தெலுங்கானாவின் தலைநகர் ஹைதராபாத்திற்கு வடகிழக்கே 309 கி.மீ தொலைவில். கம்மம் மாவட்டத்தில் கோதாவரி ஆற்றங்கரையோரம் அமைந்திருக்கிறது பத்ராச்சலம்.
பத்ரகிரி என்ற வார்த்தையிலிருந்து உருவானது பத்ராச்சலம் என்றª பயர். புராண கூற்றின்படி மேருவுக்கும் மேனகாவிற்கும் வரம் வாங்கிப் பிறந்த குழந்தையே பத்ரா . அவள் பெயரில் இந்த ஊர் அழைக்கப்பட்டதாம்..
ஸ்ரீராமர் , சீதை மற்றும் லக்ஷ்மணனுடன் தண்டகாரண்ய வனப்பிரதேசத்தில் வாசம் செய்தார். அந்த வனத்தில் ஒருபகுதியே பத்ராச்சலம். இன்று இங்கே இராமருக்கு ஒரு கோயில் உண்டு. இந்த தண்டகாரண்யத்திலிருந்துதான் இராவணன் சீதையைக் கடத்திச் சென்றான்.
பத்ராச்சலம் நகரில் பத்ரா என்கிற முனிவர் இராமர் மேல் பக்தி கொண்டு வாழ்ந்து வந்தார். இவர் இராமனைச் சந்தித்து தன் சிரசின் மேல் அமரும்படி கேட்டுக் கொண்டாராம். ஆனால் தான் இலங்கையிலிருந்து திரும்பும் போது அமருகிறேன் என்று சொல்லி சென்றுவிட்டார் ராமர். ஆனால் திரும்ப பத்ராச்சலம் பகுதிக்கு அவர் வரவேயில்லை. இதனால் பத்ரா முனிவர் விஷ்ணுவை எண்ணித் தவமிருந்தார்.
அவர் தவத்தினை மெச்சிய மகாவிஷ்ணு இராமபிரான் வடிவில் சீதை, லட்சுமணனுடன் காட்சி தந்து அருளினார். அதுமட்டுமன்றி முனிவரின் வேண்டுகோளின்படி, பத்ரகிரியின் உச்சியில் தன் இடது தொடையில் சீதையையும் வலது தொடையில் லக்ஷ்மணனையும் அமர வைத்தபடி காட்சி தந்தாராம் ஸ்ரீராமர்.
இங்குள்ள ஸ்ரீராமர் கோயிலுக்கும் ஒரு கதை உண்டு. போகால தம்மக்கா என்ற பெண்ணின் கனவில் தோன்றிய ஸ்ரீராமர், பத்ரகிரியின் மலைச் சரிவில் சில விக்ரங்கள் மறைந்து கிடப்பதாகக் கூற, தம்மக்கா, அந்த விக்ரங்களைக் கண்டு பிடித்து பத்ரகிரியில் ஒரு சிறு கோயிலைக் கட்டி அதில் அந்த சிலைகளை ஸ்தாபனம் செய்து வழிபாடு செய்து வந்தாராம். அக்காடுகளையும் சுத்தம் செய்து கோயிலுக்கு வழி அமைத்தாராம். இதற்குப் பின்னர் பத்ராச்சலம் புண்ணியத்தலமாகி, ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்யும் தலமாகிவிட்டது













