அமெரிக்காவில், குடியுரிமை பெறாமல் தங்கி வேலை பார்க்கும் வெளிநாட்டினருக்கு, எச் - 1பி விசாக்கள் வழங்கப்படுகின்றன. இந்த விசாவால், அதிக எண்ணிக்கையிலான இந்தியர்களும், சீன நாட்டினரும் பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையே, அமெரிக்க இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்து, எச் - 1பி விசா வழங்கும் நடைமுறைகளில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தார்.
அதனால், இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள், பெரும் சிரமத்திற்கு
உள்ளாயினர். கடந்த ஜனவரியில், அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன், 'விசா வழங்கும் நடைமுறைகளில் உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்' என, வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில், எச் - 1பி விசா கட்டுப்பாடுகளால் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வுக்கு உட்படுத்தி, அதை மறு பரிசீலனை செய்ய, ஜோ பைடனின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதை, யு.எஸ்.சி.ஐ.எஸ்., எனப்படும், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் துறை, தெரிவித்துள்ளது.













