Editor's Choice

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 'ஸ்டார் ஷிப்' ராக்கெட் சோதனையை நிறைவு செய்த சில நொடிகளில் வெடித்து சிதறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு பயணிக்கக்கூடிய 'ஸ்டார் ஷிப்' விண்கலத்தின் முன்மாதிரி நேற்று அறிமுகம் செய்யப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள போகா சிகா ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

வெற்றிகரமாக பயணத்தை தொடங்கிய 'ஸ்டார் ஷிப்' பின்னர் சிறிய தடுமாற்றத்துடன் தரையிறங்கியது. ஆனால் நிலத்தை தொட்ட சில நொடிகளில் ராக்கெட் தீப்பிடித்து சுக்குநூறாக வெடித்து சிதறியது. 3 என்ஜின்களும் அடுத்தடுத்து செயலிழந்ததே விண்கலம் வெடித்து சிதற காரணம் என்று கூறப்படுகிறது. ராக்கெட் வெடித்துள்ள போதும் தங்களது எதிர்கால ஆய்வுக்கு தேவையான முக்கிய விவரங்கள் வெற்றிகரமாக சேகரிக்கப்பட்டுள்ளதாக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விண்வெளிக்கு அமெரிக்காவில் இருந்து முதல் முதலாக மனிதர்களை அனுப்பும் தனியார் நிறுவனம் என்ற பெயரை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. நிலவுக்கும் , செவ்வாய் கிரகத்துக்கும் மனிதர்களை அனுப்ப வேண்டும் என்பதே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் கனவு. இந்த திட்டத்திற்காகவே வடிவமைக்கப்பட்டது தான் ஸ்டார்ஷிப் ராக்கெட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Editor's Choice

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் உள்ள ரயில்வே பாலம் 1914 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. மண்டபம் மற்றும் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவு ஆகியவற்றை இணைப்பதற்காக இந்தப் பாலம் கட்டப்பட்டது. 1988 ஆம் ஆண்டு தரைப்பாலம் கட்டப்படுவதற்கு முன்புவரையில் மண்டபத்துக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையில் இணைப்பை வழங்கிய ஒரே பாலமாகவும் இது இருந்தது.

பழைய பாலத்தின் அடியில் படகுகள் செல்லும் வகையில் மடிப்புகளும் இருந்தன. சுமார் 106 ஆண்டுகளைக் கடந்தும் ரயில் போக்குவரத்துக்கு பெரும் உதவியாக இந்தப் பாலம் இருந்தது. தற்போது வரையில் எந்த விபத்தும் ஏற்பட்டதில்லை என்பதும் இதன் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரம், கப்பல்கள் செல்லும் வகையில் பாம்பன் பாலத்தின் இடையே அமைக்கப்பட்டுள்ள ஹெர்சர் தூக்குப் பாலம், அண்மைக்காலமாக வலுவை இழந்துவிட்டது. இதன் காரணமாக ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன.

இதையடுத்து, பாம்பன் கடலின் மீது இருவழிப் பாதையைக் கொண்ட ரயில் பாலம் அமைப்பது என மத்திய அரசு முடிவெடுத்தது. இதற்கான செலவு 250 கோடி ரூபாய் என மதிப்பீடு செய்யப்பட்டது. தற்போது இதன் திட்ட மதிப்பீடு 450 கோடி ரூபாயாக அதிகரித்துவிட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய பாலத்துக்கான பணிகள் தொடங்கின. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில், புதிய ரயில் பாலப் பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனத்துக்கும் பாம்பன் மீனவர்களுக்கும் இடையேயான உரசல் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. அந்நிறுவனம் பாலம் கட்டுவதில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது. கட்டுமானப் பொருள்களைத் தரமில்லாமல் பயன்படுத்தியதாலும், கட்டுமானப் பணியில் ஈடுபடும் ஊழியர்களின் பாதுகாப்பில் கவனக்குறைவாக செயல்பட்டதாலும் மூன்று முறை விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

பாம்பன் வடக்கு கடற்கரையில் உள்ள கடற்கரை மணலை அள்ளி கட்டுமானத்துக்கு பயன்படுத்துகின்றனர். இதை மீனவர்கள் பலமுறை தடுத்தும் தொடர்ந்து செய்து வருகின்றனர். கடந்த மாதம் பாம்பன் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள கடற்கரையில் மண்ணை அள்ளியுள்ளனர். கிட்டத்தட்ட 7 டிப்பர் லாரிகளில் மணல் எடுத்துள்ளனர். இதுகுறித்து பாம்பன் காவல்துறை அதிகாரிகளிடம் மீனவர்கள் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து கட்டுமான நிறுவனத்தின் பிரதிநிதிகள் காவல்நிலையத்தில் ஆஜராகி, இனி இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்வதாக எழுதிக்கொடுத்தனர்" என்கின்றனர் மீனவர்கள்.


