Editor's Choice

நமக்கு அறிமுகமான சமையல் செய்யும் ரோபோக்கள் எல்லாம் வெறும் உதவியாளர் ரகங்கள் தான். அதிகபட்சம், மது காக்டெயில்கள், காபி, தேனீர் பானங்களை கலந்து தரும் அளவுக்குதான் அவற்றுக்கு அறிவு உண்டு. ஆனால், பிரிட்டனை சேர்ந்த, 'மோலி' என்ற ரோபோ வித்தியாசமானது.ஆறு ஆண்டுகளுக்கு முன், உணவகங்களுக்கான ரோபோவாக மோலியை உருவாக்கி வருவதாக அதன் படைப்பாளிகள் அறிவித்தனர்.

தற்போது, ஒரு குடும்பத்திற்கு தேவையான சமையல்களை செய்யும் திறனுடன், வீடுகளுக்கு செல்ல மோலி தயாராகியிருப்பதாக, 'மோலி ரோபோடிக்ஸ்' நிறுவனம் அறிவித்துள்ளது. மோலிக்காகவே மாடுலர் சமையல் அறை உருவாக்கப்படும். அந்த சமையலறையின் உத்தரத்தில் மோலியின் ஆக்டோபஸ் போன்ற ரோபோ கரங்கள் பொருத்தப்படும். அந்தக் கரங்கள் இடமும், வலமுமாக வேகமாக நகருவதோடு, நாலா பக்கமும் லாவகமாக அசையும் திறன் கொண்டவை.

மோலியின் செயற்கை நுண்ணறிவு மூளை, கேமரா வழியேயும், அதன் விரல்களில் உள்ள உணரிகள் வழியாகவும் உணர்ந்து, உரிய இடத்தில் வைத்துள்ள பாத்திரங்கள், கரண்டிகள், உணவுப் பொருட்களை கையாளும் திறன் கொண்டது. அனுபவம் மிக்க சமையல் கலைஞர்கள் சமைப்பதை முப்பரிமாண கேமரா மூலம் பார்த்து, அதேபோல, உடல் அசைவுகள், கை மற்றும் விரல் அசைவுகளை பின்பற்றி மோலியால் ருசியாக, பதமாக சமையலை செய்ய முடியும். விரைவில், 5 ஆயிரம் வகை உணவுகளை மோலி சமைக்கக் கற்றுக் கொள்ளும் என, மோலி ரோபோடிக்சின் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.  மோலி ரோபோவின் விலை என்ன தெரியுமா? ரூ.2.48 கோடி! மயக்கமடையாதீர்கள்.

Editor's Choice

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI), டெபிட் கார்டு இல்லாமல் ATM-களில் இருந்து பணத்தை எடுக்கும் (withdraw) வசதியை அறிமுகம் செய்துள்ளது. இருப்பினும், இந்த வசதி தேர்ந்தெடுக்கப்பட்ட SBI ATM-களில் மட்டுமே வழங்கப்படுகிறது. 

SBI-யில் கணக்கு வைத்திருப்பவர் தங்கள் ஸ்மார்ட்போன் அல்லது ஆண்ட்ராய்டு தொலைபேசியில் SBI Yono செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம் பணத்தை எடுக்க முடியும். 

1) இணைய வங்கி செயலியான SBI YONO-வை பதிவிறக்கவும்.

2) பரிவர்த்தனையைத் (transaction) தொடங்க, ‘YONO cash option-க்கு’ செல்லவும்.

3) பின்னர் ATM பிரிவுக்குச் சென்று நீங்கள் ATM-ல் இருந்து திரும்பப் பெற விரும்பும் தொகையை உள்ளிடவும்.

4) SBI உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைலில் YONO ரொக்க பரிவர்த்தனை எண்ணை அனுப்பும்.

