Editor's Choice

ஃபியூச்சர் குழுமத்தை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்குவதை எதிர்த்து, கடந்த 25-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமேசான் நிறுவனம் வழக்கு தொடுத்தது. இதில் சிங்கப்பூர் நீதிமன்றம் கொடுத்த உத்தரவை அமல்படுத்த வேண்டும். தவிர, விதிமுறைகளை மீறியதற்காக ஃபியூச்சர் குழுமத்தின் தலைவர் கிஷோர் பியோனி உள்ளிட்ட முக்கிய உயரதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும் என வழக்கு தொடுத்திருக்கிறது.

ஃபியூச்சர் குழுமம் கடும் நிதி நெருக்கடியில் இருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் வருமானம் பெருமளவுக்கு பாதிக்கப் பட்டதால் நிறுவனத்தைக் காப்பாற்றவும் கடனை அடைக்கவும், பணியாளர்களின் நலனைப் பாதுகாக்கவும் ஃபியூச்சர் குழுமத்தை விற்க வேண்டிய சூழல் உருவானது. இதற்காக ரிலையன்ஸ் குழுமத்துக்கு ரூ.24,713 கோடிக்கு விற்க கடந்த ஆகஸ்ட் மாதம் முடிவெடுக்கப் பட்டது. ஆனால், ஃபியூச்சர் குழும நிறுவனங்களில் மறைமுகமாக 5% அளவு பங்கை அமேசான் வைத்திருக்கிறது. அதனால் அமேசானின் அனுமதியைப் பெறாமல் ஃபியூச்சர் குழுமம், ரிலையன்ஸுக்கு விற்க முடியாது என்பதுதான் அதன் வாதம்.

ஃபியூச்சர் குழுமத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விற்பதற்கு செபி அனுமதி வழங்கியிருக்கிறது. ஆனால், நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகளை முடித்த பிறகு, இணைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்திருக்கிறது. இதனிடையே இரு நிறுவனங்களின் இணைப்புக்கு அனுமதி வழங்கக் கூடாது எனப் பலமுறை செபிக்கு அமேசான் விண்ணப்பித்தது. மேலும், சிங்கப்பூர் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும் என செபிக்கு அமேசான் கோரிக்கை விடுத்தது. ஆனால், செபி, பி.எஸ்.இ, சி.சி.ஐ உள்ளிட்ட அமைப்புகள் அனுமதி வழங்கியிருக்கிறது.

ஜனவரி மாத தொடக்கத்தில் ஃபியூச்சர் குழுமத்தின் தலைவர் கிஷோர் பியானி ஆங்கிலப் பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியில், ‘‘ஃபியூச்சர் குழுமம் கடும் நிதி சிக்கலில் இருக்கிறது. இது தொடர் பாகப் பல திட்டங்களுடன் எட்டு முறைக்கு மேல் அமேசான் நிறுவனத்துடன் தொடர்புகொண்டோம். அப்போதெல்லாம் உதவிக்கு வராத அமேசான், தற்போது ரிலையன்ஸ் உடன் இணையும்போது அதைத் தடுப்பதற்கு அத்தனை நடவடிக்கைகளையும் எடுக்கிறது.

அமேசான், சமரா கேப்பிடல் ஆகிய நிறுவனங்களுடன் நடத்திய பேச்சு வார்த்தை எந்தவிதமான பலனையும் தரவில்லை. இந்த நிலையில்தான், ரிலையன்ஸ், ஃபியூச்சர் குழுமத்தை மீட்க வந்திருக்கிறது. இதனால் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தப் பலனும் இல்லை. 30 ஆண்டுக் காலமாக உருவாக்கிய ரீடெயில் பிசினஸை நான் இழக்க வேண்டியிருக்கும்’’ என பியானி சொல்லியிருந்தார்.

