Editor's Choice

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த Gosiame Thamara Sithole என்ற 37 வயது பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்து உலக சாதனைபடைத்து உள்ளார். இவருக்கு ஏற்கனவே ஆறு வயதில் இரட்டைக் குழந்தைகள் இருக்கின்றனர்.

கர்ப்பமாக இருந்த Sithole, பிரிட்டோரியா மருத்துவமனையில் அறுவைசிகிச்சை மூலம் ஏழு ஆண் குழந்தைகள், மூன்று பெண் குழந்தைகள் என 10 குழந்தைகளை பெற்றார்.  

கர்ப்பமாக இருந்த போது எடுக்கப்பட்ட ஸ்கேன்களில் 8 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. ஆனால் பிரசவத்தில் 10 குழந்தைகள் பிறந்தன. கர்ப்பகாலத்தில் கவலையால் தூக்கமே வரவில்லை என்று Sithole சொல்கிறார். இத்தனை குழந்தைகளை கருப்பை எப்படி தாங்கும்? குழந்தைகள் உயிருடன் பிறக்குமா? ஒன்றுடன் ஒன்று கை-கால்கள் ஒட்டிப் பிறந்தால் என்ன செய்வது? என பல்வேறு கவலைகளால் பாதிக்கப்பட்டதாக சொல்கிறார் பத்தும் பெற்ற மகராசி. ஆனால் 10 குழந்தைகளும் இயல்பாகவே இருக்கின்றன. 

பத்து குழந்தைகள் பெற்ற பெண்ணுக்கு இயற்கையான கர்ப்பம் இது, செயற்கை கருவுறுதல் சிகிச்சை எதையும் அவர் எடுத்துக் கொள்ளவில்லை. 

ஹலிமா சிஸ்ஸே என்ற பெண் கடந்த மாதம் மாலியாவில் ஒன்பது குழந்தைகளைப் பெற்றெடுத்தது தான் ஒற்றை பிரசவத்தில் அதிக குழந்தைகள் பிறந்த சாதனையாக இருந்தது.  

ஒரே பிரசவத்தில் சித்தோல் 10 குழந்தைகளை பெற்றெடுத்தார் என்ற செய்தி குறித்து  பேசிய கின்னஸ் உலக சாதனை நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், அமைப்பின் சார்பில் வாழ்த்துக்களையும் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களை அனுப்பி உள்ளதாக தெரிவித்தார்.  தற்போது, தாய் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு  முன்னுரிமை அளிப்பதால் தகவலை இன்னும் சரிபார்க்கவில்லை என்று கூறும் அவர், சிறப்பு ஆலோசகருடன் கின்னஸ் குழு இதைப் பற்றி ஆய்வு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

Editor's Choice

சீனாவில் உருவாக்கப்பட்ட கோவிட் தடுப்பூசியை செலுத்திய, 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள், சீனாவுக்கு செல்ல விசா வழங்க கோரி சீனத் தூதரகத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

சீனாவில் பணி மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த நூற்றுக்கணக்கான இந்தியர்கள் கோவிட் பரவலால் கடந்த ஆண்டு இந்தியா திரும்பியிருந்தனர். இந்நிலையில் கடந்த மார்ச் 15ம் தேதி, 'இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்தவர்கள் சீனா வருவதற்கு, கோவிட் தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும்' என, சீன அரசு நிபந்தனையை விதித்தது.

சீனத் தடுப்பூசி இந்தியாவில் கிடைக்காததால், சீனா திரும்ப வேண்டிய இந்தியர்களுக்கு இந்த நிபந்தனை சிக்கலை ஏற்படுத்தியது. எனினும் சீனாவில் தங்கள் பணிக்கு திரும்பவும், குடும்பத்துடன் இணையவும் வேண்டி, 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நேபாளம், மாலத்தீவு, துபாய் போன்ற அண்டை நாடுகளுக்குச் சென்று ஒரு மாதத்துக்கும் மேலாக தங்கி சீனத் தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொண்டனர். ஆனால் சீனத் தூதரகம் அந்நாட்டுக்கு திரும்ப விசா வழங்காததால் அவர்களின் முயற்சி வீணானது.

தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்கள் தங்களுக்கு விசா அளிக்கக் கோரி இந்தியாவுக்கான சீனத் தூதருக்கு கடிதம் எழுதியுள்ளனர். தங்களுக்கு உதவுமாறு சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கும் அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். இந்தியா மற்றும் இதர பகுதிகளில் கோவிட் தொற்றின் 2வது அலை உருவானதால், இந்தியா - சீனா இடையிலான விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியர்கள் வேறு நாட்டுக்குச் சென்று அங்கிருந்து சீனாவுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Editor's Choice

இங்கிலாந்தில் டேட்டிங் ஆப்கள், அரசுடன் இணைந்து அங்கு நடந்து வரும் தடுப்பூசி இயக்கத்திற்கு ஆதரவாக ஒரு புதிய பிரச்சாரத்தை துவக்கி உள்ளன.

டேட்டிங் ஆப்கள் தங்கள் யூஸர்கள் கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் என்றால், அதை வெளிப்படுத்த சிறப்பு ஸ்டிக்கர்கள், பேட்ஜ்கள் மற்றும் போனஸ் ஆகியவற்றை வழங்க முடிவு செய்துள்ளன. இப்போது பிரிட்டனில் உள்ள ஆன்லைன் டேட்டர்கள் தங்கள் ப்ரொஃபைலில் கோவிட் தடுப்பூசி பேட்ஜை வெளிப்படுத்தலாம் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில், கோவிட் தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களுடன் டேட்டிங் செல்ல விரும்பவில்லை என சுமார் 60% அதிகமானோர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

மேலும் தடுப்பூசி போட்டு கொள்ள ஆர்வம் இல்லை என்று சொன்னவர்களை விட, தடுப்பு மருந்து எடுத்து கொண்டவர்களை டேட்டிங் செய்வதையே பலர் விரும்புவதும் தெரிய வந்தது. எனவே டிண்டர், மேட்ச், கீல், பம்பிள், பேடூ, அவர் டைம் மற்றும் முஸ்மாட்ச் போன்ற டேட்டிங் ஆப்கள் அனைத்தும் யுனைடெட் கிங்டம் அரசுடன் இணைந்து நாட்டில் தடுப்பூசி இயக்கத்தை அதிகரிக்க செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. டேட்டிங் ஆப்கள் முன்னெடுத்துள்ள இந்த புதிய முயற்சி நாட்டின் கோவிட் -19 தடுப்பூசி திட்டத்திற்கு ஒரு “நம்பமுடியாத சொத்து” என்று பிரிட்டன் அமைச்சர் நாதிம் ஜஹாவி மேற்கோளிட்டுள்ளார்.

சில டேட்டிங் ஆப்கள் தங்கள் ப்ரொஃபைலில் கோவிட் தடுப்பூசி பேட்ஜை சேர்க்கும் யூஸர்களுக்கு ஃப்ரீ கிரெடிட்ஸ் அல்லது ப்ரொஃபைல் பூஸ்ட்ஸ், விரிச்சுவல் ரோஸ் கொடுப்பது, சூப்பர் லைக்குகள் போன்ற பிரீமியம் அம்சங்களுக்கான அணுகல் உள்ளிட்ட சலுகைகளை வழங்குகின்றன. அமெரிக்காவை தளமாகக் கொண்ட Bumble டேட்டிங் ஆப், அதன் உறுப்பினர்களுக்கு சமூக தூரத்தைப் பற்றிய பார்வைகள், மாஸ்க் அணிவது மற்றும் யூஸர்கள் நெரிசலான இடங்களில் சந்திப்பதற்கு வசதியாக இருக்கிறதா போன்ற தொற்று டேட்டிங் விருப்பங்களை ஷேர்ஸ் செய்து கொள்ள உதவும். இருப்பினும் தடுப்பூசி போட்டு கொண்டதாக டேட்டிங் ஆப்பில் பேட்ஜை காண்பிக்கும் யூஸர்கள் உண்மையிலேயே தடுப்பூசியை போட்டு கொண்டார்களா இல்லையா என்பதை சரிபார்க்க எந்த வழியும் இல்லை என்றே கருதப்படுகிறது. மேலும் தங்களது யூஸர்கள் அவர்களது ப்ரொஃபைலில் தடுப்பூசி போட்டு கொண்டதாக அப்டேட் செய்து வரும் நபர்களின் எண்ணிக்கையில் சீரான அதிகரிப்பு இருப்பதாக Bumble தெரிவித்துள்ளது.

