Editor's Choice

தை அமாவாசைக்கும் மாசி அமாவாசைக்கும் இடைப்பட்ட காலத்துக்கு மாக மாதம் என்று பெயர். அந்த மாக மாத வளர்பிறை பஞ்சமி நாளே வசந்த பஞ்சமியாகக் கொண்டாடப்படுகிறது. குளிர்காலம் முடிந்து அடுத்து வரவிருக்கும் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக இந்நாள் கொண்டாடப் படுவதால், வசந்த பஞ்சமி என்று இந்நாள் அழைக்கப்படுகிறது. சரஸ்வதி தோன்றிய நாளாக இந்நாள் கருதப்படுவதால், வட மாநிலங்களில் சரஸ்வதி பூஜையாக இந்நாள் கொண்டாப் படுகிறது. சரஸ்வதிக்குப் பிடித்தமான நிறம் மஞ்சள். மஞ்சள் நிறப் பூக்கள் மலரும் காலமாக வசந்த காலம் இருப்பதால், மக்களும் மஞ்சள் நிற ஆடைகள் அணிந்து, மஞ்சள் நிறப் பலகாரங்கள் செய்து இந்நாளைக் கொண்டாடுவார்கள். கண்ணனும் பலராமனும் சாந்தீபனியிடம் குருகுல வாசம் செய்யத் தொடங்கிய நாள் வசந்த பஞ்சமி என்று பாரதத்தின் வடக்குப் பகுதிகளில் கூறப்படுவதால், அப்பகுதிகளில் இந்நாளில் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்த்தல் விசேஷமாகக் கருதப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரத்தில் உள்ள பிரம்மா சரஸ்வதி கோயில், கர்நாடகத்தில் உள்ள உடுப்பி கிருஷ்ணர் கோயில், ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜகந்நாதர் கோயில் ஆகிய கோயில்களில் வசந்த பஞ்சமி ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அடுத்த 40 நாட்களில் வரவிருக்கும் ஹோலிப் பண்டிகையை வரவேற்கும் விழாவாகவும் இந்நாள் கருதப்படுவதால், வசந்த பஞ்சமியன்று வண்ண வண்ணப் பட்டங்களை வானில் பறக்க விட்டு மக்கள் கொண்டாடுவார்கள்.

சுக்ல பஞ்சமி என்று சொல்லப்படும் வசந்த பஞ்சமி நாளில், விரதம் இருந்து அம்பாளைத் தொழுது பிரார்த்தித்தால், வாழ்வில் வசந்தம் நிச்சயம்.இந்த நாளில், காலையில் விரதம் மேற்கொள்ளுங்கள். வீட்டில் விளக்கேற்றி அபிராமி அந்தாதி பாராயணம் செய்யலாம். ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். இவை வாழ்வில் பல உன்னதங்களைப் பெற்றுத் தரும். சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம், கேசரி முதலான நைவேத்தியங்களைப் படைத்து தேவியை உபாஸிக்கலாம். அதேபோல், அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று அம்பாளை வணங்கி வழிபடுங்கள். செவ்வரளி மாலை சார்த்துங்கள். செந்நிற மலர்கள் சூட்டுங்கள். நெய் விளக்கு ஏற்றி வழிபடுங்கள். எலுமிச்சை மாலை சார்த்தி வழிபடுவது இன்னும் வளமும் பலமும் சேர்க்கும். முடிந்தால், அன்றைய நாளில், அம்பாளை வழிபட்டு, இயலாதோருக்கு தயிர்சாதம் வழங்குங்கள். 

Editor's Choice

பாரத நாடு ஆன்மிக பூமி. அதற்கு எடுத்துக்காட்டு ஊர்தோறும் எழுந்தருளும் ஆலயங்கள். நம் முன்னோர்கள் ஊர்தோறும் கோயில்கள் அமைத்து ஆன்மிகம், கலை, கல்வி ஆகியவற்றைப் போற்றி வளர்த்தனர். ஆனால் அவை எல்லாம் பிற்காலத்தில் பராமரிப்பு இன்றிச் சிதிலமடைந்தன. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்து புதுப்பிக்க வேண்டும் என்பது ஆகம விதி. ஆனால் ஓர் ஆலயம் 1,100 ஆண்டுகளாகக் கும்பாபிஷேகம் காணாமலும் புனரமைக்கப்படாமலும் இருந்தது.

