Editor's Choice

உலகம் முழுவதும் பரவலாகவும் மிகச்  சிறப்பாகவும்  கொண்டாடப்படுவது காதலர் தினம். மேற்கத்திய பழக்கமாக இருந்தாலும் பின்னாளில் இந்த நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. முதன் முதலில் ரோமானிய மன்னர்களின் ஆட்சிக்காலத்தில்தான் வாலன்டைன்ஸ் தின கொண்டாடப்பட்டதற்கான சான்றுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ரோமாபுரி நாட்டில் கிளாடியுஸ் மிமி ஆட்சிக் காலத்தில் `திருமணம் செய்வதால் ஆண்கள் வீரத்தை இழக்க நேரிடும். அவர்கள் போரில் சரியாகப் பங்களிக்கமாட்டார்கள் நாட்டு மக்கள் யாரும் இனி திருமணம் செய்து கொள்ளக்கூடாது. ஏற்கெனவே திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தவர்கள் கூடத் திருமணம் செய்யக் கூடாது’ என்ற உத்தரவைப் பிறப்பித்தார். ஆனால், அரசரின் அறிவிப்பை மீறி பாதிரியார் வாலன்டைன் காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார். 

இந்தச் செய்தி நாடு முழுவதும் பரவியது. பல காதல் ஜோடிகள் அங்கு படையெடுத்தனர், அவர்களுக்கு வாலன்டைன்  திருமணம் செய்துவைத்தார். இந்தச் செய்தியை அறிந்த  மன்னர், பாதிரியாரைக் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டு, பின் அவருக்கு மரண தண்டனை விதித்தார். அவர் சிறையில் இருந்த காலகட்டத்தில் சிறைக் காவலரின் பார்வையற்ற மகள் அஸ்டோரியசுக்கும் காதல் மலர்ந்தது. தனக்குக் கண் பார்வை கிடைத்ததை போல, பல மடங்கு சந்தோஷத்தில் இருந்த அஸ்டோரியசுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. இவர்களின் காதல் விஷயம் தெரியவரவே, அவள் வீட்டில் சிறைவைக்கப்பட்டாள்.

வாலன்டைனுக்கு தண்டனை நிறைவேற்றும் நேரம் வந்தது. தண்டனை நிறைவேறுவதற்கு முன் தன் காதலிக்கு ஒரு கடிதம் எழுதினார்.  அந்தக் கடிதத்தின் கடைசியில் ``உன்னுடைய வாலன்டைனிடமிருந்து" என்ற வார்த்தை எழுதப்படட்டிருந்தது. அவர் கொல்லப்பட்ட அந்த நாள் கி.பி.270, பிப்ரவரி 14. இந்த நாளைத்தான் உலகம் முழுவதும் பின்னாளில் வாலன்டைன்ஸ் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 

இந்த வரலாற்றுக்குப் பல்வேறு கதைகளும் உண்டு. ஆனால், பெரும்பாலும் பரவலாகப் பேசப்படுவது இந்தக் கதைதான். இதற்கான வரலாற்றுச் சான்றுகள் இதுவரை சரிவர கிடைக்கப்படவில்லை 

ஏழு நாள் கொண்டாட்டம்... வாலன்டைன் டே வாரம் 

ரோஸ் டே : பிப்ரவரி-7

இது, தங்களுக்குப் பிடித்தவர்களுக்கு ரோஜாவைக் கொடுத்து ஒருவர் தன் அன்பை, காதலை வெளிப்படுத்தும் நாள். காதலை வெளிப்படுத்த சிவப்பு ரோஜா, நட்பை வெளிப்படுத்த மஞ்சள் ரோஜா, சமாதானத்துக்கு வெள்ளை ரோஜா கொடுப்பது வழக்கம்.

ப்ரப்போஸ் டே :பிப்ரவரி-8

நம் மனதுக்கு மிக நெருக்கமானவரிடம் நமது அன்பை, காதலை வெளிக்காட்டும் நாளாகும். 

