Editor's Choice

சில தினங்களாக கேம்ஸ்டாப் (GameStop) என்றும், பங்குச் சந்தை என்றும், ரெட்டிட் என்றும், வால் ஸ்ட்ரீட் என்றும் நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருக்கலாம். திடீரென்று இவை ஏன் இணையத்தில் விவாதிக்கப்படுகின்றன.

கேம்ஸ்டாப் என்பது அமெரிக்காவில் வீடியோ கேம் கேசட்டுகள், கன்சோல்கள் மற்றும் மின்னணு சாதனங்களை விற்பனை செய்யும் நிறுவனம்.

ரெட்டிட்( Reddit) என்பது ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற ஒரு சமூக வலைதளம். அதில் நீங்கள் உங்களுக்கு பிடித்த தலைப்புகள் கொண்ட குழுக்களில் இணைந்து கொள்ளலாம். கால்பந்து, வரலாறு என எதுவாக வேண்டுமானாலும் அது இருக்கலாம்.

அதில் ஒன்றுதான் `வால்ஸ்ட்ரீட்பெட்ஸ்` (wallstreetbets) இதில் 40 லட்சத்துக்கும் மேலானோர் உள்ளனர். இதில் பங்குச் சந்தை குறித்து பெரிதும் விவாதிக்கப்படும். அதேபோல முதலீடுகள் குறித்தும் இதில் விவாதிப்பர்.

அமெரிக்காவின் மன்ஹாட்டனில் உள்ள இந்த வால் ஸ்ட்ரீட்டில்தான் நியூயார்க் பங்குச் சந்தை என்று சொல்லப்படும் NYSE அமைந்துள்ளது. மேலும் பல முக்கிய நிதி நிறுவனங்கள் இங்கு உள்ளன. காலப்போக்கில் அமெரிக்காவின் நிதிச் சந்தையை வால் ஸ்ட்ரீட் என்றும் குறிப்பிட்டனர்.

கேம்ஸ்டாப் என்பது லாபம் ஈட்டும் நிறுவனமாக இல்லை.

பலர் இந்த பெருந்தொற்றால் நேரில் வந்து கேம்களை வாங்கவில்லை. எனவே இந்த நிறுவனம் பெரும் அடியை சந்தித்தது.

பங்குகளை வாங்குபவர்கள், விற்பவர்கள் பொதுவாக எதிர்காலத்தில் எந்த நிறுவனம் லாபத்தில் இயங்காதோ அதன் பங்குகளை வாங்குவது இயல்பு.

அவர்கள் அந்த நிறுவனத்தில் மீண்டும் பங்கை வாங்குவோம் என உறுதியளித்து பங்கை கடன் வாங்கி அதை விற்பார்கள்.

அந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு சரியும் என்று உறுதியாக உங்களுக்கு தெரிந்தால் அதை நீங்கள் மீண்டும் வாங்கும்போது குறைந்த விலையே இருக்கும் அதுவே லாபமாக அமையும்.

இது ஒரு சூதாட்டம் போன்று என வைத்துக் கொள்ளலாம். உங்கள் கணிப்பு தவறாகி அந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு குறையாமல் அதன் மதிப்பு அதிகரித்தால் உங்களுக்கு லாபத்திற்கு பதிலாக நஷ்டமே மிஞ்சும்.

இதேபோலதான் கேம்ஸ்டாப் பங்குகளின் மீது பந்தயம் வைத்தனர். ஆனால் ரெட்டிட்டில் உள்ள வால்ஸ்ட்ரீட்பெட்ஸ் என்ற குழுவில் உள்ள சிறிய முதலீட்டாளர்கள் பலர் பேசி வைத்துக் கொண்டு கேம்ஸ்டாப்பின் பங்குகளை வாங்கினர்.

எனவே தேவை இருக்கும் இடத்தில் பங்கின் விலை அதிகரித்தது. அதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு குறைந்துபோகும் என நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆம் அதன் பங்குச் சந்தை மதிப்பு உயர்ந்தது ஆனால் அதைத் திரும்ப வாங்குவதாக உறுதியளித்தவர்கள் அதை வாங்கியே ஆக வேண்டும்.

இதில் ஈடுபட்டவர்கள் அதாவது சிறிய முதலீட்டாளர்களின் இலக்கு பெரும் பங்கு தரகர்கள்.