நளமகராஜன், ஆதிசேஷன், பரீட்சித்து, குண்டுச் சித்தர் போன்றோரின் முன்வினைத் துயரங்களைத் தீர்த்து சகல நலங்களும் அருளிய ஈசன் காக்கமொழி கார்கோடகபுரீஸ்வரர். இந்த ஆலயத்துக்குச் சென்று கார்கோடகபுரீஸ்வரரை வணங்கினால், ஏழேழ் பிறவிகளிலும் அவர்கள் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் நீங்கிவிடும் என்கிறது தலபுராணம். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த இந்த ஆலயம் பாழ்பட்டுக் கிடக்கிறது. நல்ல உள்ளங்களின் ஒத்துழைப்பாலும் தற்போது ஆலயம் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

காரைக்காலிலிருந்து 5 கி.மீ தொலைவில் இந்த ஆலயம் அமைந்து உள்ளது. நிரவி, ஊழியபத்து, விழிதியூரில் இருந்து வாகன வசதிகள் உள்ளன.

நலமே அருளும் இந்த ஆலயத்தில் ஸ்ரீ கற்பகாம்பாள், பைரவ மூர்த்தி, ஸ்ரீநடராஜர், கார்கோடகன் எனும் நாகன், நவகிரகங்கள் ஆகிய தெய்வச் சந்நிதிகள் உள்ளன. சந்திர புஷ்கரணி தீர்த்தம்; வில்வம் தல விருட்சம். இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வெள்ளி நாக மோதிரத்தை உண்டியலில் செலுத்தினால் ராகு - கேது தோஷம் நீங்கும்; வில்வ மரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக்கொண்டால், சந்தான வரம் கிட்டும்; நாகர் சிலைகளுக்கு மஞ்சள் கயிறு கட்டி வழிபட்டால், கல்யாண வரம் கிடைக்கும்.

எப்போதும் இங்கே 18 விதமான சிவ கணத்தாரும் இங்குவந்து ஈசனிடம் வேண்டிய வண்ணமே இருப்பதால், அவர்களின் வேண்டுதல்களை செவிமடுக்கும் விதமாக, இங்குள்ள நந்திதேவர் தலையை வலப்புறமாகச் சாய்த்தே அமர்ந்துள்ளார். இந்த ஆலயத்தில் நித்ய பிரதோஷம் நடைபெற்று வருவதால் இதில் கலந்துகொண்டு வழிபடுபவரின் பிரார்த்தனைகளும் விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை. மேலும் ஆதிசேஷனும் கார்கோடகனும் தொழுத தலம் என்பதால் இங்கு வந்தாலே நாக தோஷம் நீங்கும். ராகு - கேது இருவருக்கானப் பரிகாரத் தலமாகவும், சனியின் பாதிப்பிலிருந்து விடுபட நளனுக்கு அருள் செய்த தலம் என்பதால், சனி தோஷ நிவர்த்தித் தலமாகவும் இது திகழ்கிறது.

அதுமட்டுமில்லை கார்கோடகன் நளனைத் தீண்டி தண்டனைப் பெற்றதால், இந்த ஊரில் இன்றுவரை எந்த நாகமும் எந்த ஜீவராசியையும் தீண்டுவதில்லை என்று ஆச்சர்யம் தெரிவிக்கிறார்கள் ஊர் மக்கள். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், நாக தோஷ பாதிப்பு கொண்டவர்கள், உறவுகள் - சொத்துக்கள் இழந்தவர்கள் இங்கு வந்து கார்கோடகனுக்கு வெண்பட்டு வஸ்திரம் சாத்தி, மருக்கொழுந்து மொட்டு அல்லது தாழம்பூ சூட்டி வழிபட்டால், எல்லா சிக்கலும் தீர்ந்து நலம் பெறுவார்கள் என்கிறது தலவரலாறு.

 

Editor's Choice

புதிதாகக் கட்டப்படும் கோயில் கோபுர கலசங்களில் தானியங்களை அடைத்து வைக்கும் வழக்கம் இன்றும் தொடர்கிறது.