சாக்லேட் டே : பிப்ரவரி-9

இந்த நாளில் நமக்கு முக்கியமானவர்களுக்கு சாக்லேட் பரிசளித்து நமது அன்பை, பாசத்தை, காதலை அவர்களிடத்தில் வெளிப்படுத்தலாம். 

டெடி டே : பிப்ரவரி-10

இந்த நாளில் டெடி பியர் பொம்மையைப் பிடித்தவர்களுக்குப் பரிசளித்து அன்பை வெளிப்படுத்தலாம். பெரும்பாலும் இந்த நாளில் காதலர்கள் மட்டுமல்லாது நண்பர்கள், நமக்குப் பிடித்தவர்கள், உடன் பிறந்தவர்கள் என்று பலரும் டெடி பியர் பொம்மைகளைப் பரிசளிப்பார்கள். 

பிராமிஸ் டே : பிப்ரவரி-11

இந்த நாளுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. நமக்குப் பிடித்தவர்களிடம் அந்த உறவின் தன்மையையும், அந்த உறவுக்கான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தி, உறவின் உன்னதத்தை உறுதிப்படுத்தும் நாள். 

ஹக் டே : பிப்ரவரி-12

உங்களின் அன்பை வெளிப்படுத்த உங்கள் வாழ்க்கையின் மிகமுக்கியமானவர்களை அரவணைக்கும் நாள். இந்த நாளில் தங்களின் வாழ்க்கை துணையை, நண்பர்களை, குடும்ப உறுப்பினர்கள் என்று அனைவரிடத்திலும் நீங்கள் உங்கள் அன்பை வெளிக்காட்டலாம். 

கிஸ் டே : பிப்ரவரி-13

முத்தம் அன்பின் வெளிப்பாடு. இந்த முத்த தினத்தில், தங்களின் நெருக்கமானவருக்கு முத்தம் கொடுத்து அவர்களின் இந்த நாளைச் சிறப்பாக்குங்கள். 

வாலன்டைன்ஸ் டே : பிப்ரவரி-14

ஏழு நாள் கொண்டாட்டத்தின் இறுதி நாள் இது. உலகின் அதிகப்படியான மக்களால் கொண்டாடப்படும் நாளும் இதுவே. வாலன்டைனை நினைவு கூறும் வகையில் இந்த நாள் கொண்டாடப்பட்டும். காதலருக்கு இந்த நாள் மிக முக்கியமான நாள். உங்கள் காதலை வெளிப்படுத்த இதுவே சிறந்த நாள். 

வாலன்டைன்ஸ் டே அன்று எந்த நிற ஆடை அணிந்தால் என்ன அர்த்தம்...

பச்சை:

உங்கள் காதலுக்காகவே காத்திருக்கிறேன்.

நீலம்:

நான்  இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. யார் வேண்டுமானாலும் காதலைச் சொல்லலாம்.

மஞ்சள்:

ஏற்கெனவே காதலில் தோல்வி அடைந்தவர்.

கறுப்பு:

காதலில் எனக்கு விருப்பம் இல்லை. சொல்லும் காதல் நிராகரிக்கப்படும்.

ஆரஞ்சு:  

இன்று என் காதலை சொல்லப்போகிறேன்.

பிங் நிற உடை :

காதல் ஏற்றுக்கொள்ளப்படும்.

கிரே நிற உடை:  

காதலில் ஆர்வம் இல்லை.

வெள்ளை நிற உடை:  

ஏற்கெனவே காதலிக்கிறேன்.