Editor's Choice

காந்தியின் பேத்தி எலா காந்தி. இவர் மனித உரிமை ஆர்வலர். இவரது மகள் ஆஷிஷ் லதா ராம்கோபின். ராம்கோபின் அகிம்சைக்கான சர்வதேச மையத்தில், பங்கேற்பு மேம்பாட்டு முயற்சியின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். தன்னை 'சுற்றுச்சூழல், சமூக மற்றும் அரசியல் நலன்களை மையமாகக் கொண்ட ஒரு ஆர்வலர்' எனக் கூறிக் கொள்வது வழக்கம். இவருக்கு எதிராக கடந்த 2015ம் ஆண்டில் மோசடி வழக்கு ஒன்று தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. 

நியூ ஆப்பிரிக்கா அலையன்ஸ் நிறுவன இயக்குனரான தொழிலதிபர் மகாராஜை 2015ல் ராம்கோபின் சந்தித்துள்ளார். மகாராஜின் நிறுவனம் ஆடை, கைத்தறி மற்றும் பாதணிகளை இறக்குமதி செய்து விற்பனை செய்கிறது. மகாராஜின் நிறுவனம் மற்ற நிறுவனங்களுக்கு 'லாபத்தில் பங்கு' அடிப்படையில் நிதியையும் வழங்குகிறது. இந்தியாவிலிருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு தனக்கு சரக்குகள் வந்துள்ளதாகவும், ஆனால், இறக்குமதி செலவுகள் மற்றும் சுங்கக் கட்டணத்தை செலுத்துவதற்கு தனக்கு பணம் இல்லை என்றும், துறைமுகத்தில் உள்ள பொருட்களை உள்ளே எடுக்க வேண்டுமானால் அவசரமாக பணம் தேவை என்றும் ராம்கோபின் மகாராஜை அணுகியுள்ளார்.

இதற்காக மகாராஜிடம் 6 மில்லியன் டாலர் அளவுக்கு பணம் கேட்டுள்ளார் ராம்கோபின். இதையடுத்து மகாராஜ் தரப்பில் ராம்கோபினுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஆவணங்கள் போலியானவை என்று கண்டறியப்பட்டதையடுத்து, கடந்த 2015ம் ஆண்டு குற்றவியல் வழக்கு தொடர்ந்தார் மகாராஜ்.
 
வழக்கு ஆரம்பித்தபோது, லதா ராம்கோபின் 50,000 ரேண்ட் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், 'இந்தியாவில் இருந்து மூன்று கைத்தறி கன்டெய்னர்களை இறக்குமதி செய்வதாக, பொய் தகவல் கூறி, போலி இன்வாய்ஸ் மற்றும் ஆவணங்களை ராம்கோபின் வழங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது' எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் காந்தி வழக்கறிஞராகப் பணியாற்றினார். அப்போது 1893-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி டர்பன் நகரில் இருந்து பிரிட்டோரியா நகருக்கு செல்வதற்காக, முதல் வகுப்பு டிக்கெட்டுடன் ரயிலில் பயணித்தார் காந்தி. அந்த பெட்டியில் வெள்ளையர்களுக்கு மட்டுமே அனுமதி எனக்கூறி, காந்தியை ரயிலில் இருந்து கீழே தள்ளினர். அதன்பின் பிரிட்டிஷாரின் இனவெறியை எதிர்த்து சத்தியாகிரகப் போராட்டத்தை தென் ஆப்பிரிக்காவிலும், பிறகு இந்தியாவிலும் காந்தி தீவிரமாக நடத்தினார். ஆனால் அதே டர்பன் நகரில் காந்தியின் கொள்ளுப்பேத்தி மோசடி வழக்கில் சிறைக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 
Editor's Choice

சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், இன்ஸ்டாகிராமில் செய்த ஒரு பதிவு பெரும் புயலை கிளப்பியது. சமூக ஊடகத்தில் செய்த பதிவுக்காக,  பெரிதும் ட்ரோல் செய்யப்பட்டார் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்.  காலிஸ்தானிய பயங்கரவாதி ஜர்னைல் சிங் பிந்த்ரான்வாலேவிற்கு ‘அஞ்சலி’ செலுத்தி, அவரை புகழ்ந்து போடப்பட்ட பதிவு பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதை அடுத்து ட்விட்டரில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்

ஹர்பஜன், திங்களன்று, இது குறித்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் தனது பதிவு கவனிக்காமல் அவசரமாக பதிவு செய்யப்பட்டதாகவும், அது தனக்கு வாட்ஸ் அப்பில் கிடைத்த தகவல் அது என்றும் தெளிவுபடுத்தினார். இந்தியாவுக்கு எதிரான எதையும் தான் ஆதரிக்கவில்லை என்று அவர் மேலும் கூறினார். 

"ஒரு வாட்ஸ்அப் தகவல் வந்தது. அதனை முழுமையாக கவனிக்காமல்,  உள்ளடக்கம் எதைக் குறிக்கிறது என்பதை உணராமல் அவசரமாக பதிவிட்டு விட்டேன். நான் செய்தது தவறு தான், எந்த நிலையிலும், நான் பகிர்ந்த அந்த கருத்துக்களுக்கு எனக்கு எந்த விதத்திலும் உடன் பாடு இல்லை. நான் ஒரு போது, இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை ஆதரிக்க மாட்டேன், ”என்று ஹர்பஜன் ட்வீட் செய்துள்ளார். 

“நான் ஒரு சீக்கியர், நான் இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கும் சீக்கியன். எதிராக அல்ல. நான் 20 ஆண்டுகளாக இந்த நாட்டிற்காக எனது இரத்தத்தையும் வியர்வையையும் கொடுத்துள்ளேன், இந்தியாவுக்கு எதிரான எதையும் ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன், ”என்று அவர் மேலும் கூறினார்.

Editor's Choice

Gucci என்பது ஒரு ஆடம்பர ஃபேஷன் பிராண்டாகும்.  Gucci நிறுவனம், எம்பிராய்டரி செய்த ஒரு குர்தாவை 2.5 லட்சத்திற்கு விற்பனை செய்கிறது என்ற தகவல் இணையத்தில் வைரலாக  பரவி வருகிறது. இந்த செய்தியை ஒரு ட்விட்டர் பயனர் பகிர்ந்தவுடன், இது வைரல் ஆகி வருகிறது. இணைய வாசிகள் இதற்கு பல்வேறு விதமான கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

Gucci வலைத்தளத்திலிருந்த குர்தாவின் புகைப்படத்தின் ஸ்க்ரின்ஷாட்டை பதிவு செய்த இந்த குறிப்பிட்ட ட்விட்டர் பயனர், இதன் தலைப்பில், "Gucci ஒரு இந்திய குர்தாவை 2.5 லட்சத்திற்கு விற்பனை செய்கிறது. இதே குர்தாவை என்னால் இங்கு 500 ரூபாயில் வாங்க முடியும்" என எழுதியிருக்கிறார். 

Gucci வலைத்தளத்தில் இந்த குர்தா, "மலர் எம்பிராய்டரி செய்யப்பட்ட ஆர்கானிக் லினன் கஃப்தான் (Floral embroidery organic linen kaftan)" என தெரிவித்துள்ளது. இதன் விலை 3,500 அமெரிக்க டாலராக, அதாவது 2,55,878 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆஃப்-வைட் லினென் குர்தாவான இதில் பூ வடிவ எம்பிராய்டரி செய்யப்பட்டுள்ளது. கை பகுதியிலும் சில வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இந்த ஃபாஷன் பிராண்ட் இத்தாலியில் உள்ள ஃப்ளாரன்ஸ் நகரில் உள்ளது.

"இதுக்கு 150 ரூபாய்க்கு மேல ஒரு ரூபா கூட கொடுக்க முடியாது" என்று பயனர் வேடிக்கையாக கூறியுள்ளார். மற்றொருவர், "சரோஜினி நகர் மார்ட்கெட்டில் 250 ரூபாய்க்கு கிடைக்கும்" என்று கூறியுள்ளார். 

பக்கம் 6 / 90