கோயில் கோபுரத்தின் கலசம் மிகவும் உயரமான இடத்தில் இருப்பதால் அந்த தானியங்கள் மிகவும் பத்திரமாக இருக்கும் என்றும், இயற்கைச் சீற்றங்கள், படையெடுப்பு, பஞ்சம் உள்ளிட்ட காலங்களில் இவை வேளாண்மை செய்ய பயன்படுத்தப்பட்டு, மக்களின் பசிப்பிணியைப் போக்க உதவும் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

இது வரலாற்று ரீதியாக எந்த அளவுக்கு உண்மை, நீண்ட நாட்களாக அதிக வெப்பத்தில் சேமித்து வைக்கப்படும் அந்த தானியங்கள் முளைத்து வளர்வதற்கு அறிவியல் ரீதியாக எந்த அளவுக்கு சாத்தியம் உள்ளது என்று ஆராயப்பட்டுள்ளது.

கோயில் கோபுர கலசங்களில் தானியங்களை அடைத்து வைக்கும் பழக்கம் குறித்து கூறுகிறார் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் ஆ. சிவசுப்பிரமணியன்.

"ஒருவர் இறந்து விட்டால் இறந்த உடலின் அருகே 'நிறை நாழி' (படி நிறைய நெல் வைப்பது) வைக்கும் பழக்கம் இன்றும் பல வேளாண் சமூகங்களிடையே உள்ளது. இது அவர் இறந்த பின்னும் செழிப்புடன் இருக்க வேண்டும் எனும் நோக்கில் வைக்கப்படுவது. திருமண வீடுகளிலும் நெல்லையில் மணமக்கள் தலையில் தூவி வாழ்த்தும் முறை இருந்தது. இது சங்ககால இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மணமக்கள் செழிப்புடன் வாழ வேண்டும் நோக்கத்தில் செய்யப்படுவது. தானியங்கள் தமிழ்ச் சமூகத்தால் செழிப்பின் அடையாளமாக பார்க்கப்பட்டது. மதங்கள் நிறுவன மையம் ஆனபோது சடங்குகள் உருவாக்கப்பட்டன. அதன்போது தெய்வத்துக்கும் செழிப்பை சேர்க்கும் நோக்கத்துடன் கோயில் கோபுரங்களில் தானியங்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கலாம். செழிப்பை குறிக்கும் நோக்கிலேயே இந்த சடங்குகள் பின்பற்றப்பட்டன" என்கிறார் சிவசுப்பிரமணியன்.

பழங்காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள், கோட்டைகள் ஆகியவற்றில் நெற்களஞ்சியங்கள் இருந்தன. இயற்கைச் சீரழிவு, முற்றுகை, பஞ்சம் உள்ளிட்ட காலத்தில் அந்த நெற்களஞ்சியங்களில் இருந்து மக்களுக்கு தானியங்களை கடனாக கொடுத்து இருக்கிறார்கள். இதற்கான கல்வெட்டு ஆதாரங்களும் இருக்கின்றன.

"பழங்காலத்தில் கட்டப்பட்ட பெரும்பாலான கோயில்களில் நெற்களஞ்சியங்கள் இருந்தன. அவற்றின் மதில் சுவர்கள் மிக உயரமாக அமைக்கப்பட்டு இருந்ததற்கான காரணம், எதிரிகளால் முற்றுகையிடப்படும்போது மக்கள் கோயில்களுக்குள் அடைக்கலம் புகுந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும், கோயில்களில் இருக்கும் தானியங்கள் பாதுகாக்கப்படவுமே ஆகும்."

"பெரிய நெல் களஞ்சியங்களை அமைக்கும் பழக்கம் இருந்த காலகட்டத்தில் அவ்வளவு உயரத்தில் வைக்கப்பட்டுள்ள கோபுர கலசங்களில் இருக்கும் தானியங்கள் எந்த அளவுக்கு மக்களுக்கு உதவியாக இருந்திருக்கும், அப்படி இருந்தாலும் வெயில், மழையை மீறி நல்ல நிலையில் இருந்திருக்குமா?" என்று கேள்வியும் எழுகிறது.

