Editor's Choice

இங்கிலாந்தில் கடந்த 1940 முதல் 1945 வரை பிரதமராக இருந்தவர் வின்ஸ்டன் சர்ச்சில்.‌ அரசியல்வாதி, ராணுவ அதிகாரி, எழுத்தாளர் என பன்முகங்களை கொண்ட இவர் சிறந்த ஓவியராகவும் திகழ்ந்து வந்தார்.

இவர் கடந்த 1943-ம் ஆண்டு காசாபிளாங்கா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மொராக்கோ சென்றபோது, அங்குள்ள கவ்டவ்பியா மசூதியை கண்டு வியந்து அதனை தத்ரூபமாக ஓவியம் தீட்டினார்.
பின்னர் அவர் அந்த ஓவியத்தை அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி பிராங்கிளின் ரூஸ்வெல்டுக்கு பரிசளித்தார்.

இந்த புகழ்பெற்ற ஓவியம் பல்வேறு நபர்களின் கைக்கு சென்று இறுதியாக கடந்த 2011-ம் ஆண்டு பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியின் கையில் வந்து சேர்ந்தது.

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் நடைபெற்ற ஏலத்தின் வின்ஸ்டன் சர்ச்சிலின் இந்த ஓவியத்தை அதிக விலை கொடுத்து தன்வசம் ஆக்கினார் ஏஞ்சலினா ஜோலி.

இந்த நிலையில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்ற ஏலத்தில் வின்ஸ்டன் சர்ச்சிலின் கவ்டவ்பியா மசூதியை நடிகை ஏஞ்சலினா ஜோலி ஏலத்தில் விட்டார்.

இந்த ஓவியம் 2 மில்லியன் பவுண்ட் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.20 கோடியே 38 லட்சத்து 22 ஆயிரம்)-க்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வின்ஸ்டன் சர்ச்சிலின் ஓவியம் 7 மில்லியன் பவுண்ட் (சுமார் ரூ.71 கோடியே 33 லட்சத்து 97 ஆயிரம்)-க்கு ஏலம் போனது.

Editor's Choice

ஹெல்மெட் அணியாமல் செல்வது, போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை பிடித்து போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.

குறைந்தபட்சம் அபராத தொகையாக ரூ.500-ஐ வாகன ஓட்டிகள் செலுத்த வேண்டி உள்ளது. அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை செலுத்தும் நிலைக்கும் வாகன ஓட்டிகள் தள்ளப்படுகிறார்கள். இதனால் பெங்களூரு நகரில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து போலீசாரிடம் சிக்கி கொண்டால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

இந்த நிலையில் அபராத தொகையை செலுத்த முடியாததால் தனது தாலி சங்கிலியை கழற்றி போக்குவரத்து போலீசாரிடம் ஒரு பெண் கொடுத்து சென்ற சம்பவம் கர்நாடகத்தில் அரங்கேறி உள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் உக்கேரி தாலுகா உலோஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாரதி விபூதி, ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். தனது கணவருடன் பெலகாவி டவுனில் உள்ள சந்தைக்கு ஸ்கூட்டரில் காய்கறி வாங்க பாரதி சென்றார். பாரதியின் கணவர் ஹெல்மெட் அணிந்து இருந்தார். ஆனால் பாரதி ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை.

சோதனையில் ஈடுபட்டு இருந்த போக்குவரத்து போலீசார், ஸ்கூட்டரை மறித்தனர். ஹெல்மெட் அணியாமல் வந்ததற்காக ரூ.500-ஐ அபராதமாக விதித்தனர். ஆனால் பாரதி தன்னிடம் ரூ.500 இல்லை என்று கூறினார். மேலும் தெரியாமல் ஹெல்மெட் அணியாமல் வந்து விட்டதாகவும், இந்த ஒரு முறை தங்களை விட்டுவிடும்படியும் பாரதியும், அவரது கணவரும் போக்குவரத்து போலீசாரிடம் மன்றாடி உள்ளனர்.

அதனை ஏற்க மறுத்த போக்குவரத்து போலீசார் ரூ.500 அபராதம் செலுத்தினால் தான் விடுவோம் என்று பிடிவாதமாக கூறியுள்ளனர். இதனால் தான் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலியை பாரதி கழற்றி, போக்குவரத்து போலீசாரிடம் கொடுத்து உள்ளார். பின்னர் தாலி சங்கிலியை விற்று அபராத தொகையை எடுத்து கொள்ளும்படி கூறிவிட்டு பாரதி அங்கிருந்து சென்று விட்டார்.

