- வேளாண்மை
- Read Time: 1 min
- படிப்புகள்: 354
அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்,
தென்பொன்பரப்பி-606 201, கள்ளக்குறிச்சி மாவட்டம்.
1. தாராலிங்கம் பற்றிய குறிப்பு.
சிவலிங்கங்களில் பலவிதங்கள் உள்ளதுபோல், பாணப்பகுதியில் பட்டைகள் அமைந்துள்ள சிவலிங்கங்களையும் சில திருத்தலங்களில் தரிசிக்கலாம். அவை "தாராலிங்கம்' என்று கூறப்படுகின்றன.
காஞ்சி கைலாசநாதர் கோவில், மாமல்லபுரத்தில் உள்ள கற்கோவில்கள், தென்னாற்காடு மாவட்டம் பனைமலையில் உள்ள சிவன் கோவில், தென்பொன்பரப்பி சிவன் கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் போன்ற ஆலயங்களின் வளாகத்திலும் தாராலிங்கங்கள் உள்ளன.
தாராலிங்கங்கள் ஐந்து வகைப்படும் என்று சிற்ப சாஸ்திரம் கூறுகிறது. 4, 8, 16, 32, 64 என்ற விகிதத்தில் பட்டைகள் அதாவது தாரைகள் அமைத்திருப்பார்கள்.
நான்கு பட்டைகள் கொண்ட லிங்கங்களை "வேதலிங்கம்' என்று போற்றுவர். சக்கரப்பள்ளி என்ற பாடல் பெற்ற திருத்தலத்தில் மூலவர் நான்கு பட்டை லிங்கமாகத் திகழ்கிறார். கோவை காரமடை ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தில் நாற்பட்டை லிங்கமாகத் திகழ்கிறார். பொதுவாக, நான்கு பட்டைகள் கொண்ட லிங்கத்தை சர்வதோபத்ரதாரா லிங்கம் என்பர்.
எண் பட்டைகளைக் கொண்ட அஷ்டதாரா லிங்கம் காஞ்சி கைலாசநாதர் கோவிலிலும், திருவதிகை கோவிலிலும் காணப்படுகிறது. இதன் எட்டுப் பட்டைகளும் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகியவற்றைக் குறிக்கும் என்பர். மேலும் எட்டு பைரவ சக்திகளையும், இறைவனின் அஷ்ட வீரச்செயல்களையும் குறிப்பன என்பர். சிதம்பரம் நவலிங்க சந்நிதியிலும் எட்டு திசை லிங்கங்கள் உள்ளன. இவை அஷ்டதாரா லிங்கங்களாகும்.
பதினாறு பட்டைகள் உடைய லிங்கம் சோடச தாராலிங்கம் எனப்படும். இந்த லிங்கத்தை சந்திரகலா லிங்கம் என்றும் சொல்வர். இவ்வகை லிங்கங்கள் குளிர்ச்சியான கல்லில் உருவானவையாகும். பெரும்பாலும் சந்திரக்காந்தக் கல்லில் உருவானதாக இருக்கும். சிதம்பரம் நவலிங்க சந்நிதியின் மையத்திலும், பழையாறை மேற்றளியிலும், பொன்பரப்பி தலத்திலும், திருப்பட்டூர் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள கோவிலிலும் சோடச தாராலிங்கம் உள்ளது.
திருபொன்பரப்பி திருக்கோயிலில் உள்ளது, இதனின் வேறு பட்டதாகும். சூரிய காந்தக் கல்லால் ஆனது.
முப்பத்திரண்டு பட்டைகளுடன் காட்சி தரும் லிங்கத்தை தர்மதாரா லிங்கம் என்பர். காஞ்சியம்பதியில் 32 பட்டைகள் கொண்ட லிங்கத்தை தரிசிக்கலாம்.
64 பட்டைகளுடன் திகழும் அபூர்வ லிங்கத் திருவுரு- கலைகள், சிவபெருமானின் 64 லீலா விநோதங்கள், 64 யோகியர்களைக் குறிக்கும் என்பர்.
இவ்வகை லிங்கத்தை காஞ்சியம்பதியில் தரிசிக்கலாம். மேலும், அறுபத்து நான்கு பட்டைகள் கொண்ட லிங்கம் பைரவரையும் குறிப்பதாக ஆகமங்கள் கூறுகின்றன.
பொதுவாக தாராலிங்கங்களை வழிபடுவதால், இறைவனின் பூரண அருள் கிட்டுவதுடன் சிவபதம் கிட்டும் என்றும் சொல்வர். எனவே இதை சாயுஜ்ய லிங்கம் என்றும் போற்றுவர்.
