Editor's Choice
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மெல்ர்போன் நகரில் 5 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தனிமைப்படுத்தபட்ட ஓட்டலில் தொற்று பாதிப்பு பரவியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, விக்டோரியா மாகாணம் முழுவதும் 5 நாட்கள்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
 
மெல்போனில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித்தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது, போட்டி தொடர்ந்து நடைபெறுமா? என்ற கேள்விகளை எழுப்பியது.
 
இந்த நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர்ந்து நடைபெற அனுமதிக்கப்படும் என்று விக்டோரியா மாகாண அரசு அறிவித்துள்ளது. அதேவேளையில்  ரசிகர்கள் இன்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
Editor's Choice

பிபிசி உலக செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சீனா அந்நாட்டில் தடை விதித்திருப்பதாக வியாழக்கிழமை இரவு அறிவித்திருக்கிறது.

பிரிட்டனில் அதன் ஊடகம் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான ஆஃப்காம் (Ofcom), சீனா குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க் (சிஜிடிஎன்) என்ற சீன அரசு ஒளிபரப்பு நிறுவனத்தின் ஒளிபரப்பு உரிமம் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டதன் தொடர்ச்சியாக, பிபிசி மீதான சீனாவின் உள்நாட்டு ஒளிபரப்பு தடை அமைந்திருக்கிறது.

சிஜிடிஎன் உரிமத்தை ஸ்டார் சீனா மீடியா என்ற நிறுவனம் விதிகளை மீறி பெற்றிருப்பதாக தெரிய வந்ததையடுத்து அதன் ஒளிபரப்புக்கு ஆஃப்காம் இந்த மாத தொடக்கத்தில் கட்டுப்பாடுகளை விதித்தது.

மேலும், பிரிட்டன் குடியுரிமை பெற்றவரும் பத்திரிகையாளருமான பீட்டர் ஹம்ப்ரே, சீன சிறையில் இருந்த விவகாரத்தில் அவரது கட்டாயப்படுத்தப்பட்ட ஒப்புதலை ஒளிபரப்பியதாகவும் சிஜிடிஎன் மீது சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில், சீனாவில் பிபிசி உலக சேவை தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு தடை விதித்திருக்கும் சீன அரசின் முடிவு குறித்து அதன் திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் வானொலி தொடர்பான நிர்வாகம், "பிபிசியின் சீனா தொடர்புடைய சில தகவல்கள் - உண்மையாகவும் வெளிப்படையாகவும் இருப்பது மற்றும் சீன தேசிய நலன்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்ற தங்கள் நாட்டு ஒலிபரப்பு வழிகாட்டுதல்களை மீறும் வகையில் உள்ளன," என்று தெரிவித்திருக்கிறது.

இதே வேளை, சீனாவில் பிபிசி உலக சேவை ஒளிபரப்பு செய்ய மேலும் ஓராண்டு அவகாசம் கேட்டு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது என்று அந்த நிர்வாகம் கூறியிருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சீன அரசுத்துறையின் நடவடிக்கை தொடர்பான முடிவு ஏமாற்றம் அளிக்கிறது. சர்வதேச அளவில் உலக செய்திகளை வெளிப்படையாகவும் பக்க சார்பற்றும் அச்சமன்றியும் வெளியிடுவதில் உலகின் நம்பகமான சர்வதேச ஊடக ஒளிபரப்பாளராக பிபிசி உள்ளது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிபிசி உலக சேவைக்கு தடை விதித்துள்ள சீன அரசின் நடவடிக்கையை பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் டோமினிக் ராப் விமர்சித்துள்ளார்.

"ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் சீனாவின் நடவடிக்கை ஏற்க முடியாதது," என அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்காவும் கண்டித்துள்ளது. சீனாவில் ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் வகையிலான விரிவான பிரசாரத்தின் அங்கமாக அந்நாட்டு அரசின் நடவடிக்கை கருதப்படுவதாக அமெரிக்கா கூறியுள்ளது.

சீனாவில் வெளிநாட்டு ஊடகங்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்படுவது புதியது கிடையாது. அங்கு ஏற்கெனவே 2000ஆம் ஆண்டில் அமெரிக்க ஊடகங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்களை அந்நாட்டு அரசு வெளியேற்றியிருக்கிறது. சீனாவில் பிபிசி உலக சேவையின் இன்டர்நெட் மற்றும் அதன் செல்பேசி செயலி ஏற்கெனவே முடக்கப்பட்டிருக்கின்றன.