5) கணக்கு வைத்திருப்பவர் இந்த எண்ணைப் (PIN) பயன்படுத்த வேண்டும் மற்றும் SBI-யின் எந்த அட்டை இல்லாத பரிவர்த்தனையிலும் அவர் அமைத்த பின் நம்பரை வைத்து பணம் எடுக்கலாம்.

6) இது நான்கு மணி நேரதிற்கு செல்லுபடியாகும்.

7) SBI ATM சென்று ATM திரையில் 'YONO Cash' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 

8) YONO பண பரிவர்த்தனை எண்ணை உள்ளிடவும்

9) YONO Cash PIN-யை உள்ளிட்டு சரிபார்க்கவும்.

மற்ற வங்கி ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்க இந்த வசதியைப் பயன்படுத்த முடியுமா?

SBI அட்டை இல்லாத பணத்தை திரும்பப் பெறும் வசதி SBI ATM-களில் மட்டுமே பயன்படுத்தப்பட முடியும். இந்த வசதி ATM-களில் மோசடிகளையும் டெபிட் கார்டுகளின் குறைவையும் குறைக்கிறது.

SBI வாடிக்கையாளர்கள் ஒரு பரிவர்த்தனையில் குறைந்தபட்சம் ₹ 500 மற்றும் அதிகபட்சம் ₹ 10,000 திரும்பப் பெறலாம்.

சில தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக ATM-ல் பண பரிவர்த்தனை தோல்வியுற்றால், கணக்கிலிருந்து தொகை கழிக்கப்பட்டால்  பீதி அடைய தேவையில்லை. உடனடியாக  வங்கிக்கு தெரிவிக்கவும். ஏழு வேலை நாட்களுக்குள் இந்த தொகை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.

Editor's Choice

கூகுளுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான, முட்டல், மோதல்கள் அதிகரித்துகொண்டே வருகின்றன.ஆஸ்திரேலியாவிலிருக்கும் செய்தி நிறுவனங்களின் கருத்துருவாக்கங்களை பயன்படுத்தும் பட்சத்தில், அந்தநிறுவனங்களுக்கு, கூகுள், பேஸ்புக் உள்ளிட்டவை, ராயல்ட்டி வழங்க வேண்டும் என, ஒற்றைக் காலில் நிற்கிறது, ஆஸ்திரேலிய அரசு.

அப்படி என்றால், ஆஸ்திரேலியாவை விட்டே வெளியேறிவிடுவோம் என, ஒரு மிரட்டலை போடுகிறது, கூகுள். இவ்விவகாரம் ஒருபக்கம் இருக்க, விளம்பரங்களின் மீது, கூகுளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக, அடுத்த குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு உள்ளது.

ஆஸ்திரேலியாவின், சந்தை போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையமான, ஏ.சி.சி.சி., கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களை, 'அடக்கி' வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்த, ஓர் இடைக்கால அறிக்கையையும் ஆணையம் வழங்கி இருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் டிஜிட்டல் விளம்பர சந்தை, 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய சந்தையாக உள்ளது. ஆனால், போட்டிகள் குறைவாகவும், வெளிப்படைத் தன்மை இல்லாமலும், பிற தேர்வுகள் இல்லாமலும் இருப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் விளம்பர சந்தையில், சேவைகளை பொறுத்து, கூகுளின் பங்கு, 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

இதனால், கூகுள் நினைத்தால், ஒரு விளம்பரத்தை அதிக செயல்திறன் கொண்டதாக காட்ட முடிகிறது. இது தடுக்கப்பட வேண்டும் என்கிறது, ஆணையம். கூகுளுக்கு, அடுத்த நெருக்கடி ஆரம்பமாகிவிட்டது.

Editor's Choice

தாஜ்மஹாலின் வடிவமைப்பையும், அதன் கட்டடக் கலையையும் கண்டு மயங்காதவர்கள் யாருமில்லை. மைக்ரோசாப்ட் நிறுவனமும் அதற்கு விதிவிலக்கல்ல. மயங்கி விட்டது.