விதைகளை சேமித்து வைக்கும்பொழுது நிறைய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக விதையினுள் இருக்கும் ஈரப்பதம் மிக முக்கியமான ஒன்று.

"விதைகளை சேமித்து வைக்கும்பொழுது ஈரப்பதம் 13 சதவீதத்திற்கும் கீழ் இருக்குமாறு பார்த்துக்கொள்வர். ஏனெனில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் மிக விரைவிலேயே பூஞ்சைகளும், பூச்சிகளும் தாக்கும் அபாயம் உள்ளது, அதே சமயத்தில் ஐந்து சதவீதத்துக்கும் கீழ் குறையும் பட்சத்தில் அந்த விதைகள் முளைக்காமல் போவதற்கும் நிறைய வாய்ப்புள்ளது," என்கிறார் புது டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்ட ஆய்வாளராக உள்ள ஜீ.கே. தினேஷ்.

மாதங்கள் செல்ல செல்ல சுற்றுப்புறத்தின் வானிலையை பொருத்து விதையின் ஈரப்பதமும் குறைந்துக் கொண்டே வரும். அதனால் விதையினுள் இருக்கும் ஈரப்பதம் மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதேபோல விதை சேமித்து இருக்கும் இடம் சற்று காற்றோட்டமான இடமாகவும், அதே சமயத்தில் நேரடி வெயில் படாத, வெப்பத்தின் அருகில் இல்லாத இடமாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் காற்றோட்டமில்லாத ஓர் இடத்தில் நாம் விதைகளைச் சேமித்து வைக்கும் பொழுது இந்த விதையிலிருந்து ஆவியாகும் நீராவி, காற்றின் ஈரப்பதத்தை அதிகரித்து பூஞ்சை தாக்குதலை மிக விரைவில் ஏற்படுத்தும், நேரடி வெயிலிலோ அல்லது வெப்பமான பகுதியிலோ சேமிக்கும் போது மிக விரைவில் விதையின் ஈரம் ஆவியாகி மிக விரைவில் முளைக்கும் தன்மையை இழந்துவிடும்," என்கிறார் தினேஷ்.

"பொது மக்கள் நினைப்பது போல கலசத்தினுள்ள விதைகளை எடுத்து வறட்சி காலத்தில் வெள்ளாமை செய்ய வேண்டிய தேவை எல்லாம் இனி இந்த அறிவியல் யுகத்தில் இல்லை, ஏனெனில் ஆண்டு ஒன்றுக்கு பல கோடிகளை செலவு செய்து சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் விதை சேமிப்பு வங்கிகளும், மரபணு வங்கிகளும் இயங்கி வருகின்றன. ஆக, கலசத்திற்கும் விதை சேமிப்புக்கும் எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை, அறிவியல் ஆராய்ச்சி அறிக்கைகளும் இல்லை," என்று கூறுகிறார் தினேஷ்.

Editor's Choice

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காரையாறில் அமைந்துள்ளது சொரிமுத்து அய்யனார் திருக்கோவில். இத்தலத்தில் உள்ள இறைவனின் பெயர் சொரிமுத்து அய்யனார். இறைவியர் புஷ்கலை, பூர்ணகலை. தல விருட்சம் இலுப்பை மரம் ஆகும். இங்கு பாண தீர்த்தம், சாயா தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள் இருக்கின்றன.

இந்த ஆலயமானது, களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய வனப்பகுதிக்குள், பொதிகை மலையில் மரங்கள் சூழ, தென்றல் தாலாட்டு பாட, தாமிரபரணி சலசலத்து ஓட, ஒருமித்து மிளிரும் இயற்கையின் மையத்தே அமைந்துள்ளது. அடர்ந்த காட்டுப்பகுதியான இந்த இடத்தில் கொடிய விலங்குகள் பல வசித்து வந்தாலும், இத்தலத்து பகவானின் அருளால் அவைகள் பக்தர்களுக்கு எந்த வித தொல்லையும் கொடுப்பதில்லை என்பது ஆச்சரியமான வி‌ஷயமாகும்.