அமேசான் நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சீனாவிலிருந்து வெளியேறியது. சீன நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல் தோல்வி அடைந்தது. சீனாவுக்கு அடுத்து மிகப் பெரிய சந்தை இந்தியாதான். தற்போது ஃபியூச்சர் குழுமத்தை ரிலையன்ஸ் வாங்கிவிட்டது என்றால், இந்திய ரீடெயில் பிரிவில் ரிலையன்ஸின் தாக்கம் பெரிய அளவில் இருக்கும். அதனால் ஃபியூச்சர் குழுமத்தை ரிலையன்ஸ் வாங்க முடியாத அளவுக்குத் தடைகளைத் தொடர்ந்து அமேசான் உருவாக்கி வருகிறது.

Editor's Choice
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3 போட்டி தொடர்களில் அடுத்தடுத்து பங்கேற்று சிறப்பாக விளையாடினார் பௌலர் நடராஜன். இதையடுத்து சர்வதேச அளவில் அவர் கவனம் பெற்றுள்ளார்.
 
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3 வடிவங்களிலான தொடர்கள் நடந்து முடிந்துள்ளன. இதில் 2 தொடர்களில் இந்திய அணி வெற்றி கொண்டது. குறிப்பாக டெஸ்ட் தொடரில் 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி கொண்டு இமாலய சாதனை படைத்து நாடு திரும்பியது.

இந்த தொடரில் முக்கிய மற்றும் முன்னணி இந்திய வீரர்கள் காயம் உள்ளிட்ட காரணங்களால் பங்கேற்க முடியாத நிலையில் இளம் வீரர்கள் அணியை வழிநடத்தி சிறப்பான வெற்றியை சாத்தியப்படுத்தினர். இதில் நடராஜனும் ஒருவர். வலைப் பந்து வீச்சாளராக ஆஸ்திரேலியா சென்ற இவர், 3 போட்டிகளிலும் அடுத்தடுத்து பங்கேற்று கவனம் பெற்றுள்ளார்.

ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார் நடராஜன். தற்போது இங்கிலாந்து தொடரில் இருந்து இவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது வாழ்க்கை வரலாற்று படத்தை எடுக்க அதிகமான டைரக்டர்கள் ஆர்வம் காட்டுவதாக நடராஜன் தெரிவித்துள்ளார்.

தான் இல்லாத நேரத்தில் தனது குடும்பத்தினரிடம் அவர்கள் இதுகுறித்து பேசியுள்ளதாக நடராஜன் கூறியுள்ளார். ஆனால் தற்போது தான் இதுகுறித்தெல்லாம் யோசிக்க விரும்பவில்லை என்றும் இந்திய அணியில் சிறப்பான இடத்தை பெறுவதே தற்போதைய நிலையில் தனது இலக்கு என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Editor's Choice

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக நிபுணர் குழு அறிக்கை வெளியாகிவுள்ளது. சித்ராவின் தற்கொலை தொடர்பான அதிர்ச்சியூட்டும்  காரணங்கள் கொண்ட அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் நிபுணர் குழு தாக்கல் செய்துள்ளது.

இந்த அறிக்கை சித்ரா மரண வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருக்கும். சித்ரா இறந்து மாதக்கணக்கில் ஆனாலும் மர்மம் விலகவில்லை.

ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ மேற்கொண்ட விசாரணையில் சித்ராவின் தற்கொலைக்கு வரதட்சணை காரணம் இல்லை என்று தெரியவந்தது. ஆனால், சித்ரா தற்கொலைக்கு காரணம் வேறு ஏதாவது ஒன்றாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் ஆர்.டி.ஓ விசாரணையில் கூறப்பட்டது. 

இதனிடையில் ஹேமந்த்தின் குடும்ப நண்பர் கூறிய குற்றச்சாட்டுகள் சித்ராவின் தற்கொலைக்கு காரணம் கணவர் தான் என்று நினைக்கத் தோன்றியது. ஆனால் உண்மை என்ன என்பது இன்னும் வெளிவரவில்லை.