இந்தத் தாராலிங்கத்தின் மேல் தாராபாத்திரம் மூலமாக அபிஷேகம் செய்யும்போது, அபிஷேக நீர் தாரைகளின் வழியே பிரிந்து செல்லும் காட்சியை தரிசிப்பதால் பரம்பொருளின் முழுமையான அருளைப் பெற்று வளமுடன் வாழலாம் என்பர்.
திருபொன்பரப்பித் தலத்து சொர்ணபுரீஸ்வரர் ,நவபாஷாணத்துக்கு நிகரான சூரியகாந்தத் தன்மை கொண்ட ஒரே கல்லினால் செய்யப்பட்ட சோடச தாராலிங்கமாக அருள்பாலிக்கிறார்.சந்தன அபிஷேகத்தின் போது, பதினாறு பட்டைகளிலும் சீராக கோடுபோல் வழிவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
இனி, தென்பொன்பரப்பித் திருத்தல மகமைகளைச் சுருக்கமாகக் காண்போம்.
சித்தர்களின் தலைமை குருவாக கருதப்படும் காகபுஜண்டர் சித்தர் பிரதிஷ்டை செய்த சோடச தாராலிங்கம்!!
1300 ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்களின் தலைமைக் குருவாகக் கருதப்படும் காகபுஜண்டர் சித்தர், 16 ஆண்டுகளுக்கு மேலாக கடுமையான தவத்தின் பயனாக 16 முகங்களுடன் கூடிய சிவலிங்க தரிசனத்தை ஒரு பிரதோஷ நாளில் பெற்றார். அதே போல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பக்தர்களும் எதிர்காலத்தில் வணங்க வேண்டும் என கருதி, மற்ற சிவாலயங்களில் இல்லாத சிறப்புகளுடன் இந்த லிங்கத்தை உருவாக்கினார்.
நவபாஷாணத்துக்கு நிகரான சூரியகாந்த தன்மை கொண்ட ஒரே கல்லினால் செய்யப்பட்ட தாராலிங்கம் இது. சுமார் 5.5 அடி உயரத்திற்கு, கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது. இத்தலத்திலுள்ள இறைவன் பதினாறு பட்டைகளுடன் இருப்பதால் சோடச லிங்கம் என்று அழைக்கப்படுகிறார்.
பொதுவாக பதினாறு பட்டைகள் கொண்ட சோடசலிங்கத்தில், அதன் பாணம் மட்டுமே 16 பட்டைகளுடன் இருக்கும். ஆனால், இங்கு ஆவுடையாரும் பீடமும் 16 பட்டைகளுடன் அமைந்துள்ளது தனிச் சிறப்பு.
உலகையே கட்டியாளும் மும்மூர்த்திகளும் இவ்வாறு ஒரே வடிவமைப்பில் இணைந்திருப்பது தனிச்சிறப்பு ஆகும். இந்த கல்லை கையால் தட்டிபார்த்தால், வெண்கலச் சத்தம் எழுவது பிரத்யேக சிறப்பிற்குச் சான்று.
எல்லா சிவாலயங்களிலும் நந்திதேவர் தன் தலையை ஒரு பக்கமாக சாய்த்திருப்பதைக் காணலாம். ஆனால், இக்கோயிலில் பால நந்தியாக வீற்றிருப்பதால், கொம்புகளின் இடையூறின்றி பிரதோஷ காலங்களில் நேரடியாக சிவதரிசனம் கிடைக்கிறது.
ஆவணி பவுர்ணமி மற்றும் பங்குனி உத்திரத்தில் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் பாலநந்தியின் இரு இளம் கொம்புகளின் வழியே சூரிய ஒளி இரு கோடுகளாக இறங்கி கர்ப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கத்தில் படிவதைக் காணலாம். (பாலநந்திக்கும் கருவறைக்கும் உள்ள தூரம் 70 அடியாகும்).
இக்கோயிலானது வாயு ஸ்தலத்திற்கும், பஞ்சபூத ஸ்தலத்திற்கும் இணையாக இருப்பதால் இதன் கருவறையானது மிகவும் உக்கிரமானதாக இருக்கும். இதன் கருவறையில் ஏற்படும் தீபமானது துடித்துக்கொண்டே இருக்கும் என்று காகபுஜண்டர் நாடி சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் கருவறையின் மையத்தில் அமைந்த தீபம் மட்டும் இன்றும் துடிப்புடன் எரிந்து கொண்டிருப்பது நாடி சுவடியின் பூரணத்துவத்தை நமக்கு உணர்த்துவதாக உள்ளது.