தல வரலாறு :-

தென்னாட்டில் பண்டைய காலத்தில் பண்டமாற்று வணிக முறை நடைமுறையில் இருந்தது. தற்போது சொரிமுத்து அய்யனார் சன்னிதி அமைந்து உள்ள இடத்திற்கு அருகில், பண்டமாற்று சந்தை நடைபெற்று வந்தது. அப்போது பொதி மாடுகளின் காலடி பட்டு ஓரிடத்தில் இருந்து ரத்தம் பெருகியது. இதைக் கண்ட வணிகர்கள் அந்த இடத்தை சூழ்ந்து கொண்டு அதிசயித்து பார்த்தனர்.

அந்த சமயத்தில் ஒரு அசரீரி ஒலித்தது. ‘குருதி பெருகும் இடத்தில் இருப்பவர் மகாலிங்க சுவாமி. இனி வரும் காலங்களில் மகாலிங்க சுவாமியை, சொரிமுத்தைய்யன், சங்கிலிமாடன், பிரம்மரட்சகி போன்ற மூர்த்திகள் சூழ ஆலயம் எழுப்பி வழிபட்டு வாருங்கள்’ என்றது அந்தக் குரல். அதன்படியே வணிகர்களும், ஊர் மக்களும் சேர்ந்து கோவில் எழுப்பி, பல சன்னிதிகளை அமைத்து வழிபட்டு வந்தனர்.

இமயமலையில் பரமேஸ்வரனுக்கும், பார்வதிக்கும் திருக் கல்யாணம் நடந்தது. இந்த தெய்வீக காட்சியைக் காண்பதற்காக தேவர்கள், முனிவர்கள் என அனைவரும் வடதிசை நோக்கி பயணப்பட்டனர். இதனால் வடதிசை தாழ்ந்தும், தென்திசை உயர்ந்தும் காணப்பட்டது. உலகை சமநிலை அடையச் செய்வதற்காக, சிவபெருமான் அகத்திய முனிவரை அழைத்தார். ‘அகத்தியனே! நீ தென்திசை நோக்கிச் செல். உன்னால் தான் இந்த உலகை சமநிலை பெறச் செய்ய முடியும்’ என்றார்.

இறைவனின் ஆணைப்படி நடக்க சித்தம் கொண்ட அகத்தியர், தென்திசை நோக்கி பயணித்து பொதிகை மலையை வந்தடைந்தார். அங்கு தற்போது சொரிமுத்து அய்யனார் சன்னிதி அமைந்திருக்கும் இடத்தில் நீராடி, தனது நித்திய காரியங்களை முடித்துக் கொண்டு யோக நிஷ்டையில் அமர்ந்தார். அப்போது ஜோதி ஒன்று அவரது மனக்கண்ணில் தோன்றியது. அதைக் கண்டு அதிசயித்த அகத்தியர், அந்த ஜோதியை யார் என்று அறிய ஞான திருஷ்டியால் பார்த்தார்.

அப்போது சாஸ்தாவானவர், சொரிமுத்து அய்யனாராக, மகாலிங்க பெருமானை பூஜிக்கும் காட்சி அவருக்கு தெரிந்தது. சொரிமுத்து அய்யனாருடன், பேச்சியம்மன், பிரம்மராட்சசி ஆகியோரும் மகாலிங்க சுவாமியை வழிபட்டனர்.

இதுகண்டு அகத்திய முனிவர் ஆனந்தம் அடைந்தார். பின்னர் மலர் தூவி ‘இவ்விடத்தில் எழுந்தருளியிருக்கும் மூர்த்திகளை தரிசித்து வழிபடுவோருக்கு எல்லா இன்னல்களும் நெருப்பிலிட்ட பஞ்சுபோல் ஆக வேண்டும்’ என்றும், ‘பக்தர்கள் தனது மக்களுடன் வழி, வழியாய் எல்லாப்பேறுகளும் பெற்று பெருவாழ்வு வாழ வரம் தர வேண்டும்’ என்றும் வேண்டிக் கொண்டார்.