நொய்டாவில் அமைக்கப்பட்டுள்ள, மைக்ரோசாப்டின், இந்திய மேம்பாட்டு மையத்தின் கட்டடக்கலை, தாஜ்மஹாலின் அழகால் ஈர்க்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட, 90 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டிருக்கும் இந்த மையம், உள்ளூர் கைவினைஞர்களின் நுட்பமான கலைப்படைப்புகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வளமான கலாசார பாரம்பரியங்களை, கிராபிக்ஸ் கைவண்ணத்தில் இங்கே காணலாம்.

இந்தியாவில், மைக்ரோசாப்டின், மூன்றாவது மேம்பாட்டு மையமாகும் இது. மற்ற இரண்டும் பெங்களூரிலும், ஹைதராபாதிலும் அமைந்து உள்ளன.

Editor's Choice

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் ஒரே வருடத்தில் 15வது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு முன்னேறிய எலான் மஸ்க் ஒருபக்கம் எலக்ட்ரிக் கார், விண்வெளி ஆராய்ச்சி, சோலார் என முக்கியமான திட்டங்களில் பணியாற்றி வந்தாலும், உலக மக்கள் அனைவருக்கும் மிகவும் குறைவான கட்டணத்தில் அதிவேக இண்டர்நெட் சேவையை எவ்விதமான தடையும் இல்லாமல் அளிக்க வேண்டும் என்பது எலான் மஸ்க்-ன் மிகப்பெரிய கனவுத் திட்டம்.

இந்த மாபெரும் கனவு திட்டத்தின் வெற்றி தான் ஸ்டார்லிங்க். யாருடைய உதவியும் இல்லாமல், எந்த நிறுவனத்துடனும் கூட்டணி வைக்காமல், தனது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் துணையுடன் உருவாக்கிய திட்டம் தான் இந்த ஸ்டார்லிங்க்.

எலான் மஸ்க்-ன் ஸ்டார்லிங்க் திட்டம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளில் இருக்கும் வேளையில், தற்போது இந்தச் சேவையை இந்தியாவிற்கு விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளார் எலான் மஸ்க். இந்தியாவில் டெலிகாம் சேவை மூலம் பெரும் அளவிலான வர்த்தகத்தைப் பெற்று வரும் முகேஷ் அம்பானிக்கு இது பெரும் பின்னடைவாக இருக்கும்.

பொதுவாக நாம் பயன்படுத்தும் இண்டர்நெட் சேவை அனைத்தும் டெலிகாம் நிறுவனங்கள் வாயிலாகவும், Sea cable வாயிலாகவும் தான் இணைப்பைப் பெறுகிறோம். இதன் மூலம் டெலிகாம் சிக்னல் டவர்களைப் பொருத்து தான் நம் இண்டர்நெட் இணைப்பின் வேகம் இருக்கும். இந்த அமைப்பிற்கு மிகப்பெரிய அளவில் செலவு செய்ய வேண்டி உள்ளது.

குறிப்பாகப் பிராண்ட்பேண்ட் சேவை பெற வேண்டும் என்றால் கேபிள் வாயிலாகத் தான் பெற வேண்டும், அதிலும் அதிக வேகம் கொண்ட இணைப்பும் வேண்டும் என்றால் பைபர் ஆப்டிக் கேபிள் கட்டாயம்.

ஆனால் ஸ்டார்லிங்க் முற்றிலும் மாறுபட்டது, எலான் மஸ்க்-ன் இந்தக் கனவு திட்டத்தில் இண்டர்நெட் இணைப்பை செயற்கைக்கோள்-ல் இருந்து நேரடியாக நம் வீட்டிற்கே நேரடியாகப் பெற முடியும். இதனால் எந்த டெலிகாம் நிறுவனத்தையும் நம்பியிருக்கத் தேவையில்லை, இதுமட்டும் அல்லாமல் இந்தச் சேவையைப் பெறுவதும் மிகவும் எளிது.