இந்த காட்சிகளை அங்கு வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த சிலர் தங்களது செல்போன்களில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோவை பார்த்த பலரும் போக்குவரத்து போலீசாருக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Editor's Choice

தனிப்பட்ட கடிதத்தை வெளியிட்டது தொடர்பாக மேகன் மார்க்கெலுக்கு இங்கிலாந்து நாளிதழ் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் மார்க்கெல் இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 19-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். வின்ட்சர் கோட்டை தேவாலயத்தில் இவர்களது திருமணம், கோலாகலமாக நடைபெற்றது. கடந்த ஆண்டு ஹாரி-மேகன் தம்பதி இங்கிலாந்து அரச குடும்பத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்து அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் குடியேறினர். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில், மேகன் மீண்டும் கர்ப்பமாகியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன், இளவரசி மேகனை, இளவரசி டயானாவை பின்தொடர்ந்ததுபோல ஊடகத்தினர் பின் தொடர்வது சலசலப்பை ஏற்படுத்தி வந்தது.

மேகன் மார்க்கெல் தனது தந்தைக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தை இங்கிலாந்து நாளிதழ் ‘மெயில்’ வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக அந்த நாளிதழ் மீது அவர்கள் வழக்கு தொடுப்பதாக இளவரசர் ஹாரி, மேகன் தம்பதியர் அறிவித்தனர். தனது மனைவி மேகனை ஊடகத்தினர் பின்தொடர்வது குறித்து இளவரசர் ஹாரி வருத்தமும் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை லண்டன் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குறிப்பிட்ட பத்திரிக்கை நிறுவனம் மேகன் மார்க்கெல் தனிப்பட்ட கடிதத்தை வெளியிட்டது தவறு என்று சுட்டிக்காட்டியதோடு, மேகனுக்கு ‘மெயில்’ பத்திரிக்கை 4 லட்சத்து 50 ஆயிரம் பவுண்டுகள் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

Editor's Choice

ஒன்றுக்கு மேற்பட்ட சேமிப்புக் கணக்குகள் திறந்து அதைப் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் ஆபத்து என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொதுவாகவே நம்மில் பலர் ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்கு மாறும்போதோ அல்லது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு குடிபெயரும்போதோ பழைய கணக்கை விட்டுவிட்டுப் புதிதாக ஒரு சேமிப்புக் கணக்கைத் திறப்பார்கள். பழைய கணக்கைப் பயன்படுத்தாமல் அப்படியே கிடப்பில் போட்டுவிடுவார்கள். இதனால் சேமிப்புக் கணக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஆனால், சேமிப்புக் கணக்கைப் பயன்படுத்தாவிட்டால் ஆபத்து.

ஒன்றுக்கு மேற்பட்ட சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் சந்திக்கும் முதல் பிரச்சினை - மினிமம் பேலனஸ். உங்களிடம் உள்ள சேமிப்புக் கணக்குகளில் வங்கியைப் பொறுத்து குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும். வாடிக்கையாளர் ஒவ்வொரு கணக்கிலும் குறைந்தபட்ச மாத சராசரி நிலுவைத் தொகையை (மினிமம் பேலன்ஸ்) வைத்திருக்காவிட்டால், உங்களது கணக்கிலிருந்து பணம் பிடிக்கப்படும். இந்த விதிமுறை அனைத்து வங்கிகளின் வழக்கமான சேமிப்புக் கணக்குகளுக்குப் பொருந்தும்.

இதுபோன்ற சூழ்நிலையில் உங்களுக்கு இரண்டே வழிகள்தான் உள்ளன. ஒன்று, மாதாந்திர சராசரி நிலுவைத் தொகையை பராமரிக்க வேண்டும். மற்றொன்று அதற்கு அபராதமாகப் பெரிய தொகையை இழக்க வேண்டும். உங்களது சேமிப்புக் கணக்கை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால், நீங்கள் டெபிட் கார்டு கட்டணத்தையும் செலுத்தியாக வேண்டும். பயனற்ற கணக்கிலிருந்து நீங்கள் பெறும் வட்டியை விட இந்த கட்டணம் அதிகமாக இருக்கும்.

