ஆண்டு முழுவதும் விளையக்கூடிய புதர் அல்லது படர்கொடி வகைத் தாவரப்பேரினம் ரோஜா.
ரோஜாவில் பல வகையான பூக்களும், பலவித வண்ணங்களும் உண்டு.
இதன் தண்டு பகுதி பெரும்பாலும் கூரிய முட்கள் கொண்டதாக இருக்கும்.
ரோஜா எப்படி பயிரிடுவது…?
எட்வர்ட் ரோஜா, ஆந்திர சிவப்பு ரோஜா ஆகியவை நாட்டு இரகங்கள் ஆகும். கலப்பு ரோஜா இரகங்கள் கிளாடியேட்டர், பேபி பிங்க், சோபியா லாரன்ஸ், YCD 1, YCD 2, YCD 3 போன்றவை சாகுபடி செய்யப்படுகின்றன.
பருவம்
கார்த்திகை மாதத்தில் ரோஜா செடிகளை நடவு செய்யலாம்.
மண்
களியும், மணலும் கலந்த இருமண்பாட்டு நிலம் மற்றும் செம்மண் நிலங்கள் பயிரிட ஏற்றவை.
பருவமழை பெய்ய ஆரம்பிக்கும் முன்னரே, 45 செ.மீ நீளம், அகலம் மற்றும் ஆழம் உள்ள குழிகளை 2.0 x 1.0 மீட்டர் இடைவெளியில் எடுத்து ஆறவிடவேண்டும். நடுவதற்கு முன்னர் குழி ஒன்றிற்கு 1 கிலோ தொழு உரம், 1.3 சதம் லிண்டேன் மருந்து 20 கிராம் மற்றும் மேல்மண் இடவேண்டும். லிண்டேன் இடுவதால் கரையான் மற்றும் எறும்புகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
விதைகள்
வேர்பிடித்த வெட்டு துண்டுகள் மற்றும் ஒட்டு கட்டிய செடிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
விதைத்தல்
தயார் செய்து வைத்துள்ள குழிகளில், வேர்பிடித்த வெட்டுத் துண்டுகளை குழிகளின் மத்தியில் நடவு செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்
நட்ட செடிகளுக்கு உடனடியாக நீர்ப்பாய்ச்ச வேண்டும். செடிகள் வேர்ப்பிடித்து துளிர்விடும் வரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறையும், பின்பு மண் மற்றும் கால நிலைகளுக்குத் தகுந்தவாறு வாரத்திற்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சவேண்டும். ரோஜா செடிகளுக்கு உப்புநீர் பாய்ச்சினால் செடிகள் நாளடைவில் காய்ந்துவிடும். எனவே உப்புநீர் பாய்ச்சுவதைத் தவிர்க்க வேண்டும்.
உரங்கள்
ரோஜா செடியை கவாத்து செய்தவுடன் செடியைச் சுற்றி 2 அடி தள்ளி செடி ஒன்றிற்கு 10 கிலோ தொழு உரத்துடன் 6:12:12 கிராம் என்ற விகிதத்தில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை இடவேண்டும். வளர்ச்சி ஊக்கிகளை சரியான முறையில் கொடுத்து வந்தால் வேறு எந்த உரங்களும் இதற்கு தேவைப்படாது.
முதலாம் ஆண்டு ரோஜா பூக்க ஆரம்பிக்கும். ஆனால் இரண்டாம் ஆண்டில் தான் சீரான வளர்ச்சி இருக்கும். மலர்ந்த மலர்களை அதிகாலையில் பறிக்க வேண்டும்.
மகசூல்
ஒரு எக்டரிலிருந்து, ஒரு வருடத்திற்கு 10 இலட்சம் பூக்கள் வரை மகசூல் கிடைக்கும்.
பயன்கள்
- ரோஜா இதழ்களை சேகரித்து நிழலில் உலர்த்தி, நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி உட்கொண்டால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் நீர்க்கட்டு சரியாகும். வாய்ப்புண்ணும் விரைவில் குணமாகும்.
- ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து காலை, மாலை ஆகிய இருவேளை அப்படியே உட்கொண்டுவர சீதபேதி இரண்டொரு நாளில் குணமாகிவிடும்.
- புண்கள் குணமாக ரோஜா பூ இதழ்களிலிருந்து குடிநீர் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தைக் கழுவ வேண்டும். இந்நீரை கொண்டு வாய் கொப்பளிக்க வாய்ப்புண் குணமாகும்.
- ரோஜா இதழ்களை சேகரித்து தேனிலோ அல்லது சர்க்கரை பாகிலோ ஊற வைத்து தினமும் சாப்பிட்டுவர இதயம் வலிமை பெறும். மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
- ரோஜா மலரின் சாற்றை ஒற்றைத் தலைவலிக்கு பயன்படுத்தலாம். தலைவலி எந்த பக்கம் இருக்கிறதோ, அதற்கு நேரெதிர் நாசி துவாரத்தில் இதன் சாற்றை 2 துளிவிட உடனே தலைவலி மறைந்துபோகும்.