ஒரே ஒரு Antenna வாங்கினால் போது, 24X7 மணிநேரமும் எவ்விதமான தடையும் இல்லாமல் செயற்கைக்கோள்-ல் இருந்து நேரடியாக இண்டர்நெட் சேவையைப் பெறலாம்.

இந்தப் புதிய தொழில்நுட்பம் வாயிலான இண்டர்நெட் சேவையைத் தற்போது எலான் மஸ்க்-ன் Space Exploration Technologies Corp அமெரிக்கா பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளில் மட்டுமே அளித்து வரும் நிலையில் இச்சேவையை அதிக டெலிகாம் வாடிக்கையாளர்கள் கொண்ட இந்தியா மற்றும் சீனாவிற்கு விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்தியா மற்றும் சீனாவில் விரிவாக்கம் செய்வதன் மூலம் இண்டர்நெட் சேவை இல்லாத கிராமம், மலைவாழ் மக்கள் என அனைத்து தரப்பினரும் அதிவேக இண்டர்நெட் சேவை பெற முடியும். இதுமட்டும் அல்லாமல் ஸ்டார்லிங்க் சேவை தற்போது விமானத்திற்குள் பயன்படுத்தவும், கடற்பயண சேவைகளுக்கும் பயன்படுத்தும் வகையில் விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் ஸ்டார்லிங்க் நிறுவனம் சுமார் 1 டிரில்லியன் டாலர் சந்தைக்குள் நுழைந்துள்ளது.

அமெரிக்காவில் இந்த ஸ்டார்லிங்க் பெற 500 டாலரைக் கொண்டு ஒரு டிஷ் டிவி Antenna போன்ற ஒன்றை வாங்க வேண்டும். இதன் பின் மாதம் 99 ரூபாய் விலையில் அதிவேக இண்டர்நெட்-ஐ எவ்விதமான தடையும் இல்லாமல் பெற முடியும். அமெரிக்காவில் தற்போது இருக்கும் இண்டர்நெட் சேவையை விடவும் மிகவும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை அறிமுகம் செய்வதன் மூலம் இந்திய டெலிகாம் நிறுனங்களின் பிராண்ட்பேன்ட் சேவை வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்படும். குறிப்பாக இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ பெரும்பாலான தனது முக்கிய டிஜிட்டல் சேவைகளைப் பிராண்ட்பேன்ட் சேவையை நம்பிதான் வர்த்தகத்தைக் கட்டமைத்து வருகிறது. இந்நிலையில் ஸ்டார்லிங்க்-ன் வருகை ஜியோவிற்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இதுவரை ஸ்டார்லிங்க் சேவைக்காகச் சுமார் 1000 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. தனது பால்கன் 9 ராக்கெட்-ல் ஒரு முறை 60 செயற்கைக்கோள் எனக் கணக்கீட்டில் 17 முறை விண்ணில் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் இதுபோன்ற சேவையை அளிக்கச் சுமார் 4400 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த வேண்டும்.

Editor's Choice

ஓடிடி.,யில் வெளியாகும் தொடர்கள், படங்களுக்கு கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் வழிகாட்டுதல் வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

திரையரங்குகளில் பிப்ரவரி 1 முதல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 100 சதவீத இருக்கைகளையும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. திரையரங்குகளில் மாஸ்க் அணிவது, உடல் வெப்ப பரிசோதனை செய்வது கட்டாயம். தியேட்டர் டிக்கெட் முன்பதிவில் ஆன்லைன் முறையை ஊக்குவிக்க வேண்டும். விரிவான வழிகாட்டுதல்கள் இன்று வெளியிடப்படும்.

ஓடிடியில் வெளியாகும் சில தொடர்கள், படங்களுக்கு எதிராக ஏராளமான புகார்கள் வருகின்றன. எனவே, ஓடிடி படங்கள், தொடர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் வழிகாட்டுதல் வெளியிடப்படும் என மத்திய அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பக்கம் 49 / 74