Editor's Choice

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பல்வேறு சமூகத்தினர் புத்தாண்டை வரவேற்று கொண்டாடும் நேரம் இது. நாட்டின் பல இடங்களில் நவராத்திரி பண்டிகையும் கொண்டாடப்பட்டு வருகின்றது.  புதிய ஆண்டை ஆசிய துணைக்கண்டத்தில் பலர் துவங்கும் இந்த நல்ல நேரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அனைவருக்கும் புத்தாண்டுக்கான தனது வாழ்த்துக்களையும் தெரியப்படுத்தியுள்ளார். 

தமிழ் புத்தாண்டு, உகாதி, பைசாக்கி, நவராத்திரி, சோங்கிரான் போன்ற பண்டிகைகளைக் கொண்டாடும் தெற்காசிய மற்றும் தெற்கிழக்காசிய சமூகங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

"இந்த வாரம் பைசாக்கி, நவராத்திரி, சோங்கிரான் மற்றும் புத்தாண்டின் துவக்கத்தைக் கொண்டாடும் தெற்காசிய மற்றும் தெற்கிழக்காசிய சமூகங்களுக்கு ஜில் மற்றும் நான் எங்கள் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். பெங்காலி, கம்போடியன், லாவோ, மியான்மரீஸ், நேபாளி, சிங்கள, தமிழ், தாய், மற்றும் விஷு புத்தாண்டு வாழ்த்துக்கள் " என்று பைடன் ட்வீட் செய்துள்ளார்.

இந்தியாவில், ஆண்டின் இந்த நேரம் கோடைக்காலத்தின் துவக்கத்தையும் வசந்த காலத்தையும் குறிக்கின்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த பருவமும் புத்தாண்டின் துவக்கமும் பல்வெறு பெயர்களில் கொண்டாடப்படுகின்றன. தமிழகதில் சித்திரைத் திருநாள், கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் உகாதித் திருநாள், மேற்கு வங்கத்தில் நப பர்ஷா என நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் புத்தாண்டின் வருகை கொண்டாடப்படுகின்றது. 

வசந்த காலத்தில் வசந்த நவராத்திரி கொண்டாடப்படுகின்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் இந்த நவராத்திரி விழா, சைத்ர நவராத்திரி என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த ஆண்டின் வசந்த நவராத்திரி ஏப்ரல் 13 ஏப்ரல் 22 வரை கொண்டாடப்படவுள்ளது. நவதுர்கா என்றழைக்கப்படும் துர்கை அம்மனின் ஒன்பது வடிவங்கள் இந்த நவராத்திரியில் வழிபடப்படுகின்றன.

Editor's Choice

உலகில் கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கிடையே வைரஸ் பரவலை தடுக்க அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பள்ளி, கல்லுாரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. 

இந்நிலையில் இந்த கொரோனா நெருக்கடியால் 2.4 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் பள்ளி படிப்பை கைவிடக்கூடும் என்ற அதிர்ச்சிக்குரிய தகவல் கிடைத்துள்ளது.

இந்தியாவிலும் ஏராளமான ஏழைக் குழந்தைகள் பள்ளிக்கு மீண்டும் செல்வதில் சந்தேகம் எழுந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. ஆன்லைன் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளால் அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகளின் பள்ளி கட்டணத்தை செலுத்தமுடியாமல், பல பெற்றோர்கள் தவிக்கின்றனர். ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடப்பதால் அதற்கு தேவையான உபகரணங்கள் இன்றி ஆயிரக்கணக்கான ஏழை குழந்தைகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால், நிதிச் சுமையில் தள்ளாடும் ஏழைக் குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு, பள்ளிப் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படுவதாக சமூக நல ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

Editor's Choice

ஃபுகுசிமா அணு உலையில் இருந்து கழிவு நீரை பசிபிக் பெருங்கடலில் விடுவிக்கப் போவதாக ஜப்பான் அறிவித்திருப்பது உலக நாடுகளிடையே கண்டனங்களை எழுப்பியுள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, கடல் வாழ் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என்ற கவலைகள் எழுந்துள்ளன.

ஜப்பான் கடல் பகுதியில் 2011 மார்ச் 11ஆம் தேதியன்று ஏற்பட்ட சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் ஃபுகுசிமா அணு உலை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இது 1986ல் ஏற்பட்ட செர்னோபில் விபத்தின் கதிர்வீச்சு போல் கிட்டத்தட்ட 14 மடங்கு அதிகப் பேரழிவை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் மதிபிட்டிருந்தனர்.  

சிதைவடைந்த ஃபுகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து 1 மில்லியன் டன்களுக்கும் அதிகமான அசுத்தமான நீரை கடலுக்குள் விடுவிக்கப் போவதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த சீனா, இது "மிகவும் பொறுப்பற்ற செயல்" என்று கூறியுள்ளது. தென் கொரியா சியோலில் உள்ள டோக்கியோ தூதரை வரவழைத்து, கண்டனங்களை பதிவு செய்துள்ளது.

