தமிழகம் மறைத்த (மறந்த) வீர பேரரசி இராணி மங்கம்மாள்

SOCIAL SHARE
Pin It

தற்போதைய திருச்சியில் உள்ள சத்திரம் பேருந்து நிலையம் என்பது அக்காலத்தில் மங்கம்மாள் சத்திரம் என்ற பெயரில்தான் அழைக்கப்பட்டது.

தற்போது சத்திரம் பேருந்து நிலையம் என்று குறுகி விட்டது. மதுரை இரயில் நிலையத்திற்கு எதிர்புறம் அமைந்திருக்கும் மங்கம்மாள் சத்திரம் இன்னும் அவரின் கொடைத்தன்மையை பறைசாற்றிய வண்ணம் நின்று கொண்டிருக்கிறது.

இராணி மங்கம்மாள், 17 ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட பெண்ணரசி (1689&-1704) இவரது தந்தை முத்தியப்ப நாயக்கர், மதுரை மன்னன் சொக்கநாதரின் தளபதியாக பணிபுரிந்தவர்.

இராணி மங்கம்மாள் வளர்ந்தபின் சொக்கநாத நாயக்கர் இராணி மங்கம்மாளை மணந்து கொண்டார்- சொக்கநாத நாயக்கர் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் பேரன் ஆவார்.

சொக்கநாதர் இறந்தபின் மங்கம்மாள் இளம் வயதாக இருந்த, தன் மகன் அரங்க முத்துகிருஷ்ண வீரப்ப நாயக்கரை மதுரை அரசனாக்கி தன்னை காப்பாளராக அறிவித்துக் கொண்டு தனது இராச்சியத்தை ஆண்டு வந்தார். இவர் திருச்சிராப்பள்ளியைத் தன் தலைநகராக கொண்டிருந்தார் என்பதும் தெரியவருகிறது. முத்துகிருஷ்ண வீரப்ப நாயக்கர் பெரிய அம்மை நோயால் இறந்து விட அவரது குழந்தையை அரசனாக அறிவித்து, மங்கம்மாள் 1704 ஆம் ஆண்டுவரை ஆட்சி புரிந்து வந்தார்.

மங்கம்மாள் முறையாகப் போர்ப்பயிற்சிகளைப் பெற்ற வீராங்கனையும் கூட, மங்கம்மாள் பல கோயில்களை கட்டியதோடு, பாசனத்திற்காக பல கால்வாய்களையும், குளங்களையும் அமைத்துள்ளார்.

இராணி மங்கம்மாளின் சமயப்பணி

மீனாட்சியம்மனின் பக்தையான இவர் அம்மனுக்கு விலை உயர்ந்த ரத்தினங்களையும், அணிகலன்களையும் பரிசளித்துள்ளார். பல்லக்கினையும் வழங்கியுள்ளார். கோயில் விழாக்களில் அம்மனின் பாதத்தில் தன் செங்கோலை வைத்து வழிபாடு செய்வது இவரது வழக்கம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவத்தை ஆரம்பித்து வைத்தவரும் இவர்தான். இன்றும் இவரது ஓவியத்தை ஊஞ்சல் மண்டபத்தில் காணமுடியும்.

இக்கோயிலின் முன் பகுதியில் அமைந்துள்ள நகரா மண்டபம் மங்கம்மாவால் கட்டப்பட்டது.

இதே போல் திருப்பரங்குன்றம் கோயிலின் முன் மண்டபத்தைக் கட்டியவரும் இராணி மங்கம்மாளே. இக்கோயிலின் மேற்கு வரிசைத் தூண் ஒன்றில் முருகன் தெய்வானையின் திருமணக¢ காட்சி சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. எதிரில் கிழக்குப் பக்கமாக எதிரில் உள்ள தூணில் மங்கம்மாள் தன் பெயரனோடு, முருகனின் திருமணக்காட்சியைக் காண்பது போன்ற சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

அதே போல் மதுரையிலிருந்து அருப்புக் கோட்டைச் செல்லும் பகுதியில் அமைந்துள்ள அவனியாபுரம் என்ற ஊரில் அனுமன் கோயில், மற்றும் அலங்காரப் பிள்ளையார் கோயிலையும் மங்கம்மாள் கட்டி வைத்துள்ளார். இக்கோயிலின் எதிர்புறம் அமைந்துள்ள கல்வெட்டில்தான் இராணி மங்கம்மாளின் தந்தையின் பெயர் வடிக்கப்பட்டிருக்கிறது.

மக்களின் பசிப் போக்கவும், பயணிகள் இரவு வேளையில் ஓய்வெடுத்துக் கொண்டு தங்கள் பயணத்தைத் தொடரவும், மங்கம்மாள் சாலை ஓரங்களில் பல சத்திரங்களைக் கட்டி வைத்தார். அங்கே உணவும் வழங்கப்பட்டது. கால்நடைகளுக்கும், நீரும், புற்களும் வழங்கப்படடன.

