கள் விரும்பி உண்ணும் மாம்பழம் இது. இந்த பழத்தின் காய்கள் சற்றுக் குறைந்த புளிப்புச் சுவை கொண்டது.
சேலம் குதாதத் (Khudhadhadh Mango)
பெரிய பெரிய மாம்பழம் என்றால் சேலம் குதாதத் மாம்பழம் தான். இவை, சீசன் இறுதியில் கிடைக்கும். குதாதத் மாம்பழம் அளவில் பெரியதாக இருப்பதனால் ஜூஸ் போடுவதற்கு மிகவும் சிறந்தது.
ரகங்கள்:
இந்தியாவில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் மாம்பழங்களில் நீலம், பெங்களூரா, பங்கனப்பள்ளி, சிந்து, அல்போன்சா, மல்கோவா ஆகிய ரகங்கள் மிகவும் பிரபலமானவை.
- ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரை நடவு செய்ய ஏற்ற பருவம் ஆகும். நல்ல வடிகால் வசதி உள்ள செம்மண் நிலம் மாம்பழ உற்பத்திக்கு ஏற்ற மண் ஆகும். மண்ணின் கார அமில தன்மை 6 – 8 வரை இருக்க வேண்டும்.
- பயிரிடும் நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழவு செய்ய வேண்டும். பின்பு ஒவ்வொரு செடிக்கும் 8 முதல் 10 மீட்டர் இடைவெளி இருக்குமாறு மூன்று அடி ஆழமுள்ள குழிகளை எடுக்க வேண்டும். பின்னர் ஒவ்வொரு குழிக்கும் 5 கிலோ தொழு உரம் இட்டு குழிகளை நன்கு ஆறவிட்டு வேண்டும்.
- பின்பு தேர்ந்தெடுக்கப்பட்ட செடிகளை குழிகளின் மத்தியில் வைத்து நடவு செய்ய வேண்டும். அக்குழியை மண்ணை கொண்டு நிரப்ப வேண்டும்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட கன்றுகளை உடனே நடாமல் பயிர் செய்யப்போகும் நிலத்தின் மண்ணை அச்செடிகளின் வேர்பகுதிகளில் வைத்து புதிய தளிர்களை வரவைத்து பின் நடுவதினால் செடிகளின் இறப்பு விகிதத்தை அதிகப்படியாக குறைக்கலாம். இவ்வாறு செய்வதினால் கன்றுகள் பட்டுபோகாமல் தடுக்கலாம்.
- கன்றுகளை நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். இளங்கன்றுகள் மண்ணில் வேர் பிடிக்கும் வரை அடிக்கடி நீர் பாய்ச்சுவது நல்லது.
- அதேநேரத்தில் தண்டுப்பகுதியில் அதிக அளவிலான நீர் தேக்கத்தை தடுக்க வேண்டும்.
- சொட்டுநீர் பாசனத்தை உபயோகிப்பதினால் செடிகள் ஈரப்பதத்தோடு வளருவதுடன் நீர் வீணாவத்தையும் தடுக்கலாம்.
- அடிக்கடி தொழுவுரம் மற்றும் தழைசத்துக்களை வைப்பதினால் நல்ல வளர்ச்சியும் நல்ல மகசூலும் கிடைக்கும்.
மாம்பழத்தின் பயன்கள்
- மாம்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்து இருப்பதினால் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கும் ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை குறைப்பதற்கும் பயன்படுகிறது.
- தோல் பளபளக்க மாம்பழத்தை தொடர்ந்து உண்ண வேண்டும்.
- தோல்வறட்சியை தடுக்கவும் தோல் பளபளக்கவும் மாம்பழ துண்டுகளை கொண்டு அந்த இடத்தில தேய்க்கவும்.
- மாம்பழம் வாயுத் தொல்லையை நீக்கி, உடலுக்குப் புத்துணச்சியை அளிக்கிறது. பித்தத்தைப் போக்கி குடலுக்குப் பலம் தருகிறது. இதனால், சிறுகுடல், பெருங்குடல் எரிச்சல், வீக்கம் ஏற்படுவது குறையும்.
- நாள்பட்ட தலைவலியினாலும், அதன் காரணமாக உண்டான பார்வைக்கோளாறினாலும் அவதிப்படுகிறவர்களுக்கு, மாம்பழம் ஒரு வரப்பிரசாதம். இவர்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு மாம்பழச்சாறு பருகி வந்தால் பார்வைக்கோளாறு குணமாகும். மாம்பழத்தில் உள்ள குளுடாமின் அமிலம், குழந்தைகள் கவனம் செலுத்துவதற்கும், ஞாபக சக்திக்கும் ஊட்டமாக அமைகிறது.
-
முடி உதிர்வு மற்றும் வழுக்கை ஏற்பட்டவர்கள், ஒரு டேபிள் ஸ்பூன் மாம்பழ சதையுடன் வேப்பம்பூவை சேர்த்து அதனை விளக்கெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் கலந்து, தலையில் தேய்த்து மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு பயத்தமாவு, கடலை மாவு, சீயக்காய் பொடி மூன்றையும் சம அளவு கலந்து தலைக்குத் தேய்த்து குளிக்க வேண்டும். வாரம் இரண்டு முறை தொடர்ந்து செய்து வந்தால் முடி உதிர்வது நீங்கி நன்றாக முடி வளர ஆரம்பிக்கும்.
தினமும் குளிப்பதற்கு முன்பு, ஒரு டீஸ்பூன் வேப்பம்பூ விழுது, அரை டீஸ்பூன் மாம்பழ சதை, அரை டீஸ்பூன் நல்லெண்ணெய் ஆகியவற்றை கலந்து முகத்தில் பூசிவந்தால், மாசு மருக்கள், பருக்கள் மறைந்து, உங்கள் முகம் பொழிவு பெரும்.