தீங்கு விளைவிக்கும் ஐசோடோப்புகளை அகற்றவும், உள்கட்டமைப்பை உருவாக்கவும், ஒழுங்குமுறை அங்கீகாரத்தைப் பெறவும் இந்த ஆலையை இயக்கும் டோக்கியோ எலக்ட்ரிக் பவர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. தண்ணீரை வடிகட்டத் தொடஙகி முதல் முறையாக நீரை வெளியிடுவதற்குக் குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகும்.  

2011 ஆம் ஆண்டு நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் செயலிழந்த பின்னர் ஆலையில் உள்ள அசுத்தமான நீரை வெளியேற்றுவது அவசியம் என்று சொல்லும் ஜப்பான்,  இதேபோல் வடிகட்டப்பட்ட நீர் உலகெங்கிலும் உள்ள அணுமின் நிலையங்களிலிருந்து வழக்கமாக வெளியேற்றப்படுகிறது என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.  

ஃபுகுஷிமா ஆலையில் ஏறக்குறைய 1.3 மில்லியன் டன் அசுத்தமான நீர் உள்ளது. இந்த அளவு நன்னீரைக் கொண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடத்தும் சுமார் 500 நீச்சல் குளங்களை நிரப்பிவிடலாம். என்றால் நீரின் அளவை புரிந்துக் கொள்ளலாம்.

இந்த அளவிலான நீர் ஆலையில் பெரிய தொட்டிகளில் சேமிக்கப்படுகிறது. இந்த நீரை சேமிக்க ஆண்டுக்கு சுமார் 100 பில்லியன் யென் தொகை தேவைப்படுகிறது. தற்போது ஆலையில் அசுத்தமான நீரை சேமிக்கும் இடம் பற்றாக்குறையாகிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

"புகுஷிமா பகுதியை புனரமைக்க வேண்டியது அவசியம். அதற்கு புகுஷிமா டாய்-இச்சி அணுமின் நிலையத்தில் (Fukushima Dai-ichi Nuclear Power Plant) உள்ள அசுத்தமான நீரை அகற்றுவது தவிர்க்க முடியாத பணி..." என்று பிரதமர் யோஷிஹைட் சுகா (Prime Minister Yoshihide Suga) கூறுகிறார். அது மட்டுமல்ல, இப்போது திட்டமிட்டாலும், இந்த செயல்முறையை செய்து முடிக்க பல தசாப்தங்கள் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் ஜப்பான் அரசின் இந்த முடிவு வெளிவந்துள்ளது கவலைகளை அதிகரிக்கிறது. ஏனென்றால், ஒலிம்பிக் போட்டிகளின் சில நிகழ்வுகள் சிதைந்த ஆலையில் இருந்து 60 கிமீ தொலைவில் நடைபெற உள்ளது. 

2013 இல் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, ஜப்பானுக்கு ஒப்புதல் அளித்தபோது ஜப்பானிய முன்னாள் மந்திரி ஷின்சோ அபே ஒரு உறுதிமொழியை அளித்திருந்தார். "புகுஷிமா (Fukushima) தொடர்பாக டோக்கியோவுக்கு ஒருபோதும் எந்த சேதமும் ஏற்படாது" என்ற அந்த உறுதிமொழியை தற்பொது ஜப்பானால் காப்பாற்ற முடியுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

Editor's Choice

வரும் ஜூன் 1-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் தங்க ஆபரணங்களுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஹால்மார்க் என்பது இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கான தரக்குறியீட்டு முறைமை. இந்தியத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின்  (BIS) தரக்குறியீடு தங்கம்/வெள்ளி ஆகியவற்றின் தூய்மை அளவுக்கு  சான்றிதழ் அளிக்க பயன்படுத்தப்படுகிறது. ஒரு தங்கப் பொருளின் மீது இருக்கும்  BIS தரக்குறியீடு  இந்திய தேசிய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் கீழுள்ள  இந்தியத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் வரையறுத்த தர அளவீடுகளுக்கு உட்பட்டதற்கான  சான்றிதழ்.

தங்க ஆபரணங்களுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான காலக்கெடு ஏற்கனவே பல முறை ஒத்திப்போடப்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் காலக்கெடு நீட்டிப்பு கோரி இதுவரை கோரிக்கைகள் எதுவும் வரவில்லை. இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் பி.ஐ.எஸ் ஏற்கனவே முழு உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறது.