 
Editor's Choice
புலியை கொன்றவருக்கு பரிசு வழங்கிய மராட்டிய அதிகாரிகளுக்கு அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மராட்டிய மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் உள்ள போராடி வனப்பகுதியில் வசித்துவந்த புலி மனிதர்களை குறிவைத்து வேட்டையாடி வந்தது. இந்த புலியின் கோரப்பசிக்கு 13 பேர் இரையாகினர். இதனால் மனித உயிருக்கு பங்கம் விளைவிக்கும் அந்த புலியை கொல்லவேண்டும் என்ற வேண்டுகோள் வலுத்தது. இந்தநிலையில் வனப்பகுதியில் குட்டிகளுடன் சுற்றித்திரிந்த அவ்னி என்ற பெண் புலி தான் மனிதர்களை வேட்டையாடும் புலி என வனத்துறையினர் சந்தேகித்தனர். இதன்படி கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் 2-ந் தேதி வனத்துறையினர் அந்த புலியை சுட்டுக்கொன்றனர். மேலும் இந்த புலியை சுட்டு கொன்றவருக்கு விருதும் வழங்கப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் நல ஆர்வலர் சங்கீதா தோக்ரா என்பவர் மும்பை ஐகோர்ட்டில் வழங்கு தொடர்ந்தார். ஆனால் அவர் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட் நாடினார். இந்த வழக்கு தலைமை நீதிபதி போப்டே மற்றும் நீதிபதிகள் ஏ.எஸ். போபன்னா மற்றும் வி.ராமசுப்பிரமணியன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சுட்டுக்கொல்லப்பட்ட பெண் புலி அவ்னி மனிதர்களை கொல்லவில்லை என பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளதாக சங்கீதா தோக்ரா வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “அந்த மிருகம் மனிதனை உண்டதா? இல்லையா? என்பதை எப்படி பிரேத பரிசோதனைல் கண்டுபிடிக்க முடியும்” என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், ஒரு விலங்கு மனிதனை தின்றதா என்பதை அதன் முடி, நகங்கள் மற்றும் குடலில் உள்ள டி.என்.ஏ. அறிக்கையில் இருந்து அறிய முடியும். இந்த டி.என்.ஏ. 6 மாதங்கள் மேலாக நீடிக்கும்.
 
அதுமட்டும் இன்றி கொல்லப்பட்ட பெண் புலியின் வயிறு காலியாக இருந்தது. புலியை கொன்றவருக்கு அரசால் விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதை கொண்டாடவும் செய்தனர். இது நீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகும்” என தெரிவித்தார்
 
இதையடுத்து கொண்டாட்டத்தை எங்களால் கட்டுப்படுத்த முடியாது என கூறிய நீதிபதிகள், அதேநேரம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி புலியை கொன்றவர்களுக்கு வெகுமதி அளித்ததற்காக மராட்டிய முதன்மை செயலாளர் விகாஸ் கார்கே மற்றும் 8 அதிகாரிகளுக்கு கோர்ட்டு அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
Editor's Choice

வங்கிகள் கடன் வழங்க மறுப்பதால், மின்சார வாகனங்களை விற்பதில் சிரமங்கள் ஏற்படுவதாக, மின் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கவலை தெரிவிக்கின்றன.

கடனை திருப்பி செலுத்தாதபட்சத்தில், மின்சார வாகனத்தின் எஞ்சிய மதிப்பு, மறுவிற்பனை மதிப்பு ஆகியவற்றை கணக்கிடுவது சிரமம் எனக் கருதி, வங்கிகள் கடன் வழங்க மறுப்பதாகவும் அவை குற்றஞ்சாட்டுகின்றன.

குறிப்பாக, மின்சார ரிக்‌ஷா, சரக்கு வாகனங்கள் போன்றவற்றை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து, இப்பிரச்னை முன்வைக்கப்படுகிறது.

வழக்கமான வாகனங்களுக்கு ஆகும் எரிபொருள் மற்றும் பராமரிப்புகளுக்கான செலவை விட, மின்சார வாகனங்களுக்கு குறைவாக இருப்பது தான்.ஆனால், இந்த வாய்ப்பை, மின்சார வாகன விற்பனையாளர்களால் நன்றாக பயன்படுத்திக் கொள்ள முடிய வில்லை. காரணம், வங்கிகள் கடன் கொடுக்க தயங்குவது தான்.