ரெட்டிட் தளத்தில் இடுகைகளில் 2008ஆம் ஆண்டு பல பெரிய நிறுவனங்கள் ஏற்படுத்திய நிதி நெருக்கடிக்கு பழிவாங்கும் செயல்தான் இது என்று பேசி வருகின்றனர்.

இது ஒரு தலைமுறை சண்டை. பணம் படைத்தவர்களிடமிருந்து பணத்தை பெற்று அதை ஏழைகளுக்கு கொடுக்கும் ஒரு நடவடிக்கை என்றும் சில பேசி வருகின்றனர்.

ஒரு சிலர் ரெட்டிட் குழுவில், இதன்மூலம் தாங்கள் சம்பாதித்த பணத்தை தொண்டு நிறுவனங்களுக்கு கொடுத்ததாக கூறிவருகின்றனர். இது எல்லாம் ஒருபக்கம் இருக்க இதுகுறித்த மீம்களுக்கும் இணையத்தில் பஞ்சமில்லை.

Editor's Choice

பெட்ரோல் மற்றும் டீசல் கார் தயாரிப்பதை கார் தயாரிப்பு நிறுவனங்கள் 2030-ம் ஆண்டு முதல் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற இலக்கை பிரிட்டன் அரசு நிர்ணயித்துள்ளது.

எரிசக்தி முறையில் இயங்கும் வாகனங்கள் அதிக அளவு புகையை வெளியேற்றுகின்றன. அதன் காரணமாகக் காற்று மாசுபடுகிறது. எனவே சுற்றுச் சூழலைக் காக்கவும், பசுமை உலகத்தை உருவாக்கும் முயற்சியாகவும் மின்சாரத்தைப் பயன்படுத்தி இயங்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தயாரிப்பை அனைத்து நாடுகளும் ஊக்குவித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாகத்தான் பிரிட்டன் அரசு இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளது.

முன்பு பிரிட்டன் அரசு, எரிசக்தி துறை சார்ந்த வாகனங்களின் உற்பத்தியை நிறுத்துவதற்கு 2040-ம் ஆண்டை இலக்காக நிர்ணயித்திருந்தது. அதை இன்னும் விரைவாக 10 ஆண்டுகளுக்கு முன்னதாக 2030-ம் ஆண்டுக்குள் முடிப்பதற்கு இப்போது போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

மின்சார கார் பயன்பாட்டில் கார்களை சார்ஜ் செய்யும் வசதி அனைத்து இடங்களிலும் இல்லாதது பெரும் பிரச்னையாக இருக்கிறது. இதைத் தீர்ப்பதற்கு கார்களை சார்ஜ் செய்யும் பிரத்யேக மின் பாயின்டுகளை பெருமளவில் அமைக்க வேண்டும். இதைத் தனிநபர் வீடுகளிலும் அமைக்க முடியும். பெட்ரோல் பங்க் போல பொதுவான இடங்களிலும் அமைக்க முடியும்.

ரீசார்ஜ் செய்யும் ஸ்டேஷன்களை அமைப்பதற்காக மட்டும் 1.3 பில்லியன் பவுண்டை பிரிட்டன் அரசு ஒதுக்கியுள்ளது. வீடுகளில் மக்கள் இதை அமைத்துக் கொள்வதற்கு அரசு மானியமாக இந்தத் தொகை அளிக்கப்படும். அந்த நாட்டில் 25 மைல் சுற்றளவுக்குள் கிராமப்புறங்களில்கூட நிச்சயம் ஒரு சார்ஜிங் ஸ்டேஷன் இருப்பதை இதன் மூலம் அரசு உறுதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கார் கம்பெனி நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியின் விலையை குறைக்கும் நடவடிக்கைக்காகவும், அதிக மின்சார பேட்டரிகளை தயாரிக்கும் நடவடிக்கைக்காகவும் அந்த அரசு ஒதுக்கியுள்ளது. இத்துடன், நாட்டில் அதிக அளவில் காற்றாலைகளை நிறுவி பசுமை வழியில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளை அதிகரிக்கவும் அந்த அரசு முயன்று வருகிறது.