திருநெல்வேலி மாவட்டத்தில் இராணி மங்கம்மாள் சாலை என்றே ஒரு சாலை இருக்கிறது. மதுரை கன்யாகுமரி நெடுஞ்சாலையை அமைத்தவரும் இவர்தான். அச்சாலை இராணி மங்கம்மாள் பெயரில் அழைக்கப்படுகிறது.

மேலும் தற்போதைய விருதுநகர் மாவட்டத்தில் அடங்கியுள்ள பல கிராமங்களுக்கு சாலை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தவர். அக்கிராமங்களில் வாழும் வயது முதிர்ந்தவர்கள் இன்னும் அந்த சாலைகளை இராணி மங்கம்மாள் சாலை என்றே அழைக்கின்றனர்.

இராணிமங்கம்மாளின் அரசியல் சாதுர்யம்

இராணி மங்கம்மாள் சிறந்த நிர்வாகியும் கூட, அச்சமயத்தில் மொகலாயப்படை வலிமை மிக்கதாய் இருந்தது, அவர்களுடன் நட்புறவு பூண்டார். அச்சமயத்தில் திருவிதாங்கூர் மதுரை ஆட்சிக்கு உட்பட்ட சிற்றரசாக இருந்து வந்தது. இருப்பினும் போர் ஏற்பட்ட போது மங்கம்மாள் இந்தச் சிற்றரசை அடக்கினார்.

தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னரையும் அடக்கி வைத்தார்.

மைசூர் மன்னன் சிக்கதேவராயன் நாயக்கர்களை வீழ்த்த 1695 ஆம் ஆண்டில் திருச்சியை முற்றுகையிட்டான். இராணி மங்கம்மாளின் படை அம்முற்றுகையை உடைத்து, சிக்கதேவராயன் படைகளை விரட்டியடித்தது.

இராமநாதபுர மன்னர் ரகுநாதசேதுபதி மதுரை அரசுக்கு எதிராக இருந்தார். இதனால் அவரை அடக்க தன் படைகளை அனுப்பி வைத்தார் இராணி மங்கம்மாள்.

மதுரை நாயக்க அரசின் தொடர் வெற்றிக்கு காரணமாய் இருந்த தளவாய் நரசப்பையா வீர மரணம் அடைந்தார். இதனால் இராணி மங்கம்மாள் தோல்வியைத் தழுவ வேண்டியதாயிற்று.

மங்கம்மாளின் பேரன் விஜயரங்க சொக்கநாத நாயக்கர், வளர்ந்தபின் பிறரின் துர்போதனையைக் கேட்டு, தனது பாட்டியை வெறுத்து, எதிரியாகவும் கருதினார். இராணி மங்கம்மாள் தன் பேரனால், தனது பெயராலேயே சிறைவைக்கப்பட்டார்.

அதுவே அவரது இறுதிக்காலமாயிற்று. அங்கே பட்டினியில் வாடிய மங்கம்மாள் என்ற மிகச்சிறந்த பெண்ணரசி 1706 இல் தன் இன்னுயிரை உகுத்தார்.

தன் திறமையின் மூலம் தனியொரு பெண்ணாக, 18 ஆண்டுகாலம் மதுரையை மிகச் சிறப்பான முறையில் ஆண்ட இராணி மங்கம்மாள், தமிழக மக்களிடம் இன்னும் புகழ் பெற்றவராகவே இருந்து வருகிறார்.

மதுரையில் தற்போது உள்ள காந்தி மியூசியமானது அக்காலத்தில் இராணி மங்கம்மாள் வாழ்ந்து அரசாட்சி செய்த அரண்மனை. வீரமங்கையான இராணி மங்கம்மாளின் அரசாட்சியையும், வீர தீர செயல்களையும் விளக்கும் வகையிலான மியூசியமாக தமிழக அரசு இதை பயன்படுத்தி இருக்கலாம். மாறாக 1955 ஆம் ஆண்டு அப்போது இருந்த தமிழக அரசு இந்த அரண்மனையை காந்தி சன்மார்க்க நிதிக்கு நன்கொடையாக அளித்துவிட்டதால் தற்போது அது காந்தி மியூசியமாக செயல்பட்டு வருகிறது.

காந்தி மியூசியத்தை தமிழகத்தின் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அக்கால தமிழகத்தின் உள் கட்டமைப்புக்கும், வீர தீர செயல்களுக்கும் பெயர்பெற்ற இராணி மங்கம்மாள் வாழ்ந்த இந்த அரண்மனையை அவரின் புகழை பறைசாற்றும் அரண்மனையாக மாற்ற வரலாற்று ஆய்வாளர்கள் முயற்சி எடுத்தால் வருங்கால தலைமுறையும் இராணி மங்கம்மாளை பற்றி அறிந்து கொள்ள ஒரு பெரும் வாய்ப்பாக அமையும்.

வருங்கால தலைமுறைக்கு தமிழகர்களின் பாரம்பரியத்தையும், வரலாற்றையும் கொண்டுபோய் சேர்ப்பது அரசின் கடமையும் கூட. அரசாங்கமே தமிழர்களின் வரலாற்றை மாற்றி எழுத துணை போகாமல் இராணி மங்கம்மாள் அரண்மனையை மீட்டெடுக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ARUNACHALAM