ஒரு வங்கியில் ஒரு கணக்கைத் தொடங்கக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. ஆனால் வங்கிகள் தங்களது டெபிட் கார்டுகளுக்கு குறிப்பிட்ட கட்டணங்களை வசூலிக்கின்றன. இந்தக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.100 முதல் ரூ.1,000 வரை இருக்கும். டெபிட் கார்டு கட்டணம் தவிர, சில வங்கிகள் எஸ்எம்எஸ் சேவைக்கும் கட்டணம் வசூலிக்கின்றன. இந்தக் கட்டணம் ஒரு காலாண்டில் 30 ரூபாய் வரை இருக்கலாம்.

உங்களிடம் பல சேமிப்புக் கணக்குகள் இருந்தால், வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதிலும் சிக்கல் ஏற்படும், வரி செலுத்துவோர் ஒவ்வொரு கணக்கின் விவரங்களையும் ரிட்டன் தாக்கலில் தெரிவிக்க வேண்டும். பல சேமிப்புக் கணக்குகள் இருந்தால் வரித் தாக்கல் காகிதப் பணியில் அதிக சிரமம் ஏற்படும். உங்களது சேமிப்புக் கணக்கு விவரங்களை நீங்கள் வழங்கவில்லை என்றால், நீங்கள் வருமான வரித் துறையின் பிடியில் சிக்க வேண்டியிருக்கும்.

நீங்கள் தொடர்ந்து 12 மாதங்களுக்கு வங்கிக் கணக்கில் பரிவர்த்தனை எதுவும் செய்யாமல் இருந்தால் அந்த வங்கிக் கணக்கு செயல்படாத கணக்காக மாறிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Editor's Choice

ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் பொருட்டு ஜெர்மனியில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய ஆண்கள் ஆக்கி அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 2-வது ஆட்டத்தில் மோதியது. பரபரப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இரு கோல்களும் பெனால்டி கார்னர் வாய்ப்பில் அடிக்கப்பட்டன. இந்திய தரப்பில் ஜார்மன்பிரீத்சிங் கோல் போட்டார்.

முன்னதாக பெண்கள் பிரிவில் இந்திய பெண்கள் அணி 0-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் வீழ்ந்தது. இந்திய பெண்கள் அணி தொடர்ச்சியாக சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும்.

Editor's Choice

தனக்கென சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்பது பலரது கனவாகவும், லட்சியமாகவும் இருக்கும். அதுவும், கொரோனா வந்த பிறகு சொந்த வீடு இல்லையே என்று ஏங்கியவர்கள் ஏராளம். வீட்டு வாடகைக்கே சம்பளத்தில் பெரும் தொகையைக் கொடுக்க வேண்டியதாக உள்ளது. சம்பளமும் வேலையும் இல்லாமல் போனால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். எப்படியாவது வீட்டைக் கட்டிவிட வேண்டும் என்று நினைப்பவர்கள் எந்த வங்கியில் கடன் வாங்கலாம்; சிறப்புச் சலுகைகள் ஏதேனும் உள்ளதா; கடனைச் சரியாகத் திருப்பிச் செலுத்த முடியுமா என்றெல்லாம் ஆலோசிப்பார்கள்.

வீடு கட்ட நினைப்பவர்கள் வீட்டுக் கடன் வாங்கி எளிதாக வீடு கட்டிவிடலாம். ஆனால், எந்த வங்கியில் கம்மியான விகிதத்தில் வட்டி விகிதம் உள்ளது என்றும், மற்ற சலுகைகளையும் பார்த்து வாங்கவேண்டும். இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தற்போது வீடு கட்டுவோருக்கு வசதியாக, வீட்டுக் கடன் வட்டியைக் குறைத்து அறிவித்துள்ளது. இதுகுறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், வீட்டுக் கடன் வட்டி விகிதம் 6.70 சதவீதமாக வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வட்டி 70 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த வட்டிச் சலுகையானது குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே. அதாவது மார்ச் 31ஆம் தேதி வரையில் மட்டுமே இந்த வட்டியில் கடன் கிடைக்கும். அதன் பிறகு வட்டி உயர்த்தப்படும். மேலும், வாடிக்கையாளரின் சிபில் ஸ்கோர் மற்றும் கடன் தொகையைப் பொறுத்து, செயல்பாட்டுக் கட்டணம் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடனை முறையாகத் திருப்பிச் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இச்சலுகை பயன் தரும் எனவும் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது. ரூ.75 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 6.70 சதவீதம். அதைத் தாண்டி கடன் வாங்கினால் அதற்கான வட்டி 6.75 சதவீதம் ஆகும்.

அதேபோல, எஸ்பிஐ யோனோ மொபைல் ஆப் மூலமாகக் கடனுக்கு விண்ணப்பித்தால் 5 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்படும் என்ற சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பக்கம் 23 / 74