இப்போது பல நிறுவனங்கள் விரைவாக சார்ஜ் செய்யும் பேட்டரி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த முயற்சியின் ஒரு முக்கிய மைல் கல்லாக 5 நிமிடங்களில் முழுவதும் சார்ஜ் செய்யும் பேட்டரியை இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த storedot என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. பெட்ரோல் நிரப்பும் நேரத்துக்குள் பேட்டரி சார்ஜ் செய்ய முடியும். இதன் மூலம் எளிதாக வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றிக்கொள்ள முடியும். அவ்வாறு 5 நிமிடங்களில் சார்ஜ் செய்த மின்சாரத்தைப் பயன்படுத்தி ஒரு வாகனம் 480 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இவ்வாறு சார்ஜ் செய்வதற்கு சிறப்பு சார்ஜர்களுக்கான அமைப்பை ஏற்படுத்த வேண்டியிருக்கும்.

இன்னும் 20 வருடமாவது குறைந்தபட்சம் பெட்ரோல், டீலுக்கான தேவை குறையாது என்றே கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கால அவகாசத்தைப் பயன்படுத்தி அரபு நாடுகள் மாற்று தொழில்களில் வருமானம் ஈட்ட முயற்சி எடுத்து வருவது பொருளாதார சிக்கல்களிலிருந்து அந்த நாடுகளைக் காக்கும். தொழில்நுட்பத்தில் மாற்றமானது ஒவ்வொரு துறையிலும் நடைபெறக் கூடியதுதான். எந்த மாற்றமும் சாதகங்களும், பாதகங்களும் நிறைந்ததாகவே இருக்கும்.

80-களில் கோலோச்சிய பல தொழில்கள் இப்போது வழக்கொழிந்துவிட்டன. மாற்றத்தைத் திறமையாகக் கையாண்ட நிறுவனங்கள் மற்றும் நாடுகள் அபார வளர்ச்சியைப் பெற்ற வரலாற்றைக் கடந்த ஆண்டுகளில் பார்த்துள்ளோம். அதன் ஒரு பகுதியாகத்தான் எரிசக்தி தேவையின் மாற்றம் உள்ளது.

Editor's Choice

நியூராலிங்க் என்னும் தங்களது தொழில்நுட்ப திட்டத்தின் ஒரு பகுதியாக, தலையோட்டில் (Skull) பொருத்தப்பட்ட சிப் மூலம் குரங்கொன்று வீடியோ கேம் விளையாடுவதை சாத்தியப்படுத்தியுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த தொழில்நுட்ப தொழில்முனைவோரான ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நியூராலிங்க் என்னும் இவரது புதிய ஸ்டார்ட்அப் நிறுவனம், மனித மற்றும் விலங்குகளின் மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், குரங்கு ஒன்றின் தலையோட்டில் சிறு ஒயர்களை கொண்ட சிப் போன்ற ஒயர்லெஸ் கருவியை பொருத்தியுள்ளதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இணையவழியே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஈலோன் மஸ்க் அறிவித்ததார்.

“நியூராலிங்க் நிறுவனத்திடம், தலையோட்டில் (Skull) சிறு ஒயர்களுடன் கூடிய கம்பியில்லா கருவி பொருத்தப்பட்ட குரங்கொன்று உள்ளது” என்று கூறியுள்ளார். அதாவது, மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் நியூராலிங்க் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை இந்த குரங்கின் வாயிலாக பரிசோதித்து வருகின்றனர்.

“உங்களால் அந்த சிப் எங்கு பதியப்பட்டுள்ளது என்பதை காண முடியாது. அது மிகவும் மகிழ்ச்சியான குரங்கு” என்று கூறிய மஸ்க், இந்த திட்டம் குறித்த மேலதிக அறிவிப்புகள் வரும் மாதங்களில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.

இதுபோன்ற விநோதமான திட்டத்தை ஈலோன் மஸ்க் மேற்கொள்வது இது முதல் முறையல்ல.

முன்னதாக, கடந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் தனது தொழில்நுட்ப திட்டத்தை நிரூபிக்கும் வகையில், மூளையில் ஒரு நாணய அளவில் கம்ப்யூட்டர் சிப் பொருத்தப்பட்ட பன்றியை ஈலோன் மஸ்க் அறிமுகப்படுத்தி இருந்தார்.

அந்தப் பன்றியின் பெயர் ‘கெர்ட்ரூட்’.