Editor's Choice

புது சோப்பை எடுத்துக் குளிக்கும்போது ஜாலியாகதான் இருக்கும். நாளாக நாளாக சோப்பு கரைந்து போனபோது, அடுத்த புது சோப்பை  எப்போ எடுப்போமோவென்று இருக்கும். எவருமே 100% சோப்பு கரையும் வரை பயன்படுத்துவதில்லை. இதுமாதிரி துண்டு சோப்புகளை தூக்கிப்  போட்டுவிடுகிறார்கள்.

ஒரு வீட்டில் நாலு பேர் என்றால், குறைந்தது வாரத்துக்கு நாலு சோப்புத் துண்டு விழுகிறது. இந்த சோப்புத் துண்டுகளை உபயோகமாக மாற்ற முடியும்.  இம்மாதிரி விழும் துண்டுகளை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் மொத்தமாக போட்டு வைத்துக் கொள்ளுங்கள். கணிசமான அளவுக்கு சேர்ந்த பின்னர்  இவற்றையெல்லாம் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள்.நீர் கொதிக்கும்போது சோப்பு கரைந்து, திக்கான ஒரு திரவம் கிடைக்கும். அதை பழைய ஹார்பிக் டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக்கொண்டால்  தரையைத் துடைக்க சூப்பர் க்ளீனர் ரெடி.

Editor's Choice

பிரபல மெத்தை நிறுவனம் நிம்மதியான தூக்கம் பற்றிய ஆய்வை ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகிறது.

தங்களது ஆய்வுக்காக  100 நாள் தூங்கும் போட்டியையும் கடந்த ஆண்டு முதல் நடத்தி வருகிறது. இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் தினமும் 9 மணி நேரம் தூங்கி எழ வேண்டும். இதுதான் போட்டியாளர்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை. என்னது தூங்கி எழுந்தால் போதுமா.. இப்படி ஒரு போட்டியா என ஆச்சர்யப்பட வேண்டாம். ஏற்கனவே கடந்தாண்டு இதன் முதல் சீசன் நடந்து முடிந்தது. தற்போது நடைபெற உள்ளது இரண்டாவது சீசன் ஆகும்.

இதில் பங்கேற்க விரும்புவர்களுக்கு இரண்டு தகுதிகள் மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது. அதில் முதலாவது ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அடுத்தது, படுத்த 10 - 20 நிமிடங்களுக்குள் தூங்குபவராக இருக்க வேண்டும்.

பிக் பாஸ் நிகழ்ச்சியைப் போலவே மொத்தம் 100 நாட்கள் இந்த போட்டி நடத்தப்படும். தினமும் எந்தவித இடையூறும் இல்லாமல் தூங்குபவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 1 லட்சம் சம்பளமாக வழங்கப்படும். இறுதியில் இந்த நிகழ்வில் பங்கேற்றவர்களில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ. 10 லட்சம் பரிசுப்பணமும், சாம்பியன் என்ற பட்டமும் தரப்படும்.

இந்த ஆய்வில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருக்கிறார்கள்.

 

Editor's Choice

டெலிபோன்கள் புழக்கத்துக்கு வருவதற்கு முன்பே டைரக்டரி புழக்கத்துக்கு வந்து விட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் ‘சிட்டி டைரக்டரி’ என்கிற பெயரில் பிரபலமானவர்களின் முகவரியை அச்சடித்து வினியோகிக்கும் வழக்கம் துவங்கி விட்டது.

உலகின் முதல் டெலிபோன் டைரக்டரியை அச்சடித்த புகழ் அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தின் நியூ ஹேவன் நகரையே சாரும். அந்நகரில் தொலைபேசி வைத்திருப்பவர்கள் பெயர் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் அச்சடிக்கப்பட்டிருந்த இதில் வெறும் ஐம்பது பெயர்களே இருந்தன.

இரண்டு ஆண்டுகள் கழித்தே லண்டனில் 248 பெயர்கள் கொண்ட டெலிபோன் டைரக்டரி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த டைரக்டரி இன்றும் லண்டனில் பாதுகாக்கப்படுகிறது.

‘யெல்லோ பேஜஸ்’ எனப்படும் மஞ்சள் பக்கங்கள் 1886ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் வெளியிடப்பட்டது. ஒருக்கட்டத்தில் எலெக்ட்ரானிக் டெலிபோன் டைரக்டரிகள் எல்லாம் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் புகழ்பெற்றிருந்தன. 1996ம் ஆண்டு முதன் முதலில் டெலிபோன் டைரக்டரிகள் ஆன்லைன் ஆகின.

இரண்டாயிரங்களுக்குப் பிறகு டெலிபோன் டைரக்டரிகள் அச்சடிக்க ஏராளமான பேப்பர் தேவைப்படுகிறது. இதற்காக லட்சக்கணக்கான மரங்களை வெட்ட வேண்டியிருக்கிறது. இது சுற்றுச்சூழலுக்கு அபாயம் என்று கருதப்பட்டது. சில அமெரிக்க மாகாணங்கள் டைரக்டரிகளுக்குத் தடைகூட விதித்தன. இன்று டெலிபோன் டைரக்டரி என்பதன் புழக்கமே கிட்டத்தட்ட அருகிவிட்டது. நம்முடைய ஒவ்வொருவரின் செல்போனும்தான் இன்று டெலிபோன் டைரக்டரி.