ஹால்மார்க்கிங் செய்ய நகை விற்பனையாளர்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் பி.ஐ.எஸ் தீவிரமாக பணியாற்றி வருகிறது. எனவே, நடப்பாண்டு ஜூன் 1-ம் தேதியிலிருந்து விற்பனை செய்யப்படும் தங்க நகைகள் மற்றும் கலைப்பொருள்களுக்கு ஹால்மார்க் முத்திரையிடுவது கட்டாயமாக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Editor's Choice

உடல் ஊனமுற்ற மாணவர்கள் உயர்கல்வி படிக்க கல்விக் கடன் வழங்கப்படுகிறது.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறையின் கீழ் தேசிய ஊனமுற்றோர் பைனான்ஸ் அன்ட் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்படுகிறது.

இந்தியாவில் உள்ள 40 அல்லது அதற்கு மேல் ஊனத்துடன் உள்ள நபர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கு கடன் வழங்கப்படுகிறது.

பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பொறியியல், மருத்துவம், நிர்வாகம், ஐடி போன்ற படிப்புகளை படிக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சமும், வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சமும் கல்விக் கடனாக வழங்கப்படும்.கல்விக் கடனுக்கு ஆண்டிற்கு 4% வட்டி வசூலிக்கப்படும். மாணவியருக்கு 3.5% வட்டி வசூலிக்கப்படும்.

மேலும் விவரங்கள் அறிய www.nhfdc.nic.in இணையதளத்தைப் பார்க்கவும்.

இதேபோல் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் முழு நேர தொழிற்கல்வி/தொழில்நுட்பக் கல்வி பயில கல்விக் கடன் வழங்கப்படுகிறது.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறையின் கீழ் தேசிய பிற்பட்ட வகுப்பினர் பைனான்ஸ் அன்ட் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்படுகிறது.

இந்த நிறுவனம் ஆண்டுக்கு குடும்ப வருமானம் கிராமப்புற ஏரியாக்களில் ரூ.40 ஆயிரம்  வரை மற்றும் நகர்ப்புற ஏரியாக்களில் ரூ.55 ஆயிரம் வரை உள்ள பிற்பத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு முழு நேர தொழிற்கல்வி அல்லது தொழில்நுட்பக் கல்வி பயில கடன்களை அளிக்கிறது.

பொறியியல், மருத்துவம், நிர்வாகம், ஐ.டி., சட்டம், நர்சிங், கம்ப்யூட்டர் போன்ற படிப்புகளை படிக்கும்  மாணவர்கள் இந்த கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம். இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சமும், வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சமும் கல்விக் கடனாக வழங்கப்படும்.கல்விக் கடனுக்கு ஆண்டிற்கு 4% வட்டி வசூலிக்கப்படும். மாணவியருக்கு 3.5% வட்டி வசூலிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு www.nbcfdc.org.in இணையதளத்தைப் பார்க்கவும்.

Editor's Choice

குஜராத் மாநிலம் வதோதராவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு, ஆரோக்கியமான உணவை இலவசமாக ஒருவர் வழங்கி வருகிறார். அவர் இதனை டுவிட்டரில் பகிர, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. நீண்ட காலமாக இந்தியா கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது. ஆனால் இந்த தொற்று நோயின் காலம் தான் நம் சக மனிதர்கள் மீதான நம்பிக்கையை மீண்டும் நிலைநிறுத்தவும் உதவியது.

கொரோனா பலி அதிகரித்து வருவதால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு மீண்டும் படை எடுத்து வருகின்றனர். இச்சூழலில், நல்ல மனம் கொண்ட சிலர், தங்களால் இயன்ற உதவியை கொரோனா காலத்தில் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கின்றனர்.

மைக்ரோ பிளாக்கிங் தளமான டுவிட்டர் பயனர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில், கொரோனா பாதிப்புக்குள்ளாகி வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டவர்களுக்கு, அவர்கள் தனிமைப்படுத்தி கொண்ட காலம் முழுவதும் இலவசமாக, உணவு வழங்குவதாக அறிவித்திருக்கிறார். சுகாதாரமான மதிய உணவு மற்றும் இரவு உணவை அவர்கள் வீட்டு வாசலில் வந்து வழங்கி உதவுவதாக அவர் பதிவிட்டிருக்கிறார்.

டுவிட்டரில் தனிப்பட்ட முறையில் தன்னை தொடர்பு கொள்ளும் உள்ளூர் மக்களுக்கு தான் உதவ தயாராக இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த சுபால் ஷா என்ற அந்த டுவிட்டர் பயனருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சுபால் ஷாவின் தன்னலமற்ற சேவையை, அவரை தொடர்பு கொண்டு சிலர் பெற்று வருகின்றனர். அவருக்கு உதவ தயாராக இருப்பதாக என்ஜிஓ.,க்களும் முன் வந்துள்ளன.

பக்கம் 45 / 90