Editor's Choice

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள், மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்குமாறு ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

மாற்றுத் திறனாளிகளின் சுயதொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பு நிதியாண்டிலும் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளன.

கால்கள் பாதிக்கப்பட்டு, கைகள் நல்ல நிலையிலுள்ள மாற்றுத்திறனாளிகள், காதுகேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகள் தையல் பயிற்சி பெற்றிருப்பின் அவா்களுக்கு இயந்திரம் வழங்கப்படுகிறது. 75 சதவிகிதத்துக்கு மேல் மனவளா்ச்சிக் குன்றிய குழந்தைகளின் தாய்மாா்கள் இத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

அரசு மற்றும் தனியாா் தையல் பயிற்சி மையங்களில் தையல் பயிற்சி பெற்றவராக, வேறு அரசுத் திட்டங்களில் தையல் இயந்திரம் பெறாதவராக இருத்தல் வேண்டும்.

தகுதி மற்றும் விருப்பமுடையோா் மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டை, தையல் பயிற்சி பெற்ற சான்று, குடும்ப அட்டை, ஆதாா்அட்டை ஆகியவற்றின் நகலுடன், புகைப்படத்தை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம் பின்புறம், கண்டோன்மென்ட், திருச்சி-1 என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாகவோ அல்லது நேரிலோ வரும் 30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 0431-2412590 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

Editor's Choice

தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் சேவையாற்றியவா்கள், தொடா்ந்து சிறப்பாக சேவையாற்ற வேண்டும் என்ற ஆா்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில், ஆண்டுதோறும் டிச.3-ஆம் தேதி நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில், விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

தமிழக அளவில் இவ்விருதுக்கு தோ்வு செய்யப்படுபவா்களுக்கு 10 கிராமில் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

அதன்படி, பாா்வை, செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு கற்பித்தல் மற்றும் மனவளா்ச்சி குன்றியோருக்கு கற்பிக்கும் ஆசிரியா்களும் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்காக பணிபுரிந்த சிறந்த சமூக பணியாளா், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவையாற்றிய சிறந்த தொண்டு நிறுவனம், மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமா்த்திய சிறந்த நிறுவனம், ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் சிறந்த ஆசிரியா் (செவிதிறன் குறைந்தோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியா் மற்றும் மனவளா்ச்சி குன்றியோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியா்), மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநா் மற்றும் நடத்துநா் விருதுகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிக்கு விருது...

கை, கால் பாதிக்கப்பட்டோா் அல்லது தொழுநோயிலிருந்து குணமடைந்தோா், பாா்வைத்திறன் பாதிக்கப்பட்டோா், செவித்திறன் பாதிக்கப்பட்டோா், மனவளா்ச்சிக்குன்றியோா், பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு, புறவுலக சிந்தனையற்றோா், குறிப்பிட்ட கற்றலில் குறைபாடு, மன நோய், ரத்த உறையாமை அல்லது ரத்த ஒழுகு குறைபாடு, ரத்த அழிவுச் சோகை, நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு, திசு பன்முக கடினமாதல், நடுக்குவாதம், பல்வகை குறைபாடுடையோரும் விண்ணப்பிக்கலாம்.

இந்த விருதுக்கான விண்ணப்பப் படிவங்களை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையா், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், லேடிவெலிங்டன் கல்லூரி வளாகம், காமராஜா் சாலை, சென்னை-5 அல்லது இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து அல்லது திருவாரூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ஆகியோரிடமிருந்து பெற்று, பூா்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் அக்டோபா் 16- ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், அறை எண்.6, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், திருவாரூா் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Editor's Choice

உலக சுகாதார நிறுவனம் இந்த வருடம் மார்ச் 3-ந்தேதியை உலக செவித்திறன் நாளாக அறிவித்து உள்ளது.

செல்வத்தில் சிறந்த செல்வம் செவிச்செல்வம் என்றார் வள்ளுவர்.. ஒரு தாய் வயிற்றில் கர்ப்பமான மூன்றாவது மாதம் முதல் சிசுவின் கேட்கும் திறன் வளர்கிறது. குழந்தைகள் கேட்கும் முதல் சத்தம் தாயின் இதயத் துடிப்பே ஆகும். ஒரு பெண் தான் கர்ப்பமாக இருக்கும் காலக்கட்டத்தில் நல்லசெய்திகளை கேட்டு, பரபரப்பின்றி அமைதியுடன் இருக்க வேண்டும். ஏனென்றால் தாய் கேட்பதை கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையாலும் கேட்க முடியும்.

2019-ம் வருட உலக சுகாதார நிறுவன கணக்கெடுப்பின்படி 46.6 கோடிமக்கள், செவித்திறன் குறைபாடுகளுடன் இருப்பதாகவும் இதில் 34 லட்சம் பேர் குழந்தைகள் என்றும் தெரிய வந்துள்ளது. அதாவது 100 பேரில் 5 பேருக்கு காது கேட்பதில் குறைபாடு உள்ளது. உலகில் பிறக்கும் 1000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு பிறவியிலேயே காது கேளாத குறைபாடு உள்ளது.