Editor's Choice

வரும் நிதியாண்டில், முன்கூட்டியே மின் கட்டணம் செலுத்துவோருக்கு, 2.70 சதவீதம் வட்டி வழங்குமாறு, மின் வாரியத்திற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வீடுகளில், இரு மாதங்களுக்கு ஒரு முறை, மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது. கணக்கு எடுத்த, 20 நாட்களுக்குள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும்; இல்லையேல், மின் வினியோகம் துண்டிக்கப்படும். இதைத் தவிர்க்க வெளியூர் செல்வோர், வெளியூரில் வசிப்போர், தங்களுக்கான மின் கட்டணத்தை, உத்தேச அடிப்படையில், முன்கூட்டியே செலுத்தலாம். அவ்வாறு செலுத்தப்படும் கட்டணத்திற்கு, ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும், ஆண்டு வட்டியை, மின் வாரியம் வழங்குகிறது. அதன்படி, வரும் நிதியாண்டில், 2.70 சதவீதம் வட்டி வழங்க, மின் வாரியத்திற்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது, அடுத்த மாதத்துடன் முடியும் நடப்பு நிதியாண்டிற்கு, 3.25 சதவீதம் என்றளவில் உள்ளது.

Editor's Choice

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுக்கொண்டதையொட்டி எழுந்த ஆரவாரங்களைத் தாண்டி, கரோனோ பெருந்தொற்றைச் சமாளிக்கவும் தற்போதைய சிக்கல்களிலிருந்து பொருளாதாரத்தை விடுவிக்கவும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற விமர்சனங்களே அளவில் மிகுந்திருந்தன. துயர்மிகுந்த இத்தகைய அசாதாரணமான காலங்களில் இத்தகைய விமர்சனங்களைத் தவிர்க்கவும் முடியாது. அதே நேரத்தில், ஜனவரி 6 அன்று ட்ரம்ப் ஆதரவாளர்களால் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலைக் குறித்து பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள் உரிய முக்கியத்துவத்தைக் கொடுக்கவில்லை அல்லது அதைப் பொருட்படுத்தவே இல்லை என்பது சற்றே ஏமாற்றமளிக்கின்றது.

பிளவுபடுத்தும் உணர்ச்சிகள், ஒழுங்கின்மை மற்றும் வன்முறைகள் அதிகரித்துவருகையில், அரசு செயல்படாத நிலைக்குக் கூட்டாட்சித்துவம் என்ற சாக்குப்போக்குகளை இன்னும் நீண்ட காலத்துக்குச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களும் ஒன்றிணைந்து பைடன் அரசாங்கத்தின் கரங்களை வலுப்படுத்த வேண்டும். அதிகார மையத்தில் நிகழும் மாற்றங்களின்போது வெள்ளையின ஆதிக்கவாதிகளால் தூண்டிவிடப்படும் பயங்கரவாதச் செயல்களை முழுமையாகக் களைந்தெறிவதில் பைடனின் நிர்வாகத்துக்கு மிகப்பெரும் சவால்கள் காத்திருக்கின்றன. உலக நாடுகளுக்கிடையில் தனக்குள்ள மரியாதையை அமெரிக்கா தக்கவைத்துக்கொள்ள வேண்டும் எனில், உள்நாட்டுப் பயங்கரவாதத்தின் வேர்களை அது களைந்தெறிய வேண்டும், அவை வளர்வதற்கு அனுமதிக்கக் கூடாது.

பொறுப்பேற்றிருக்கும் புதிய அரசானது, இந்தத் தவறுகளையெல்லாம் எப்படி சரிசெய்யப்போகிறது என்பதை வைத்துத்தான் அதன் வெற்றி மதிப்பிடப்படும். குறைந்தபட்சம், சிறுபான்மையினருக்கு எதிராக அதிலும் குறிப்பாக ஆப்பிரிக்க- அமெரிக்கர்களுக்கு எதிராகப் பாரபட்சமாக நடந்துகொள்வதாக பரவலாக உணரப்படும் குற்றவியல் நீதி முறையின் தவறுகள் சரிசெய்யப்பட வேண்டும். அமெரிக்கச் சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மைகளை நீக்குவதற்குப் பாடுபடுவதாக பைடன் அளித்த உறுதிமொழிகளில் இதுவும் உள்ளடங்க வேண்டும். அவரது தொடக்க உரையில், கறுப்பு-வெள்ளையினத்தவரிடையே வளர்ந்துவரும் பிளவுகளைக் குறித்து அவர் குறிப்பிட்டு எதையும் சொல்லவில்லை.