மேலும் ராகு கால வேளையில், தேன், பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், விபூதி, சந்தனம், திருமஞ்சனம், கரும்புச்சாறு, எலுமிச்சம்பழ சாறு, பஞ்சாமிர்தம், நெய், அரிசிமாவு, நல்லெண்ணெய், புண்ணிய நீர் தீர்த்தம் போன்ற 16 வகை அபிஷேகம் சிவலிங்கத்தின் உச்சியில் அபிஷேகம் ஆரம்பித்ததும் அவைகள் தானாகவே சிறிது பிசிறு கூட இல்லாமல் தனித்தனியாக 16 கோடுகளாக பாணத்தின் அடிபாகம் வரை வந்து ஆவுடையாரில் ஐக்கியமாவதைக் காணலாம்.
இத்தலத்து அம்பாள் மகாலட்சுமி அம்சத்துடன் சுவர்ணாம்பிகை என்ற பெயருடன் நின்ற கோலத்தில் அருளுகிறாள். இவள் கிழக்கு பார்த்து நின்றிருந்தாலும், இவளது முகம் சிவன் இருக்கும் திசை நோக்கி சற்று திரும்பியுள்ளது. காகபுஜண்டர், மனைவி பகுளாதேவி ஆகியோரின் ஜீவசமாதி இவளது பார்வையில் படும்படி உள்ளது.
காகபுஜண்ட சித்தர், சிவனின் தலையிலுள்ள சந்திரனின் கலையிலிருந்து தோன்றியவர். நினைத்த நேரத்தில் காக வடிவம் எடுக்கும் தன்மை கொண்டவர். எனவே சந்திர தோஷம், சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள்.
இத்தலத்தில் உள்ள நந்தி குட்டியாக இருக்கிறது. "பால நந்தி' என்பது இதன் திருநாமம்.
ராகு தோஷ நிவர்த்திக்காக இந்த நந்திக்கு பால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அப்போது அபிஷேகப்பால் நீல நிறமாக மாறுகிறது. சிவனுக்குப் பின்னால் மகாவிஷ்ணு ருத்ராட்சம் அணிந்து காட்சி தருகிறார். சிவனும் தானும் ஒன்றே என்பதை காகபுஜண்டருக்கு உணர்த்துவதற்காக இவ்வாறு காட்சி தருகிறார்.காகபுஜண்டர் இந்த கோயிலின் அருகில் சமாதி அடைந்ததை ஒட்டி சமாதி பீடம் அமைக்கப்பட்டு திருவிளக்கு ஏற்றப்பட்டு வருகிறது.
இந்த கோயிலில் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள ஆறுமுகமாக காட்சியளிக்கும் முருகன், 12 திருக்கரங்களுடனும், வள்ளி தெய்வானையுடன் பறக்கும் மயிலில் ஆசனமிட்டு, சுமார் 8 அடி உயரத்திற்கு பிரமாண்டமாக அமைந்திருப்பது மிகவும் விசேஷமானது.
முருகனுக்கு வலது பக்கம் உள்ள வள்ளி தலை சாய்த்து நிற்கிறாள்.
கருவறை வாசலில் துவாரபாலகர்களுக்குப் பதிலாக, இரு லிங்கங்கள் உள்ளன. மூலஸ்தானத்தில் காகபுஜண்டரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. தட்சிணாமூர்த்தி. சன்னதியும் துர்க்கை சன்னதியும் ஆடம்பரமின்றி காட்சி தருகிறது.
இக்கோயில்களில் உள்ள கோஷ்ட திருமேனிகளின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், தெய்வ உருவங்கள் ஒவ்வொன்றும் வெறும் உருத்ராட்ச மாலையுடன் காட்சி அளிப்பதே. ஏனெனில், காகபுஜண்ட ருக்கு சிவபெருமான் எளிமையாக தரிசனம் தந்ததை உணர்த்துவதற்காக மற்ற தெய்வங்களும், ஆடம்பரங்கள் எதுவுமின்றி மிக எளிமையாக காட்சியளிப்பதாக ஐதீகம்.
இத்திருக்கோயிலில்,இலிங்கோத்பவருக்குப் பதிலாக,திருமால் நின்றத் திருக்கோலத்தில் உருத்திராச மாலை அணிந்து பஞ்ச கோஷ்ட மூர்த்தங்களில் ஒருவராகக் காட்சியளிக்கிறார்.