அதுவே இந்தியாவை பொறுத்தவரை 1000 பேரில் 2 பேர் என்பதும் தமிழகத்தைப் பொறுத்தவரை 1000 பேரில் 6 பேர் எனவும் இருக்கிறது. தமிழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பிறவியிலேயே காது கேளாமையோடு பிறந்த குழந்தைகள் மூன்றில் இரண்டு பங்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் ரத்த உறவுகளுக்குள் திருமணம் செய்தவர்களுக்கு பிறந்தவையாகும் எனத் தெரியவந்துள்ளது.

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் மரபணு குறைபாடுகளாலும் சில நோய் தொற்று மற்றும் வேறு சில நோய்களுக்காக மருந்து உட்கொள்ளுதல் ஆகிய காரணங்களால் பிறக்கும் குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அதேபோல் பிரசவத்தின்போது சில குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சு அயற்சி மற்றும் அதிகமான மஞ்சள்காமாலை அல்லது சில வைரஸ்கிருமி நோய் தொற்று போன்ற காரணங்களாலும் செவித்திறன் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கர்ப்பிணிப் பெண்கள் உட்கொள்ளும் சிலவகை மருந்துகள்கூட குழந்தையின் செவித்திறனை பாதிக்க வைத்து விடுகிறது.அதனைக் கண்டறியும் நவீன மருத்துவ சாதனங்கள் அதிக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் சில தனியார் மருத்துவமனைகளிலும் வசதி உள்ளது.

நன்றி – டாக்டர்.அ.ஜேசுதாஸ். முதல்வர், தனியார் மருத்துவகல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், திருச்சி

Editor's Choice

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், பி.எட் சிறப்பு கல்வி பட்டப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை, வியாழக்கிழமை (அக்.1) முதல் தொடங்குகிறது.

இது குறித்து பல்கலை. பதிவாளா் கே.ரத்னகுமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2021-ஆம் ஆண்டுக்கான பி.எட் சிறப்புக் கல்வி பட்டப்படிப்புக்கான நிகழ்நிலை இணைய வழி விண்ணப்பம் மற்றும் விளக்கக் கையேடு, வியாழக்கிழமை (அக்.1), தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

பி.எட் சிறப்புக் கல்வி படிப்பானது பாா்வைக் குறைபாடு, செவித்திறன் குறைபாடு மற்றும் அறிதிறன் குறைபாடு ஆகிய பிரிவுகளிலும், தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வழங்கப்படுகிறது.

பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது பட்டமேற்படிப்பு பயின்றோா் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி நாள் அக்டோபா் 31. மேலும் விவரங்களுக்கு, 044 2430 6617, 84285 75967, 98416 85515 ஆகிய எண்களை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Editor's Choice

குழந்தைகளுக்கு பல்வேறு காரணங்களால் காது கேளாமை குறைபாடு ஏற்படவாய்ப்பு உள்ளது. குழந்தைகளில் 5 சதவீதம் பேரும் பெரியவர்களில் 8.5 சதவீதம்பேரும் மூத்த குடிமக்கள் 50 சதவீதம் பேரும் காது கேளாமை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தட்டம்மை, மூளைக்காய்ச்சல், காதில் சீழ் வடிதல் அதன் தொடர்ச்சியான வியாதிகள், விபத்துகள், தலைக்காயம், அதிக சத்தம் உருவாகும் கலாசார விழாக்கள், இரவு நேர கிளப்புகள் மற்றும் பார்களில் ஏற்படும் சத்தங்கள், வயது முதிர்வு காரணமாகவும் காதுகளில் பாதிப்பு ஏற்பட்டு காது கேளாத நிலை ஏற்படும். காதில் மெழுகு மற்றும் காதில் தவறுதலாக போடப்படும் பொருள்கள் ஆகியவற்றால் காது கேளாமை ஏற்படுகிறது.

பெரும்பாலும் செவித்திறன் பாதிக்கப்பட்டு காது கேளாத நிலைமை பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களிடம் அதிகளவு உள்ளது. ஆகவே இதன் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து முறையான சிகிச்சை மற்றும் வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் அதன் தாக்கத்தை ஓரளவு குறைக்க முடியும்.

செவித்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஆரம்பப் பள்ளிப்படிப்பு தொடங்கி உயர் கல்வி கற்கும் வரை வெளியில் சொல்ல முடியாத வேதனையை அனுபவிக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்த வரை பெரும்பாலான காது கேளாமைக்கான காரணங்கள் 65 சதவீதம் தவிர்க்கப்படக் கூடிய பட்டியலில் இருக்கிறது.

அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் மருத்துவர்கள் நலத்திட்டங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மக்கள் நலனில் ஆர்வம் உள்ளவர்கள் ஒன்றிணைந்து காது கேளாமையால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறார்கள்.

இந்திய அரசும் தமிழக அரசும் செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிவரும் மருத்துவ உதவிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களது வாழ்வை மேம்படுத்துகிறது.