அப்போது சாஸ்தாவானவர் ‘மலர் சொரிமுத்தய்யனார்’ என்று பெயர் தாங்கி, மகாலிங்கேசுவரர், சங்கிலி பூதத்தார், காத்தவராயர், மேலவாசி பூதத்தார், மேலவாசல் விநாயகர், தட்சிணாமூர்த்தி, கும்பமாமுனி, பெரியசாமி, பேச்சியம்மன், தூண்டில் மாடன், ஜோதிருத்திரன், பட்டவராயர் போன்ற பல தெய்வங்களுடன் ஒருசேர காட்சி கொடுத்து மறைந்தார். அன்று தொடங்கி இத்தலத்தில் மேற்சொன்ன அனைத்து தெய்வங்களுக்கும் சன்னிதி ஏற்படுத்தி வழிபாடு நடைபெற்று வருகிறது.

ஒரு சமயம் இப்பகுதியில் வற்கடம் (12ஆண்டுகளுக்கு மழையின்மை) ஏற்பட்டது.  அப்போது அகத்திய முனிவர் ‘ஆடி அமாவாசையன்று, இந்தத் திருத்தலத்தில் உள்ள சாஸ்தாவுக்கு புனித நீர் சொரிந்து அபிஷேகம் செய்தால், மாதம் மும்மாரி பொழியும்; வறட்சி நீங்கும்’ என்று கூறினார். அதன்படியே புனித நீரை பொற்குடங்களில் நிரப்பி, அபிஷேகம் செய்ய வறட்சி நீங்கியது. மழையை பொழிய வைத்த அய்யனார், ‘சொரிமுத்து அய்யனார்’ என அழைக்கப்பட்டதாகவும் செவி வழிச் செய்திகள் கூறுகின்றன.

முத்துப்பட்டன் என்ற பிராமண இளைஞன், தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த பொம்மக்கா, திம்மக்கா ஆகிய சகோதரிகளை மணம் புரிந்து கொண்டு செருப்பு தைக்கும் தொழிலை செய்து வந்தான். ஒருசமயம் பசுக்களை பாதுகாக்க போரிடும்போது முத்துப்பட்டன் வீரமரணம் அடைந்தான். பட்டவராயன் என்றழைக்கப்பட்ட அவருக்கும், இத்தலத்தில் கோவில் எழுப்பப்பட்டுள்ளது.

அய்யப்பனின் முதல் நிலையாக சொரிமுத்து அய்யனார் விளங்குவதால், கார்த்திகை மாதங் களில் அய்யப்ப பக்தர்கள் ஏராளமானோர் இங்கு வந்து மாலை அணிவிந்து சபரிமலைக்கு செல்கின்றனர். இக்கோவிலில் தினசரி காலை 6 மணி அளவிலும், மாலை 5.30 மணி அளவிலும் பூஜைகள் நடைபெறுகிறது.

நெல்லைக்கு மேற்கே அம்பாசமுத்திரம், பாபநாசம் வழியாக செல்லும் பாதையில் நெல்லையில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஆலயம். நெல்லை மற்றும் செங்கோட்டையில் இருந்து இக்கோவிலுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அகத்திய முனிவரின் யோக நித்திரையில் இறைவன் திருவருள் கூடி காட்சி தந்த நாள் ஆடி அமாவாசை ஆகும். எனவே இத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை அன்று  லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி தங்களது நேர்த்திக் கடன்களை பக்திப்பெருக்கோடு செலுத்தி வருகின்றனர். இத்திருத்தலத்தில் நடைபெறும் ஆடி அமாவாசை விழாவானது நெல்லை மாவட்டத்தில் குறிப்பிடப்பட்ட திருவிழா ஆகும். இதேபோல் தை, மாசி மாத அமாவாசை தினங்களும் விசே‌ஷமான நாட்களாகும். இக்கோவிலுக்கு அருகில் உள்ள பாணதீர்த்த அருவிக்கு பக்தர்கள் சென்று புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு நீத்ததார் கடன் மேற்கொள்வார்கள். இந்த பாணதீர்த்தத்தில் தான் ராமர் தனது தந்தை தசரதனுக்கு திதி செய்தார் என்று ஒரு ஐதீகம் நிலவுகிறது.