இதன் காரணமாக வாடிக்கையாளர்கள், வாகனத்தை வாங்காமல் சென்றுவிடுகிறார்கள் அல்லது வங்கிகளை விட்டுவிட்டு, கூடுதல் வட்டிக்கு, வேறு இடங்களில் கடன் பெற்று வாகனங்களை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இந்தியாவில் கிட்டத்தட்ட, 90 சதவீத வாகனங்கள், வங்கி உள்ளிட்டவற்றின் மூலம் கடன் பெற்றே வாங்கப்படுகின்றன. ஆனால், மின்சார வாகனங்களில் நிலை வேறு மாதிரி இருக்கிறது. மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்கள், கார்கள் போன்றவற்றை வாங்குபவர்கள், எளிதாக, பிணையம் மூலம் கடன் பெற்று விடுகிறார்கள்.

மேலும் கார்கள், இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் பெரும்பாலான நிறுவனங்களிடம், சொந்தமாக பைனான்ஸ் நிறுவனங்கள் இருக்கின்றன. அதனால், இந்த பிரிவில் பிரச்னைகள் குறைவு. ஆனால், வர்த்தக வாகனங்கள் கதை வேறு. இத்தகைய வாகனங்களை வாங்குபவர்களுக்கு போதுமான வருமானம் இருக்காது; அவர்களால் கடனை திருப்பிச் செலுத்த முடியாது என்பது போன்ற எண்ணம் வங்கிகளுக்கு இருக்கிறது.

கடன் வழங்கிய இரண்டு ஆண்டுகளுக்கு பின், வாகனத்தின் நிலை எப்படி இருக்கும், பேட்டரி எப்படி இருக்கும் என்பது குறித்து வங்கிகளால் சரியாக கணிக்க இயலவில்லை.

இதனால் மறு விற்பனை செய்யும் போது, எவ்வளவு தொகைக்கு விற்பனை ஆகும் என்பதையும் அவர்களால் கணிக்க முடியவில்லை. இவை போன்ற காரணங்களால், வங்கிகள் மின்சார வாகனங்களுக்கு கடன் வழங்க தயங்குகின்றன.

Editor's Choice

ஐபிஎல்-14 வது சீசன் வரும் ஏப்ரல் மாதம் இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான ஐபிஎல் அணிகள் தங்கள் வீரர்களை ஏலத்தில் எடுக்கவுள்ளது.

எனவே இந்த ஏலம் வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதற்காக மொத்தம் சுமார் 1114 வீரர்கள் பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இவர்களில் சுமார் 292 பேர் மட்டுமே இறுதி ஏலப் பட்டியலுக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் இந்திய வீரர்கள் 164 பேர் ஆவர், மீதமுள்ள 128 பேர் வெளிநாட்டினர். ஹர்பஜன் சிங், ஸ்டீவன் ஸ்மித் உள்ளிட்ட வீரர்களுக்கு ரூ.2கோடி அடிப்படையாக உள்ளது.

உமேஷ் யாதவ், விகாரி உள்ளிட்ட 11 பேர் ரூ.1 கோடி பட்டியலில் உள்ளனர் .. இந்த ஏலத்தில் ஸ்ரீசந்தின் பெயர் இடம்பெறவில்லை.

Editor's Choice

உலகளவிலான உருக்கு நிறுவனமான, ‘ஆர்செலார் மிட்டல்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக, ஆதித்யா மிட்டல் பொறுப்பேற்க இருப்பதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது தலைமை செயல் அதிகாரியாகவும், நிறுவனத்தின் தலைவராகவும் இருக்கும் லட்சுமி மிட்டல், நிர்வாக தலைவராக பொறுப்பேற்கிறார். ஆதித்யா மிட்டல், லட்சுமி மிட்டலின் மகன் ஆவார். இவர், தற்போது நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

ஆர்செலார் மிட்டல் நிறுவனத்தை, கடந்த, 1976ம் ஆண்டில் லட்சுமி மிட்டல் நிறுவினார். இதையடுத்து, தற்போது உலகின் மிகப் பெரிய உருக்கு நிறுவனங்களில் ஒன்றாக உயர்ந்து உள்ளது. நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்கும் ஆதித்யா மிட்டல், ‘உலகின் மிகப் பெரிய உருக்கு நிறுவனத்தின் பொறுப்பை ஏற்பது, தனக்கு கிடைத்த கவுரவம்’ என, தெரிவித்துள்ளார்.

 ‘உலகம் விரைவாக மாறி வருகிறது. இந்த மாற்றம் சவால்களைக் கொண்டு வருகிறது. ஆனால் அவை, ஆர்சலார் மிட்டல் நிறுவனத்துக்கு பல வாய்ப்புகளையும் தருகிறது என்றும் ஆதித்யா மிட்டல் கூறியுள்ளார்.

பக்கம் 40 / 74