அந்நாட்டிலுள்ள ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் பாதுகாப்பு அமைப்புகளால் குறிப்பாக காவல் துறையினரால் பாரபட்சத்துடன் நடத்தப்படுகின்றனர் என்பதே அங்கு மிகவும் பரவலாக நிலவிவரும் கருத்து. காவல் துறையினராலும் சிறை அதிகாரிகளாலும் பாரபட்சத்துடன் நடத்தப்பட்ட பெரும்பாலான ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் ஆழ்ந்த அவநம்பிக்கையை அலட்சியம் செய்யாமல் அது குறித்து பைடன் பேசுவது மட்டுமே இச்சிக்கலுக்குத் தீர்வாக அமையும்.

லாஸ் ஏஞ்செல்ஸ் நகரத்தின் மையப்பகுதியில் 1991-ல் ராட்னி கிங் தாக்கப்பட்டதைப் போல, துரதிருஷ்டத்துக்கு ஆளான குடிமக்களின் மீது காவல் துறையும் சிறைத் துறையும் மூர்க்கத்தனமாக நிகழ்த்திய அட்டூழியங்களின் ஆழமான வடுக்களைச் சுமந்து நிற்பதுதான் அமெரிக்காவின் குற்றவியல் நீதிமுறை வரலாறு. அத்தகைய தொடர் நிகழ்வுகளில் ஒன்றாக மிகவும் சமீபத்தில் நடந்ததை யாரால் மறந்திருக்க முடியும்? கடந்த ஆண்டு மே 25 அன்று கள்ள நோட்டைக் கொடுத்து சிகரெட் வாங்குவதற்கு முயல்கிறார் என்று கடைக்காரர் கொடுத்த தகவலையடுத்து அங்கு வந்த மினியாபொலிஸ் காவலர் ஒருவரால் 46 வயதான ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டதையடுத்து நாடு முழுவதும் நடந்த போராட்டங்கள், சராசரி ஆப்பிரிக்க- அமெரிக்கர்களுக்கும் காவல் துறைக்கும் இடையேயான உறவு சரிசெய்யப்பட முடியாத அளவில் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.

அமெரிக்காவின் தற்போதைய மக்கள்தொகை 32 கோடி. அவர்களில் ஆப்பிரிக்க- அமெரிக்கர்களின் எண்ணிக்கை மட்டும் ஏறக்குறைய 4.5 கோடி. மக்கள்தொகையில் கணிசமான பங்கு வகித்தாலும் அச்சமூகத்திற்குள் நிலவும் மோசமான வறுமையானது குற்றவியல் நீதியமைப்பில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. குற்றங்கள் பொதுவாக பொருளாதார நிலைகளின் விகிதப்படியே அமையும்- எப்போதுமே அப்படியில்லை - என்று நம்பப்படுகிறது.

கடந்து வந்த காலங்களில் போதுமான புள்ளிவிவரங்களைக் கொண்டு நிரூபிக்கப்படவில்லை என்றாலும்கூட சராசரியாக வெள்ளையினத்தவர்களைக் காட்டிலும் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களே அதிகமாகக் குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக ஒரு கருத்து செல்வாக்கு பெற்றுவிட்டது. அதிக எண்ணிக்கையிலான ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் சிறையில் இருப்பதை விளக்குவதற்கு இக்கருத்து அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகிறது. தற்போதைய அதிகாரபூர்வமான புள்ளிவிவரங்களின்படி, சிறைவாசிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டபோதிலும் 2019 இறுதியில் இன்னமும் ஒரு லட்சம் கறுப்பினக் குடிமக்களில் 1,096 ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் சிறையில் இருக்கிறார்கள். ஒப்பீட்டளவில், வெள்ளையினத்தவரின் விகிதம் வெறும் 214 மட்டுமே.