மணி விழுங்கி மரம் :-

இத்திருக்கோவில் வளாகத்தில் இலுப்பை மரம் ஒன்று உள்ளது. பக்தர்களின் வேண்டுதலின்படி இந்த மரத்தில் கட்டப்படும் மணிகள் மரத்தின் உள்ளே பதிந்து விடுவதால் இந்த மரம் மணி விழுங்கி மரம் என்று அழைக்கப்படுகிறது. பக்தர்களின் காணிக்கைகளை இறைவன் இதன் மூலம் ஏற்றுக் கொள்வதாக நம்பப்படுகிறது. இம்மரத்திற்கு கீழே சங்கிலிபூதத்தார், மொட்டையர், பாதாள கண்டிகை, கும்பாமணி ஆகிய காவல் தெய்வங்கள் இருக்கின்றன. அருகிலேயே ஒரு விநாயகர் இருக்கிறார். இவருக்கு இருபுறமும் இரண்டு யானைகள் இருப்பது வித்தியாசமான அமைப்பு.

செருப்பு காணிக்கை :-

குல தெய்வம் தெரியாதவர்கள் இவரையே (சொரிமுத்து அய்யனார்) குலதெய்வமாக வழிபடலாம் என்ற சிறப்புடையது இக்கோவில். இத்திருத்தலத்தில் உள்ள பட்டவராயர் சன்னிதியில் பக்தர்கள் செருப்புகளை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். முதல் ஆண்டு இங்கு கட்டப்படும் செருப்புகளை மறு ஆண்டு இக்கோவிலுக்கு வந்து பார்த்தால் அந்த செருப்புகள் தேய்ந்திருப்பதை காணமுடியும். பக்தர்கள் இத்தலத்திற்கு காணிக்கையாக வழங்கும் செருப்புகளை பட்டவராயரே பயன்படுத்துவதாக பக்தர்களிடம் அசைக்க முடியாத நம்பிக்கை நிலவுகிறது.

Editor's Choice

ஒரு வயதுள்ள குழந்தைக்கு சோறுாட்ட எங்கு செல்லலாம் என பெற்றோர் ஆலோசிப்பர். அவர்கள் ஒரேமனதாக செல்ல வேண்டிய திருத்தலம் தஞ்சாவூர் மாவட்டம் திங்களூர் கைலாச நாதர் கோயில்.

ஏனெனில் சந்திர தலமான இங்கு 'மனோகாரகர்' எனப்படும் சந்திரனை தரிசித்தால் உடல்நலத்துடன், மனபலமும் அதிகரிக்கும். அப்பூதியடிகள் என்னும் சிவபக்தர், மனைவி அருள்மொழியுடன் திங்களூரில் வசித்தார். இவர்கள் சிவனடியாரான திருநாவுக்கரசரை நேரில் சந்திக்காவிட்டாலும் அவரை மானசீக குருவாக ஏற்று வாழ்ந்தனர்.

தங்களின் இரு மகன்களுக்கு மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு என்றும் பெயர் வைத்திருந்தனர். திருநாவுக்கரசரின் பெயரில் பள்ளிக்கூடம், தர்மச்சத்திரம், தண்ணீர்ப்பந்தல் நடத்தி வந்தனர்.

ஒருமுறை திருநாவுக்கரசர் இத்தலத்திற்கு வந்திருந்தார். அதைக் கேள்விப்பட்ட அப்பூதியடிகள் தங்களின் வீட்டில் தங்கவும், உணவளிக்கவும் ஏற்பாடு செய்தார். ஒருநாள் மதியம் உணவு தயாரானதும் தன் மகனான மூத்த திருநாவுக்கரசை வாழை இலை அறுத்து வர தோட்டத்திற்கு அனுப்பினார் அப்பூதியடிகள். அங்கு கருநாகம் தீண்டியதால் அவன் இறந்தான். இதை கேள்விப்பட்ட திருநாவுக்கரசர் இறந்த உடலுடன் கைலாசநாதரின் சன்னதிக்கு ஓடி வந்தார்.

சிவன் மீது 'ஒன்று கொலாம்' எனத் தொடங்கும் திங்களூர் பதிகத்தை பாடினார். சிவனருளால் துாங்கி எழுவதைப் போல மூத்த திருநாவுக்கரசு உயிர் பிழைத்தான். திங்கட்கிழமையன்று இந்த பதிகத்தை பாடினால் விஷ பயம் நீங்கும். மனபலம் அதிகரிக்கும்.