இவ்விடத்தில், கோஷ்டம் பற்றிய சிறு குறிப்பு =
முன்வாசலின் (முகப்பின்) இரண்டு பக்கத்திலுள்ள கோஷ்டங்களில் வாயிற் காவலர்கள் (துவார பாலகர்கள் அல்லது துவார பாலிகைகள்) காணப்படுவர். தென்புறமுள்ள கோஷ்டங்களில் நிருத்த கணபதி, தட்சணாமூர்த்தி காணப்படுவர். மேற்குக் கோஷ்டத்தில் திருமால் அல்லது இலிங்கோத்பவர் அமைப்பது வழக்கமாக உள்ளது. வடக்குக் கோஷ்டத்தில் நான்முகன், துர்க்கை அல்லது ஒரு சக்தி தெய்வம் ஆகியோர் கோஷ்ட தேவதைகளாக நிறுவப்படுதல் ஆலயக்கலை மரபாகும்.
இந்த சிவாலயம் எழுப்பப்பட்ட காலக்கட்டத்தில், தென் பொன்பரப்பி பகுதியை ஆட்சி செய்த குறுநில மன்னன் வாணகோவரையன் ஆவான் .
கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் ஆறகழூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தவன் பொன்பரப்பின வாணகோவரையன்.
இவனின் வேறு பட்ட பெயர்கள்=
1.இராசராஜதேவன் வாணகோவரையன்
2. சிறுபாக்கமுடையான் இராஜராஜதேவன் பொன்பரப்பினான் ஆன வாணகோவரையன்
3. மகதைநாடாழ்வான் பொன்பரப்பின வாணகோவரையன்
4. மகதேசன் இராஜராஜ வாணகோவரையன்
இவன்காலத்தில் இவர் கோயில் கட்டிய ஊர்கள்
1. ஆறகழூர்
2. அரும்பாவூர்
3. வெண்பாவூர்
4. பசும்பலூர்
5. தழுதாழை
6. கூகையூர்
7. தெடாவூர்
8. வீரகனூர்
9.தென்பொன்பரப்பி
10.உலகிய நல்லூர்
மற்ற சிவாலயங்களில் இல்லாத சிறப்புகளுடன் ஒரு அழகிய சிவாலயத்தை கலை நுணுக்கத்தோடு எழுப்பினான். அப்போது ஊரில் செல்வம் கொழித்து, பொன்னும் பொருளும் அளவற்று புழங்கியதால் இவ்வூருக்கு பொன் பரப்பி என்ற பெயர் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் வாணகோவரையனுக்கு சோதனை வந்தது. கப்பம் கட்டாததால் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் படையெடுக்கும் நோக்கத்தில் அவனைத் தாக்க வந்தனர். வாணகோவரையன் குறுநில மன்னராக இருந்தபோதும் தைரியத்தில் குறைவில்லாதவன்.
தான் வணங்கும் சொர்ணபுரீஸ்வரரை மனமுருக வணங்கி போருக்குப் புறப்பட்டான். ஈசனின் முழு அருளையும் பெற்ற மகிழ்ச்சியில் போர் முரசு கொட்டிச் சென்ற மன்னனைப் பார்த்த மாத்திரத்தில் மூவேந்தர்களும் தம் அரசமுடிகளை கழற்றி வைத்துவிட்டு திரும்பினர். அதனாலேயே இந்த இடம் மும்முடி என்று அழைக்கப்படுகிறது.
இக்கோயிலின் சுற்றுச் சுவரில் ஏராளமாக கல்வெட்டுக்கள் செதுக்கப்பட்டுள்ளன. எழுத்து வடிவம் ஆதி கிரந்த எழுத்துக்களிலும், தமிழ் எழுத்துக்களிலும் உள்ளன.
காசி போன்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று ஆயிரம் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வணங்குவதன் மூலம் பெறும் பலன்களை, இக்கோயிலுக்குச் செய்யும் ஏதேனும் சிறிய அளவிலான திருப் பணியின் மூலமும், ஈசனின் தரிசனத்தின் மூலமும் பெறலாம் என்பது போன்ற தகவல்களும், சிவதரிசன வழிமுறைகளும், வழிபாட்டு பலாபலன்களும் தெளிவாக இக்கல்வெட்டுகளில் விவரிக்கப்பட்டுள்ளன.
பக்கம் 6 / 11