சித்ரா தற்கொலை விஷயம் கேள்விபட்ட நாளே, ஹேமந்த் மீது தான் குற்றம் சுமத்தினார் சித்ராவின் தாய். தற்போது சிறையில் இருக்கும் சித்ராவின் கணவர் ஹேமந்த் தாக்கல் செய்த மனு விசாரணையில் உள்ளது.

வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட பின் 13 சாட்சிகள் மீண்டும் விசாரிக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது என்றும், சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் நிபுணர்குழு அறிக்கை அளித்துள்ளது என இன்றைய விசாரணையில் காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

வழக்கு விசாரணையை பிப்ரவரி ஐந்தாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அன்று வழக்கு விசாரணை நடைபெறும் என்பதால் சித்ரா தற்கொலை வழக்கில் இன்னும் சில நாட்களில் மேலும் பல விஷயங்கள் வெளிவரலாம். 

Editor's Choice
சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் சிறப்பாக ஆடி தமிழக அணி வெற்றிபெற்றுள்ளது. இந்த தொடர் வெற்றிக்கு பின் தமிழக அணி வீரர்கள் வெளியிட்ட வீடியோ பெரிய வைரலாகி உள்ளது.
 
சையது முஸ்டாக் அலி கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 10ம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. பெங்களூர், கொல்கத்தா, சென்னை, மும்பை, வாதோரா, இந்தூர், அஹமதாபாத் ஆகிய நகரங்களில் இந்த போட்டிகள் நடந்தது.
 
மிகவும் பரபரப்பாக சென்ற இறுதிப்போட்டியில் பரோடா அணியை வீழ்த்தி தமிழக அணி வென்றுள்ளது.
 
தமிழக அணிக்கு இது இரண்டாவது சையது முஷ்டாக் கோப்பை வெற்றியாகும். 2007ல் முதல்முறை தமிழக அணி இந்த கோப்பையை வென்றது. அதன்பின் மீண்டும் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இரண்டு முறையும் தினேஷ் கார்த்திக்தான் கேப்டனாக இருந்தார்.
 
இந்த தொடர் வெற்றிக்கு பின் தமிழக அணி வீரர்கள் வெளியிட்ட வீடியோ பெரிய வைரலாகி உள்ளது. அதன்படி தமிழக அணி வீரர்கள் நேற்று வெற்றிக்கு பின் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஒன்றாக நடனம் ஆடியுள்ளனர்.
 
தினேஷ் கார்த்திக் முன்னால் நின்று ஆட, அவருக்கு பின்னால் நின்று தமிழக அணி வீரர்கள் ஆடியது பெரிய அளவில் வைரலாகி உள்ளது. எல்லோரும் ஒரே மாதிரி விஜய் ஸ்டெப் போட்டு கவனம் ஈர்த்துள்ளனர். அதிலும் போட்டியில் வெற்றிக்கு பின் தினேஷ் கார்த்திக் கப்பு முக்கியம் பிகிலே என்று விஜய் பாணியில் டிவிட் செய்தார்.
 
இன்னொரு பக்கம் தமிழக வீரர் சாய் கிஷோரும் கப்பு முக்கியம் பிகிலே என்று டிவிட் செய்து இருந்தார். தமிழக அணியில் காயம் காரணமாக வாய்ப்பை இழந்த வருண் சக்கரவர்த்தியும் தீவிர விஜய் ரசிகர் ஆவார். தலைவா பட போஸ்டரை இவர் கையில் கூட பச்சை குத்தி உள்ளார்.
 
தமிழக அணியில் இப்படி எல்லோரும் விஜய் ரசிகர்களாக உள்ளது பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது. 
 
Editor's Choice

காலையில் எழுந்தவுடன் தொலைபேசியைப் பார்க்கும் பழக்கமும் உள்ளவரா நீங்கள், அப்படியானால், இந்த செய்தி உங்களுக்கு தான். 