குழந்தைக்கு முதல் சோறு ஊட்டுவதை 'அன்னப் பிரசானம்' என்பர். அசுவினி, மிருகசிரீடம், உத்திரம், சுவாதி, திருவோணம், சதயம், ரேவதி நட்சத்திர நாட்களிலும், சந்திர ஹோரை நேரத்திலும், திங்கள் கிழமைகளில் இந்தக் கோயிலில் சோறுாட்டுவதை நடத்துவது சிறப்பு. முதலில் சந்திரன், பசுமாட்டை குழந்தைக்கு காட்டிய பின் வெள்ளிக் கிண்ணத்தில் பால், நெய், தேன் கலந்த சோற்றை ஊட்டுகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு ஜல தேவதையின் அருளும், அவ்ஷதி (மருந்து) தேவதையின் அருளும் கிடைக்கும். ஜலதேவதையின் அருளால் ஜலதோஷம், காய்ச்சல் அண்டாது. அவ்ஷதி (மருந்து) தேவதையின் அருளால் நோய்கள் ஏற்பட்டால் உடனடியாக நீங்கும்.

பிறந்த ஜாதகத்தில் சந்திர திசை, சந்திர புத்தி நடப்பவர்கள் பவுர்ணமியன்று கைலாசநாதருக்கு வில்வமாலை சாத்தி நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் நன்மை அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கவும், நீண்ட ஆயுள் கிடைக்கவும் பிரதோஷ விரதமிருந்து கைலாச நாதரை தரிசிக்கின்றனர். இக்கோயிலில் திருநாவுக்கரசர், அப்பூதியடிகள், அருள்மொழி, மூத்த, இளைய திருநாவுக்கரசர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.

 

Editor's Choice

தை வெள்ளிக்கிழமைகளிலும் ஆடி வெள்ளிக்கிழமைகளிலும் வெக்காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. தை மாத இரண்டாவது வெள்ளிக்கிழமையில் வெக்காளியம்மனை தரிசிப்போம்.

திருச்சி உறையூரில் கோயில் கொண்டிருக்கிறாள் வெக்காளியம்மன். மேற்கூரை இல்லாமல், சந்நிதி கொண்டிருக்கும் வெக்காளியம்மனின் சாந்நித்தியம் உலகம் முழுக்க பரவியிருக்கிறது. செவ்வாய்க்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வெக்காளித்தாயைத் தேடி எங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

தீயசக்திக்கு உக்கிரமாகவும் நல்லோருக்கு கருணைக்கடலாகவும் திகழ்கிறாள் வெக்காளியம்மன். பொன்னையும் பொருளையும் இழந்து தவிப்பவர்கள், தொழிலில் நஷ்டமாகி மருகுபவர்கள், மகனுக்கு நல்ல வேலை கிடைக்கவில்லையே என்று புலம்பி வருந்துபவர்கள், மகளுக்கு இன்னும் நல்ல வரன் கிடைக்கவில்லையே என்று வருந்துபவர்கள் என பலரும் இங்கே உறையூரில் குடிகொண்டிருக்கும் வெக்காளி அம்மனுக்கு வேண்டிக்கொள்கின்றனர்.

இங்கே வெக்காளியம்மன் சந்நிதிக்கு எதிரில் பிரார்த்தனைச் சீட்டு கட்டுகிற வழக்கம் உண்டு. தங்களின் பிரார்த்தனைகளை வெக்காளியம்மன் சந்நிதிக்கு எதிரில் சூலத்தில் கட்டிக்கொண்டு மனமுருக வேண்டிக்கொள்கின்றனர். இந்த பிரார்த்தனைகளை நள்ளிரவில் பூஜையெல்லாம் முடிந்து நடை சார்த்திய பிறகு, வெக்காளித்தாயே பார்த்து ஒவ்வொருவரின் வேண்டுதல்களையும் நிறைவேற்றிக் கொடுக்கிறாள் என்பது ஐதீகம்.

வெக்காளியம்மனை மனதில் நினைத்துக் கொண்டு, மஞ்சள் துணியில் காசு முடிந்து, வீட்டில் இருந்தபடியே வேண்டிக்கொள்வோம். பிறகொரு நாளில், அம்மனைத் தரிசித்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவோம்.

பக்கம் 4 / 15