“இது கைகளில் அணியும் ஃபிட்பிட், மூளைக்குள் சிறு வயர்களுடன் இருப்பதை போன்றது” என்று இணையம் வழியே நடந்த அந்த அறிமுக நிகழ்ச்சியில் ஈலோன் மஸ்க் கூறி இருந்தார்.

மனித மூளையையும் இயந்திரங்களையும் இணைக்கும் இதுபோன்ற இடைமுகம், நரம்பியல் குறைபாடு உள்ளவர்கள் தங்களது மூளை மூலம் திறன்பேசிகள் அல்லது கணினிகளை கட்டுப்படுத்த வழிவகை செய்யும் என்று மஸ்க் கூறுகிறார்.

அதுமட்டுமின்றி, பிற்காலத்தில் மறதி நோய், பார்கின்சன் நோய் மற்றும் முதுகெலும்பு காயங்கள் போன்ற நிலைமைகளை குணப்படுத்த இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

மூளையில் ‘கம்ப்யூட்டர் சிப்’ பொருத்தப்பட்ட பன்றியான கெர்ட்ரூட்டின் நரம்பியல் செயல்பாடுகள் கணினி வாயிலாக கண்காணிக்கப்பட்டன.

அந்த பன்றி தனக்கு முன்பாக இருக்கும் உணவை பார்க்கும்போது அதன் உடலில் ஏற்படும் நரம்பியல் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் அதன் மூளையில் பொருத்தப்பட்டுள்ள சிப் அனுப்பும் ஒயர்லஸ் சிக்னல்கள் வாயிலாக பெறப்பட்டன.

சுமார் ஓராண்டுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட நியூராலிங்க் கருவியின் முதல் பதிப்பு தற்போது எளிமையாக்கப்பட்டு, சிறியதாக மாற்றப்பட்டுள்ளதாக மஸ்க் அந்த நிகழ்வின்போது தெரிவித்திருந்தார்.

2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், உருவாக்கும் சாதனம் ஒரு மனித தலைமுடியை விட மெல்லிய நெகிழ்வான நூல்களுடன் இணைக்கப்பட்ட 3,000க்கும் மேற்பட்ட மின்முனைகளைக் (Electrodes) கொண்டுள்ளது. இது 1,000 மூளை நரம்பணுக்களின் (Neurons) செயல்பாட்டைக் கண்காணிக்க முடியும்.

ஆனால் இந்த திட்டத்தின் நீண்டகால நோக்கமே, “மனிதர்களுக்கு மேற்பட்ட அறிவாற்றல் யுகம்” என்று கூறும் எலான் மஸ்க், அத்தகைய ஒரு யுகத்தில் செயற்கை நுண்ணறிவு மனித குலத்தை அழிக்கும் அளவுக்கு பலம் பெற்றுவிடும் என்றும் அப்போது அதை எதிர்த்துப் போராடுவதற்கு தயாராக வேண்டும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

Editor's Choice

அமெரிக்காவை சேர்ந்த ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் சிஇஓ ஜெப் பெசோஸ், அந்த பதவியிலிருந்து விலகுகிறார். இவருக்கு பதிலாக அமேசான் வெப் சர்வீசஸ் சிஇஓ ஆன்டி ஜெஸி பொறுப்பேற்க உள்ளார். பெசோஸ் எக்சிகியூட்டிவ் சேர்மேன் பதவியை ஏற்கவிருக்கிறார்.

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்(Jeff Bezos) தமது தலைமை செயல் அதிகாரி பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்திருக்கிறார்.

இதுதொடர்பான அறிக்கையையும் அவர் தற்போது கடிதமாக வெளியிட்டிருக்கிறார். தொழில்நுட்ப உலகில் இந்த செய்தி பரவலாக பேசப்பட்டு இருக்கிறது. தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து அவர் அவர் விலகினாலும் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக அவர் தொடர்ந்து நீடிப்பார் என்று தெரிகிறது.

அமேசான் நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு நிதி அறிக்கையை அவர் வெளியிட்ட போது, இந்த அறிவிப்பையும் சேர்த்து வெளியிட்டு இருக்கிறார். கடந்த 3 வருடங்களில் மட்டும் 100 மில்லியன் டாலர் அளவுக்கு அமேசான் நிறுவனம் வர்த்தகம் செய்திருக்கிறது. உலகின் பெரு நிறுவனங்களில் ஒன்றான அமேசான் 1994ஆம் ஆண்டு ஜெஃப் பெசோஸால் தொடங்கப்பட்டது. இப்போதைக்கு இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு 185 மில்லியன் டாலர்களாக இருக்கிறது.