 இன்றைய காலகட்டத்தில், மொபைல் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான அங்கமாக மாறி விட்டது. பலருக்கு அது இல்லை என்றால், பைத்தியம் பிடித்து விடும் நிலை ஏற்படுகிறது எனலாம். இன்று, மொபைல் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்க முடியாது. 
மக்கள் வாழ்க்கையில் மொபைல் மிகவும் ஆதிக்கம் செலுத்துகிறது. தூங்கும் போது மட்டும் தான் மொபைலை பயன்படுத்துவதில்லை.

பிரிட்டனின் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், காலையில் எழுந்தவுடன் தொலைபேசியைப் பயன்படுத்துபவர்கள், மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்  என்பது தெரிய வந்துள்ளது. மேலும், இதுபோன்றவர்கள் ஈடுபாட்டுடன் எந்த வேலையும் செய்ய முடியாமல் தங்கள் வேலையில் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.

காலையில் எழுந்தவுடன் மொபைலில் வரும் நோடிஃபிகேஷன்கள் அல்லது பேஸ்புக், வாட்ஸ் அப்பில் வரும் தகவல்கள் ஆகியவற்றை பார்க்கும் போது,  ​​நம் மனதில் அந்த நேரத்தில் அதைப்பற்றி சிந்திக்கத் தொடங்குகிறது. இதன் காரணமாக நம் மனம் வேறு எந்த வேலையிலும் ஈடுபடுவதில்லை. அவ்வாறு செய்வது நமது செயல்திறனையும் பாதிக்கிறது.

தொலைபேசியைப் பார்க்கும்போது, ​​நாள் முழுவதும் அதில் பார்த்த தகவல்கள் நம்மில் பாதிப்பை ஏற்படுத்தி, அதை பற்றியே சிந்திக்கிறோம், இதன் காரணமாக நமக்கு மன அழுத்தமும் பதட்டமும் ஏற்படுகிறது.

காலையில் எழுந்தவுடன் பேஸ்புக் வாட்ஸ் அப் போன்றவற்றை பார்க்கும் போது,  அவற்றில் வரும் மனதை பாதிக்கக் கூடிய கடந்த கால விஷயங்களைப் படித்த பின் மனம் வருத்தப்படுகிறது. அதில் உள்ளள விஷயங்களை மறந்துவிடுவதற்குப் பதிலாக, பழைய விஷயங்களில் மீண்டும் நம் மனம் சென்று ஒரு வித மன உளைச்சல் ஏற்படுகிறது.

அதனால், காலையில் மொபைலை பார்ப்பதை தவிர்த்து,  அன்றாட பணிகளில் மனதை செலுத்தவும். 

Editor's Choice
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் ராணி ராம்பால் தலைமையிலான இந்திய பெண்கள் ஆக்கி அணி அர்ஜென்டினாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிகளுக்கு எதிராக ஆடியது.
 
உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் அர்ஜென்டினா, 9-வது இடத்தில் உள்ள இந்திய பெண்கள் அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி ஆட்டம் பியூனஸ் அயர்சில் கடந்த 31ம் தேதி நடந்தது.
 
விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்திய அணி தரப்பில் ராணி ராம்பால் 35-வது நிமிடத்தில் கோல் அடித்தார். 55-வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி ஸ்டிரோக்’ வாய்ப்பை பயன்படுத்தி அர்ஜென்டினா அணி வீராங்கனை எமிலியா பார்செரியோ கோல் திருப்பினார்.
 
அர்ஜென்டினா அணிக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் 2-3 என்ற கோல் கணக்கிலும், 2-வது ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்து இருந்தது.
 
3-வது ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. முன்னதாக நடந்த அர்ஜென்டினா ஜூனியர் அணிக்கு எதிரான ஆட்டங்களை 2-2, 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்து இருந்த இந்திய அணி 1-2, 2-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா ‘பி’ அணியிடம் தோல்வி கண்டது.

பக்கம் 62 / 90