அனைத்து வகையான குற்றத் தடுப்பு நடவடிக்கைகளும் தங்களைக் குறிவைத்தே மேற்கொள்ளப்படுவதாக ஆப்பிரிக்க- அமெரிக்கர்கள் தீவிரமாக நம்புகிறார்கள். கண்டிப்புடன் கூடிய காவல் துறையின் மீது நம்பிக்கை கொள்பவர்கள் இந்தச் சிக்கலுக்கு முகம்கொடுத்தாக வேண்டும். கடைவீதிகளில் ஒழுங்கின்மைப் பிரச்சினைகளைக் கையாளும்போது பைடனின் அரசு இந்த விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். காவல் துறை என்பது மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியது அவசியமானது. அதே வேளையில், காவல் துறையின் தவறுகளைக் கூட்டாட்சி அரசு வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கவும் கூடாது.

கூட்டாட்சி அரசும் மாநில அரசுகளும் மற்றொரு பிரச்சினையையும் எதிர்கொண்டுவருகின்றன. ஆட்சி நிர்வாகத்தில் பன்மைத்துவம் வேண்டும் என்பதில் பைடன் நம்பிக்கை கொண்டிருக்கிறார். இவ்விஷயத்தில், காவல் துறைக்கும் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பல பதிற்றாண்டுகளாக அனைத்துவகையான முயற்சிகளும் எடுக்கப்பட்டாலும்கூட, இன்னமும் காவல் துறை என்பது அங்கு பெரும்பகுதி வெள்ளையினத்தவரின் ஆதிக்கத்திலேயே தொடர்கிறது. ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் சில காரணங்களுக்காகக் காவல் துறை பணிகளில் சேர்வதை விரும்பவில்லை. அவற்றில் முக்கியமானது, வெள்ளையினத்தைச் சேர்ந்த உயரதிகாரிகளால் தாங்கள் தொந்தரவுகளுக்கு உள்ளாகலாம் என்ற அச்சமே. இந்நிலையில், அமெரிக்க நாட்டின் பன்மைத்துவத்தைப் பிரதிபலிக்கும்வகையில், காவல் துறையிலும் மாற்றங்களை உருவாக்குவதே வெற்றிக்கான மந்திரம்.

அமெரிக்காவில் உள்ள குற்றவியல் நீதி அமைப்புகளுக்குத் தேவையான சீர்திருத்தங்களின் பட்டியலை விரிவுபடுத்திக்கொண்டே போகலாம் என்றாலும் அவற்றில் மிகவும் உடனடியாகச் செய்யப்பட வேண்டியது, ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் பார்வையில் காவல் துறையினர் மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பதே. எளிதாகச் சொல்லிவிடலாம் என்றாலும் அதைச் செய்வது கடினம். இரு கட்சிகளும் கருத்தொருமித்து இவ்விஷயத்தை அணுகும்பட்சத்திலேயே அதை சாத்தியப்படுத்த இயலும்.

 

Editor's Choice

எல்லை பிரச்னை, விவசாயிகள் பிரச்னை உள்ளிட்ட பல பிரச்னைகளை சுட்டிக்காட்டி ஆளும் மத்திய பா.ஜ. அரசை விமர்சித்து, கோழை பா.ஜ., என்ற ஹேஷ்டாக் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.

விவசாய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லியில் விவசாய சங்கத்தினர் தொடர்ந்து 75 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடத்திய 11 சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. விவசாயிகள் போராட்டம் சமூகவலைதளமான டுவிட்டரிலும் தினம் ஒரு ஹேஷ்டாக்கில் டிரெண்ட் ஆகி வருகிறது. அந்தவகையில் #CowardBJP என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆகிறது.

இந்த ஹேஷ்டாக்கில் பல பிரச்னைகளை சுட்டிக்காட்டி டுவிட்டர் தளவாசிகள் ஆளும் மத்திய பா.ஜ., அரசை விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக அண்டை நாடான சீனா எல்லையில் ஆக்கிரமித்து வருகிறது. ஆனால் அவர்களை தடுக்காமல் இங்குள்ள விவசாயிகள் போராட்டத்தை தடுக்க சாலைகளில் தடுப்புவேலிகள், தற்காலிக தடுப்பு சுவர்கள் எழுப்பியதை சுட்டிக்காட்டி விமர்சிக்கின்றனர்.