பிறக்கும் அத்தனை குழந்தைகளுக்கும் காது கேட்கும் திறன் சரியாக இருக்கிறதா என்பதை பரிசோதிக்க ‘ஓ.ஏ.இ’ கருவிகள் மூலமாகவும் அதில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் ‘பி.இ.ஆர்.ஏ’ டெஸ்ட் மூலமாகவும் அறிந்துகொண்டு தேவைப்படும் குழந்தைகளுக்கு ‘காக்ளியர் இம்ப்ளான்ட்’ கருவி பொருத்தி மறுவாழ்வு அளிக்கிறார்கள். இதனால் தேவையான வகையில் கருவிகள் வைத்து காது கேட்கும் திறனை செம்மைப்படுத்த முடியும்.

காதில் சீழ் வடியும் பள்ளிக் குழந்தைகளை பரிசோதித்து சிகிச்சை அளிப்பதில் மாநில அரசு கவனம் செலுத்துகிறது.

குழந்தை பருவத்தை தாண்டியவர்களுக்கு காதில் சீழ்வடிந்தால் அதற்கான மருத்துவசிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை தேவைக்கு ஏற்றபடி செய்தும் காதொலி வழங்கும் கருவிகள் பொருத்திக்கொள்ளலாம்.

தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு அதிக ஒலி பாதிப்பு இல்லாமல் தற்காத்துக் கொள்வது, தேசிய காது கேளாமை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் குழந்தைகளை பரிசோதனைக்கு உட்படுத்துவது, இதற்கென ஏற்படுத்தியுள்ள அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அனைவரும் ஒட்டுமொத்தமாக தவிர்க்கப்படக்கூடிய சத்தத்தை குறைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

நெருங்கிய ரத்த உறவு திருமணங்களை தவிர்த்து நம்மையும் நமது கேட்கும் திறனையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று முடிவு எடுப்போம்.

நன்றி – டாக்டர்.அ.ஜேசுதாஸ். முதல்வர், தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், திருச்சி

Editor's Choice

கோவை அரசு மருத்துவமனையில், 'காக்ளியர் இம்ப்ளான்ட்' அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குழந்தைகளுக்கு முதல்வர் காப்பீட்டு திட்டத்தில், மாற்றுக்கருவிகளும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.இதன்படி, ரூ.10 லட்சம் மதிப்பில் மாற்றுக்கருவிகள் வழங்கப்பட்டன.கோவை அரசு மருத்துவமனையில், பிறவியிலேயே செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு, ரூ.7 லட்சம் மதிப்பிலான காக்ளியர் இம்ப்ளான்ட் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.காப்பீட்டுத் திட்டத்தில் மேற்கொள்ளப்படும், அறுவை சிகிச்சையின் போது குழந்தைகளுக்கு செவித்திறன் கேட்பதற்கு, உள்பகுதியில் செவிச்சுருள் பதியம் என்ற கருவியும், வெளிப்பகுதியில் ரிசீவர் டிரான்ஸ்மிட்டர் கருவியும் பொருத்தப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகளால், ஒலியை கேட்க முடிகிறது.கோவை அரசு மருத்துவமனையில், 2013ம் ஆண்டு முதல் இதுவரை 218 குழந்தைகளுக்கு, காக்ளியர் இம்ப்ளான்ட் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்நிலையில், செவித்திறனுக்காக பொருத்தப்பட்டுள்ள கருவி பழுதடைந்த, 5 குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை, 32 குழந்தைகளுக்கு ரூ.35 லட்சம் மதிப்பில், மாற்று கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து, அரசு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை பிரிவு துறை தலைவர் அலிசுல்தான் கூறியதாவது:ஆரம்பத்தில் காக்ளியர் இம்ப்ளான்ட் அறுவை சிகிச்சை மட்டுமே, முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. கருவிகள் பழுதடைந்தால், புதிய கருவிகள் பெற முடியாத நிலை ஏற்பட்டது.ரூ.2 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை மதிப்புடைய இக்கருவியை, அனைவராலும் விலை கொடுத்து வாங்க முடியாத நிலை இருந்தது.இதனால், முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், மாற்றுக்கருவிகளும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளாக மாற்றுக்கருவிகள் வழங்குவதற்கும், முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

அதன்படி தற்போது, 5 குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான மாற்றுக்கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.காப்பீட்டுத் திட்டத்தில் மேற்கொள்ளப்படும், அறுவை சிகிச்சையின் போது குழந்தைகளுக்கு செவித்திறன் கேட்பதற்கு, உள்பகுதியில் செவிச்சுருள் பதியம் என்ற கருவியும், வெளிப்பகுதியில் ரிசீவர் டிரான்ஸ்மிட்டர் கருவியும் பொருத்தப்படுகிறது.

இதன் மூலம் குழந்தைகளால், ஒலியை கேட்க முடிகிறது.ஆரம்பத்தில் காக்ளியர் இம்ப்ளான்ட் அறுவை சிகிச்சை மட்டுமே, முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. கருவிகள் பழுதடைந்தால், புதிய கருவிகள் பெற முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது, 5 குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான மாற்றுக்கருவிகள் வழங்கப்பட்டுள்ளன

பக்கம் 15 / 21