ஜெஃப் பெசோஸின் அப்பா க்யூபாவில் இருந்து வந்த அகதி தான் என்றாலும் அம்மா வழியில் ஏகப்பட்ட சொத்துக்கள் இருந்ததால் சின்ன வயதிலிருந்து துருதுருவென்று இருந்த ஜெஃப் பெசோஸ் முதன் முதலில் எலக்ட்ரானிக் அலாரம் தயாரித்திருக்கிறார்.

அதன் பின்னர் விண்வெளி வீரனாக ஆக வேண்டும் என்கிற ஆசை தாத்தாவின் ஆர்வத்தைப் பார்த்து அவருக்கும் வந்து இருந்தது. ஆனால் கல்லூரியில் அவருடைய கவனம் கணினி பக்கம் திரும்பியது. கணினி மற்றும் மின்னணு அறிவியல் துறையில் பட்டம் படித்து வெளியேறிய இவர் பெரு நிறுவனங்களில் வேலை பார்த்து தொடக்கத்தில் லட்சக்கணக்கில் சம்பாதித்து இளம் வயதிலேயே நிதி நிறுவனம் ஒன்றின் துணை தலைவராக பதவியேற்றார்

ஆனால் அந்த சமயத்தில் இணையத்தில் வர்த்தகம் செய்பவர்கள் சேவை வரி செலுத்த தேவையில்லை என அமெரிக்க சுப்ரீம் கோர்ட் சொன்னதும் அந்த வேலையை தூக்கி வீசிவிட்டு வெளியேறினார் ஜெஃப் பெசோஸ். பின்னர் இணையத்தில் புத்தகங்கள் ஆர்டர் செய்தால் போதும் வீட்டுக்கே டெலிவரி வந்துவிடும் என்கிற கான்செப்டை செயல்படுத்த தொடங்கினார்.  மிகக்குறைவான ஆட்களை கொண்டு தொடங்கிய இந்த செயலுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. அப்போது சில வாடிக்கையாளர்கள் ஏன் இப்படி எலக்ட்ரானிக் சாதனங்களை விற்கக்கூடாது? என்று கேட்க உடனே அவற்றையும்ஜெஃப் பெசோஸ் சேர்த்து கொண்டார். புத்தகங்களை விட எலக்ட்ரானிக் சாதனங்கள் சக்கை போடு போட்டன. இப்போது அமேசானின் விற்கப்படாத சாதனங்களே இல்லை என்கிற அளவுக்கு ஆகிவிட்டது.

இப்படிப்பட்ட வளர்ச்சிப்பாதையில் நிறுவனத்தை செலுத்திக் கொண்டிருந்த அவர் இந்த முடிவை ஏன் எடுத்தார் என்பது தொடர்பாக அவர் தெரிவித்திருக்கிறார். அதில் புதிய தயாரிப்புகளிலும் சில ஆரம்ப முயற்சிகளிலும் கவனம் செலுத்தப் போவதாக குறிப்பிட்டிருக்கிறார்.

27 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பயணம் தொடங்கியதாகவும் அப்போது அமேசான் ஒரு யோசனையாக மட்டுமே இருந்ததாகவும் இணையம் என்றால் என்ன? என்கிற கேள்வியை பலரும் தன்னிடம் கேட்டதாகவும் குறிப்பிட்ட ஜெஃப் பெசோஸ்,  இப்போது திறமையான அர்ப்பணிப்பு உடைய 13 லட்சம் பேர் அமேசானில் பணியாற்றுகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த வெற்றிகரமான செயல்கள் எல்லாம்  எப்படி சாத்தியமானது? கண்டுபிடிப்பால் மட்டும்தான் இது நடந்திருக்கிறது. வெற்றிக்கான வேர் கண்டுபிடிப்பு தான் என்றும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதனிடையே அமேசான் வெப் சர்வீஸின் தலைவராக உள்ள 52 வயதான அண்டி ஜாஸ்ஸிதான் அமேசானின் அடுத்த தலைமை செயல் அதிகாரியாக நீடிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சிஇஓ.,வாக பொறுப்பேற்கவுள்ள ஆன்டி ஜெஸி, 1997ம் ஆண்டு அமேசானில் சேர்ந்துள்ளார். இவர்தான் அமேசான் வெப் சர்வீஸை துவங்கி அதை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் கிளவுட் பிளாட்பார்மாக உருவாக்கியவர். ஜெப் பெசோஸின் இந்த முடிவை வரவேற்று கூகுள் சி.இ.ஓ. சுந்தர்பிச்சை, மைக்ரோசாப்ட் சிஇஓ சத்திய நடெல்லா தங்களது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