விவசாயிகளுடன் பேச தயார் என பிரதமர் மோடி கூறினார் ஆனால் இதுவரை பேச முன்வரவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்கின்றனர். மேலும் எல்லையில் படைகள் வாபஸ் பெறப்பட்டதை நேற்று காங்கிரஸின் ராகுல் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்தார். இதை சுட்டிக்காட்டியும் பா.ஜ., அரசை விமர்சித்து வருகின்றனர். சீனாவிற்கு பயந்து எல்லையில் படைகளை வாபஸ் பெற்றது. விவசாயிகளை நேரடியாக எதிர்க்க முடியாமல் கோழைத்தனமாக செயல்படுகிறது என தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். டுவிட்டரில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சிலர் விஷமங்களை பரப்புகின்றனர். அவர்களின் டுவிட்டர் கணக்கை முடக்கியதை கூட சுட்டிக்காட்டி கோழை பா.ஜ. அரசு என சிலர் விமர்சித்து வருகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலை, பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்பனை, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கும் முடிவு உள்ளிட்ட பல பிரச்னைகளை சுட்டிக்காட்டி பா.ஜ., அரசை விமர்சித்து வருகின்றனர். இதனால் டுவிட்டரில் #CowardBJP என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.

இதேபோல் தமிழக வரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கம் போல் #GoBackModi என்ற ஹேஷ்டாக்கும் அதன் உடன் #GoBackCowardModi என்ற ஹேஷ்டாக்கும் டிரெண்ட் ஆகின.

இதனிடையே, சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்பி, வெறுப்புணர்வை துாண்டுவதை, தடுப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க கோரிய மனு மீது, மத்திய அரசு மற்றும் 'டுவிட்டர்' இந்தியா நிறுவனம் பதில் அளிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூகத்தில் உயர் பதவியில் உள்ள அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை பிரபலங்களின் பெயரில், நுாற்றுக்கணக்கான போலி சமூக வலைதள கணக்குகள் உலவுகின்றன.அவர்களின் புகைப்படங்களுடன் இயங்கிவரும் இந்த கணக்குகள் வாயிலாக பகிரப்படும் பொய்யான தகவல்களை, உண்மை என, மக்கள் கருதுகின்றனர். சமீபத்தில், குடியரசு தின விழா அன்று நடந்த கலவரத்தில் இருந்து, நாட்டின் பல்வேறு கலவரங்களுக்கும், பொய்யான பிரசாரங்கள் காரணமாக இருந்துள்ளன.

பொய்யான தகவல்கள் வாயிலாக வெறுப்புணர்வை துண்டுவது, போலி கணக்குகளை துவங்கி, நாட்டில் கலகத்தை ஏற்படுத்தும் உள்ளடக்கங்கள் மற்றும் விளம்பரங்களை ஒழுங்குபடுத்துவதற்கு வழிமுறைகள் இயற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு தொடர்பாக பதில் அளிக்கும்படி, மத்திய அரசுக்கும், 'டுவிட்டர்' இந்தியா நிறுவனத்துக்கும், நீதிமன்றம் உத்தரவிட்டது.

Editor's Choice

தான் பாசமாக வளர்த்த நாய், தனக்குப் பிறகு கஷ்டப்படக் கூடாது என்பதற்காக, 36 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை நாய் மீது எழுதி வைத்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த பாசக்கார நாய் உரிமையாளர் ஒருவர். நாய் உரிமையாளர் கடந்த ஆண்டே இறந்துவிட்டாலும், சொத்து மதிப்பு இன்னும் மதிப்பிடப்பட்டு வருவதால், 36 கோடி ரூபாய்க்கு சொந்தமான நாய் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