Editor's Choice

எந்த சந்தேகத்துக்கும் விடையளிக்கும், 'கூகுள்' தற்போது தற்கொலைக்கும் வழிகாட்டுகிறது; தற்கொலை நுட்பங்கள் குறித்த உள்ளடக்கத்தை வழங்கி ஆபத்தான வழியையும் காட்டுகிறது. பெரும்பாலும், தற்கொலை செய்துக்கொள்பவர்கள் அல்லது தற்கொலை செய்ய முயற்சிப்போர் உபயோகிக்கும் கருவிகளில் தற்கொலை செய்து கொள்வது எப்படி, உயிரை மாய்த்துக்கொள்வது எப்படி, வலியின்றி தற்கொலை செய்துகொள்வதெப்படி, தற்கொலை முறைகள் போன்ற, 'கூகுள்' தேடல்களைக் காணலாம்.

சிலர் கூகுளை, 'குரு' என்று போற்றுகின்றனர். அறிவு பகிர்வு தளமாக இருந்தாலும், சட்டவிரோதமான, விதிமுறைக்குப் புறம்பான அறிவைப் பகிர்வதை தவிர்க்க வேண்டும் என்று, சைபர் நிபுணர்கள் கூறுகின்றனர்.

கூகுள் வாழ்க்கையின் ஒரு பகுதி; அதை தடுக்க எந்த வழியும் இல்லை என்பதை நாம் ஏற்றுக் கொண்டாலும், அரசு மற்றும் இந்திய கணினி அவசரகால பதிலளிப்புக் குழுவான, 'சி.இ.ஆர்.டி., - இன்' ஆகியவை, இதேபோன்ற கருத்துடன் விலகிச் செல்ல முடியாது என ஒரு சிலர் தெரிவிக்கின்றனர். முழுவதுமாக அகற்றாவிட்டாலும், விஷயங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக்கூடிய வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப சட்டங்களின்படி, கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படும் என்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டும். தற்கொலைக்கான வழிகளைத் தேடும்போதெல்லாம், கூகுள் உடனடியாக ஒரு வெற்றுத் திரையைக் காண்பிக்க வேண்டும். 'இந்திய தகவல் தொழில்நுட்பச்சட்டங்களின்படி, இத்தேடலுக்கு விடை அளிக்க முடியாது' என்று அறிவுறுத்தவேண்டும் என சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

'நகர்புறத்தில்உள்ளவர்கள் தான் அதிகமாக, கூகுள் இயங்குதளத்தில் இதுபோன்ற தேடுதலில் ஈடுபடுகின்றனர். வழக்கமாக, ஒரு தற்கொலை நிகழும்போது, அது தற்கொலை என முடிவாகும் வரை, கொலை என்றே கருதப்படுகிறது. அதனால், அவர்களின் மின்னணு கருவிகள் முழுமையாக ஆராயப்படுகின்றன. பொதுவாக, தற்கொலைக்கு முன்கூட்டியே திட்டமிட்டவர்கள், அதற்கான வழிகளை தேடுவதற்கு கூகுளை நாடுவது கண்டறியப்படுகிறது. அதனால், தற்கொலை குறித்த தேடுதல் உள்ளடக்கத்தை அகற்றுவதில் அரசு தீவிரமாக செயல்பட வேண்டும்' என சைபர் கிரைம் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

''உணர்ச்சிபூர்வமாக திடீர் முடிவை எடுப்பவர்கள், கூகுளை நாடுவதில்லை. ஆனால், திட்டமிட்டு செயல்படுபவர்கள், உறுதியாக இல்லாதவர்கள் பல மாதங்களாகத் திட்டமிடுபவர்கள், கூகுளை ஆராய முனைகின்றனர் என மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ''ஒருவர் தற்கொலைக்குத் தேடும் தருணத்தில், முதல் தேடல் முடிவாக கூகுள் ஒரு தற்கொலை 'ஹெல்ப்லைன்' தந்தாலும், பலர் அதை உபயோகிப்பதில்லை. ஒரு நபர் மனச் சோர்வடைந்தால், அவர் எப்போதாவது தான், ஹெல்ப்லைனை அழைப்பார். ஆனால், அந்த ஆலோசனைகள் ஒரே மாதிரி சலிப்பூட்டும் விதத்தில் இருக்கும்; பிரச்னைகளுக்கு ஏற்றவாறு இருக்காது. ''பயிற்சி அளிக்கப்பட்ட ஆலோசகர்களுடன், அனைவரும் நினைவில் கொள்ளும் அளவுக்கு, 'ஹெல்ப்லைன்' இருப்பதை அரசு உறுதிசெய்வது முக்கியம்,'' என மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பக்கம் 22 / 74