Editor's Choice

பாரதி ஏர்டெல் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவு கசிந்துள்ளது. ஆதார் எண், முகவரி மற்றும் வாடிக்கையாளர்களின் பிறந்த தேதி ஆகியவை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.

பாரதி ஏர்டெலின் ஜம்மு-காஷ்மீர் வட்டத்தின் சுமார் 25 லட்சம் வாடிக்கையாளர்களின் தரவு மீறப்பட்டதாகக் கூறப்பட்டு, ஹேக்கர்கள் தகவல்களை பகிரங்கப்படுத்தியுள்ளனர்.

மீறப்பட்ட தகவல்களின் மாதிரியை ட்விட்டரில் இணைய பாதுகாப்பு ஆய்வாளர் ராஜசேகர் ராஜாரியா பகிர்ந்துள்ளார். பாரதி ஏர்டெல் மற்றும் 'ரெட் ராபிட் டீம்' என்ற ஹேக்கர்களுக்கு இடையிலான மின்னஞ்சல் உரையாடலின் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார். டிசம்பர் மாதத்தில் தரவு மீறல் குறித்து ஹேக்கர்கள் பாரதி ஏர்டெலுக்கு தகவல் கொடுத்து மீட்கும் தொகையை கோரியதாக வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.

'இந்தியா முழுவதும் ஏர்டெல் வாடிக்கையாளர்களிடமிருந்து தங்களிடம் தரவு இருப்பதாக ஹேக்கர்கள் கூறியுள்ளனர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் இருந்து மட்டுமே வாடிக்கையாளர்களின் தரவின் மாதிரியை பதிவேற்றியுள்ளனர். கோவிட் -19 இன் போது பல நிறுவனங்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்த முடியவில்லை மற்றும் அவற்றின் தரவு மீறப்பட்டது.

ஹேக்கர்கள் வாடிக்கையாளர் தரவையும் ஒரு வலைத்தளத்திற்கு பதிவேற்றினர், ஆனால் அது பின்னர் நீக்கப்பட்டது. இருப்பினும், ஒரு பாரதி ஏர்டெல் செய்தித் தொடர்பாளர் தொடர்பு கொண்டபோது நிறுவனத்தின் சேவைகள் மீறவில்லை என்று மறுத்தார்.

வாடிக்கையாளர்களின் தரவு கசிவு குறித்த செய்தியை ஏர்டெல் மறுத்துள்ளது. இருப்பினும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் தங்களின் தகவல்கள் வேறெதும் இணையதளத்தில் உள்ளதா என்பதை சரிபார்ப்பது அவசியம்.

Editor's Choice

நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளி பெண்ணான பவ்யா லால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பவ்யா லால் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமன உத்தரவை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. மேலும், பவ்யா லால், கடந்த 2005 முதல் 2020ம் ஆண்டு வரை பாதுகாப்பு ஆராய்ச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை மையத்தின் ஆராய்ச்சி ஊழியராக பணியாற்றி வந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

பொறியியல் மற்றும் விண்வெளி தொழில் நுட்பத்தில் அளப்பரிய அனுபவங்களைக் கொண்டுள்ள பவ்யா லால், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கையின் வெள்ளை மாளிகை அலுவலகத்தில், விண்வெளி தொழில்நுட்பம், கொள்கை உள்ளிட்ட துறைகளில் தலைமை பொறுப்பை வகித்து வந்துள்ளார்.

மேலும், அணுசக்தி பொறியியல் பிரிவில் இளநிலை மற்றும் முதுகலை பட்டத்தையும், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை பிரிவில் முதுகலை பட்டத்தையும் பெற்றுள்ளார்.

பக்கம் 48 / 74