அமெரிக்காவின் டென்னிசிஸ் பகுதியில் நாஷ்வில்லே பகுதியைச் சேர்ந்தவர் பில் டோர்ரிஸ். 84 நான்கு வயதான பில் டோர்ரிஸ் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால், தனது தொழிலில் வெற்றிகரமானவராகத் திகழ்ந்தார். சுமார் ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு அளவுக்கு சொத்துள்ள பில் டோரிஸ் யாரையும் தத்தெடுத்து வளர்க்கவில்லை. அவருக்கு நண்பன், சொந்தம் என்று சொல்லிக்கொள்ள இருந்தது லுலு எனும் பார்டர் கோலி இன நாய் மட்டுமே.
 
பில் டோர்ரிஸ் எங்கு சென்றாலும் லுலுவுடன் செல்வது தான் வழக்கம். ஒரு நிமிடம் கூட லுலுவை விட்டு அவர் பிரிந்திருக்கமாட்டார். அந்த அளவுக்கு லுலுவை நேசித்தார் பில் டோர்ரிஸ்.
 
84 வயதான, முதுமையால் வாடிய பில் டோர்ரிஸ், தனது இறுதிக்கால, நெருங்கியதை உணர்ந்ததும் தான் நேசித்த லுலு, தன் காலத்துக்கு பிறகு துன்பப் படக்கூடாது என்பதற்காக 5 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் அனைத்தையும் லுலு மீது உயில் எழுதிவைத்தார். தான் எழுதிவைத்த உயிலில், “இந்த உயில் லுலுவின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கானது. எனது சொத்து அனைத்தையும் லுலு பெயருக்கே எழுதிவைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
 
தற்போது, லுலுவைப் பார்த்துக்கொள்ள அறக்கட்டளை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அந்த அறக்கட்டளை லுலுவுக்குத் தேவையானதை பில் டோர்ரிஸின் சொத்துக்கள் மூலம் செய்து வருகிறது.
 
பில் டோர்ரிஸின் நிலம் மற்றும் பண்ணை வீட்டின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று அறக்கட்டளை மூலம் மதிப்பிடப்பட்டு வருகிறது. அந்த பணி முடிந்ததும் லுலுவின் பெயரில் உள்ள சொத்து மதிப்பு இன்னும் அதிகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும், பில் டோர்ரிஸ் எங்கெங்கு முதலீடு செய்துள்ளார் என்றும் தேடி வருகின்றனர்.
Editor's Choice

'கலப்பு திருமணங்கள் வாயிலாக, ஜாதி, மதங்களுக்கு இடையிலான பதற்றங்கள் பெரும் அளவில் குறையும்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண், வேற்று ஜாதியை சேர்ந்த இளைஞரை காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி, சமீபத்தில் திருமணம் செய்தார். பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். பெண் மற்றும் அவரது கணவர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, பெண் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது : படித்த இளைஞர்கள், இளம்பெண்கள், தங்கள் விருப்பப்படி இணையை தேர்ந்தெடுத்து திருமணம் செய்கின்றனர். இதன் வாயிலாக, ஜாதி, மதத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த சமூகத்தில், தற்போது மிகப்பெரிய மாற்றம் உருவாக துவங்கியுள்ளது. கலப்பு திருமணங்கள் அதிகரிப்பதன் வாயிலாக, ஜாதி, மதங்களுக்கு இடையிலான பதற்றங்கள் வெகுவாக குறையும்.

கலப்பு திருமணங்கள் செய்யும் இளைய சமூகத்தினருக்கு, மூத்தவர்களிடம் இருந்து மிரட்டல்கள் வருகின்றன. அதுபோன்ற நேரங்களில், நீதிமன்றம் தலையிட்டு, இளைய தலைமுறையினரை காக்க வேண்டிய நிலை உள்ளது. இது போன்ற புகார்களை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து, போலீசாருக்கு வழிகாட்டுதல்களும், பயிற்சிகளும் அளிக்கப்பட வேண்டும் என கூறினர்

பக்கம் 39 / 74